

'பொறுமையாக இருப்பதே மிகச்சிறந்த பிரார்த்தனை' என்பது புத்தர் பெருமானின் வாக்கு.
'சோகம் என்பது கோபத்தின் மென்மையான வெளிப்பாடு; கோபம் என்பது சோகத்தின் தீவிரமான வெளிப்பாடு' என்று உளவியலாளர் சிக்மண்ட் பிராய்டு கூறியுள்ளார். 'கோபம் என்னும் அமிலம், அதைப் பயன்படுத்தும் இடத்தை விட, அதைத் தன்னுள் வைத்திருக்கும் பாத்திரத்தையே பெரிதும் அழித்துவிடும்' என்பது கிளென்டலின் கூற்று.
ஒருமுறை, வெளிநாட்டு தத்துவ ஞானி ஒருவர் முல்லா நசுருதீன் வசிக்கும் ஊருக்கு வந்திருந்தார். முல்லாவைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்த அவர், அவருடன் விவாதம் செய்ய விரும்பினார். அதற்காக முல்லாவிடம் அனுமதி பெற்று வரும்படி தன் சீடரை அனுப்பி வைத்தார்.
இதனை முல்லாவும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார். 'மறுநாள் மதியம் 2 மணிக்கு எனது வீட்டில் விவாதம் வைத்துக்கொள்ளலாம்' எனத் தன் குருநாதரிடம் தெரிவிக்கும்படி முல்லா அந்தச் சீடரிடம் கூறினார்.
மறுநாள், தத்துவ ஞானி சரியாக 2 மணிக்கு முல்லாவின் வீட்டிற்கு வந்தபோது, அவரது மனைவி அவரை வரவேற்றார். "முல்லா எங்கே?" எனத் தத்துவ ஞானி கேட்டதற்கு, "அவர் அவசர வேலையாக வெளியே சென்றிருக்கிறார்; சிறிது நேரம் காத்திருங்கள்," என முல்லாவின் மனைவி கூறினார்.
சில மணி நேரங்கள் ஆன பின்பும் முல்லா வராததால் கோபமடைந்த தத்துவ ஞானி, "முட்டாள் கழுதை" என முல்லாவின் வீட்டுச் சுவற்றில் எழுதி வைத்துவிட்டு வேகமாகச் சென்றுவிட்டார்.
தத்துவ ஞானி சென்ற சிறிது நேரத்தில் வீடு திரும்பிய முல்லா, சுவற்றில் எழுதியிருப்பதைப் பார்த்தார். அது யாரென்று மனைவியிடம் விசாரிக்க, மனைவியும் நடந்ததைக் கூறினார். உடனே தத்துவ ஞானி தங்கியிருந்த இடத்திற்கு முல்லா சென்றார். முல்லாவைக் கண்டதும், அவர் சண்டை போடத்தான் வருகிறார் என ஞானி நினைத்தார்.
ஆனால் முல்லாவோ, "தத்துவ ஞானியே! என்னை மன்னிக்க வேண்டும். அவசர வேலையாக வெளியே சென்றுவிட்டேன். என் வீட்டுச் சுவற்றில் உங்களுடைய பெயரை எழுதி வைத்திருந்ததைப் பார்த்ததும், உங்களைச் சந்திக்க ஓடோடி வந்தேன்!" என்று கூறினார்.
மனிதர்களுக்குப் பல நேரங்களில் கோபம் வரும்போது, அது அவர்களை முட்டாளாக்கிவிடுகிறது. "கோபம் இல்லாத வாழ்க்கை சாத்தியமில்லை" என்பதே பலரின் பதிலாக உள்ளது. ஆனால், கோபத்தால் இழந்த உறவுகளையும் துன்பங்களையும் நினைத்தால், "கோபத்தைத் தவிர்க்க வேண்டும்" எனத் தோன்றுவது இயல்புதான்.
மகாகவி பாரதி, 'நெஞ்சு பொறுக்குதில்லையே!' எனப் பாடினார். இயேசு பிரானோ, 'என் தந்தையின் இடத்தை கள்வர் கூடமாக மாற்றாதீர்கள்!' எனப் பொங்கி எழுந்தார்.
அனைவருக்கும் பொதுவான குணமாகக் கோபம் இருந்தாலும், வாழ்க்கையில் அதைக் கையாளத் தெரிந்தவர்களே வெற்றி பெறுகிறார்கள்.