மோசமான விஷயங்களுக்கு எப்போதும் தயாராக இருங்கள்! 

Thinking girl
Always be prepared for the worst!
Published on

“Always Prepare for the Worst” - சமீப காலமாகவே இந்த வாக்கியம் நான் செய்யும் எல்லா செயல்களுக்கும் முக்கிய காரணமாக உள்ளது. இதற்கு முன்பெல்லாம் வாழ்க்கையில் எந்த ஒரு பிடிப்பும் இல்லாமல் என் இஷ்டத்திற்கு எல்லா விஷயங்களையும் செய்து கொண்டிருந்தேன். ஆனால், இப்போது மோசமான சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு அதன்படி சில மாற்றங்களைச் செய்துள்ளேன்.

நடக்கவிருக்கும் மோசமான விஷயங்களுக்கு உங்களை தயார்படுத்திக்கொள்வது மிகவும் முக்கியமானது. அதற்கு முதலில் எல்லா சூழ்நிலைகளிலும் நீங்கள் தனித்து வாழ்வதற்கான திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். எல்லா விஷயங்களுக்கும் பிறரையே எதிர்பாராமல், நம்மால் செய்ய முடிந்த விஷயங்களை நாமே செய்துகொள்வது, நாம் தனித்து விடப்படும் காலங்களில் உண்மையிலேயே உதவியாக இருக்கும். அது பெருமளவில் பணத்தையும் மிச்சப்படுத்தும்.

இதில் முதலாவதாக நான் சொல்ல விரும்புவது சமையல் செய்வதுதான். தொடக்கத்தில் சமையல் செய்வது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது, ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொண்டு தற்போது நான் அதில் கைதேர்ந்துவிட்டேன். கடந்த மூன்று மாதங்களாக இரு வேளை மட்டுமே சாப்பிடும் பழக்கத்தை பின்பற்றி வருகிறேன். அதில் ஒரு வேளை உணவை நானே சமைத்துக் கொள்கிறேன்.

இது எனக்கு நல்லதொரு உத்வேகத்தையும், வீட்டில் யாரும் இல்லை என்றாலும் நாமே சமைத்து சாப்பிட்டுக் கொள்ளலாம் என்ற தைரியத்தையும் கொடுத்துள்ளது. இதன் மூலமாக நான் தேவையில்லாமல் வெளியே சென்று, ஆரோக்கியமற்ற உணவை சாப்பிட்டு பணத்தை வீணடிப்பது தவிர்க்கப்படும். அதேநேரம், நமக்கு சமைக்கும் திறன் உள்ளது என்பதை நினைத்து நம்மை நாமே பெருமையாகவும் நினைத்துக் கொள்ளலாம்.

இரண்டாவது, எனது குடும்பத்திற்கு எதிர்காலத்தில் மிகவும் மோசமாக ஏதேனும் நடக்கும் என்றால், அது உடல்நலக் குறைவு அல்லது விபத்து சார்ந்த விஷயமாக மட்டுமே இருக்கும். அது குடும்ப பொருளாதாரத்தையும், மனநிலையையும் முற்றிலுமாக சிதைத்துவிடும். இதை சரி செய்வதற்கு, வீட்டில் உள்ள அனைவருக்கும் Health Insurance எடுத்தாகிவிட்டது. ஒருவேளை நான் திடீரென மண்டையை போட்டுவிட்டால் கூட, குடும்பத்தின் நிதி நெருக்கடியை சமாளிக்க Term Insurance ஒன்றும் எடுத்துவிட்டேன். இது ஓரளவுக்கு மோசமான சூழ்நிலையைக் கையாள உதவியாக இருக்கும்.

அடுத்த மோசமான சூழல் என்னவென்றால், எனது வருமானம்தான். தொடக்கத்தில் ஒரு நிறுவனத்தில் வேலை செய்தோம், பின்னர், வேலையை விட்டு யூடியூப் அது இது என்று சுற்றிக் கொண்டிருந்தோம். அதுவெல்லாம் நல்ல அனுபவமாகவே இருந்தது. ஆனால் எது செய்தாலும் வருமானம் என்ற ஒன்று மிகவும் முக்கியம். இப்போது எழுத்துத் துறையில் ஓரளவுக்கு தேவையான வருமானம் கிடைக்கிறது. இருப்பினும் எல்லா விஷயங்களுக்கும் அதை மட்டுமே சார்ந்திருக்க முடியாது. பங்குச்சந்தையில் Diversification என்றொரு வார்த்தை உண்டு. அதாவது ஒரே நிறுவனத்தில் மொத்தத்தையும் முதலீடு செய்யாமல், பணத்தைப் பிரித்து பல துறைகளில் முதலீடு செய்ய வேண்டும்.

இதையும் படியுங்கள்:
பேன் தொல்லை நீங்க வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே நிவாரணம் பெறலாம்!
Thinking girl

எனவே, எழுத்துத் துறையில் இருந்து மட்டுமே வருவாய் ஈட்ட வேண்டும் என்பதை தாண்டி, எனது சொந்த விஷயங்களிலும் கவனம் செலுத்தி அதன் மூலமாக வருவாய் ஈட்ட முயற்சிக்க வேண்டும். ஒருவேளை எதிர்காலத்தில் எழுத்துத்துறை என்னை கைவிட்டாலும், நான் எனது சொந்தத் துறை மூலமாக ஓரளவுக்கு சமாளிக்க முடியும். இவை அனைத்தையும் எனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள வீட்டிலிருந்து பணிபுரிவதையே நான் தேர்ந்தெடுத்து செல்கிறேன்.

இவ்வாறு, நடக்கவிருக்கும் மோசமான சூழ்நிலைகளைக் கையாள்வதற்கு என்னால் முடிந்த விஷயங்களைச் செய்து வருகிறேன். இது எதுபோன்ற விளைவுகளை ஏற்படுத்தும் என்பது தெரியவில்லை. ஆனால், இப்படி செயல்படுவது எனக்கு மிகவும் பிடித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com