
கோபம் என்பது ஒரு இயல்பான உணர்ச்சிதான் என்றாலும் அதை நம்மால் கட்டுப்படுத்த முடியாவிட்டால் பலவிதமான பிரச்னைகளுக்கு உள்ளாக நேரிடும். உடல் மற்றும் மனரீதியான பிரச்னைகளுக்கு வழி வகுக்கும் கோபத்தை அடக்கி ஆண்டால் வாழ்வில் மகிழ்ச்சியாக வாழ முடியும்.
கோபம் என்பது பலவீனத்தின் வெளிப்பாடு. தன்னை மீறி வரும் கோபம் பலவீனத்தின் உச்சம். இதனை அறியாமல் சிலர் கோபம் வருவதால் தான் ஹீரோ என்றும், பலசாலி என்றும் நினைத்துக் கொள்வதும், கோபம் வரும் இடத்தில்தான் குணம் இருக்கும் என்று சப்பை கட்டு கட்டுவதும் தவறானது. கோபத்தால் நம் இதயத்துடிப்பு அதிகமாகும்; வேகமாக சுவாசிப்போம். சிலர் அதிக கோபத்தில் பற்களை கடிப்பது, கைகளை இறுக பிடிப்பது என்று இருப்பார்கள். இதனால் உடலும், மனமும் வெகுவாக பாதிப்படையும்.
கோபம் என்பது மற்றவர்களுடன் உறவுகளை மோசமாக்கும். குடும்பத்தில் மோதல்களையும், பிரிவுகளையும் உண்டாக்கும். கோபமான நடத்தைகள் சமூக விலகல்களுக்கு வழிவகுக்கும். கோபம் என்னும் குணம் நம்மை பிறரிடமிருந்து ஒதுக்கி வைக்கும். இதனால் தனிமை ஏற்பட்டு மனப்புழுக்கம் உண்டாகும்.
எனவே நேர்மறையான சிந்தனைகள் மற்றும் செயல்களில் கவனம் செலுத்துவதன் மூலம் கோபத்தை குறைக்கலாம். மற்றவர்கள் செய்யும் தவறுகளை மன்னிக்க கற்றுக் கொள்வதும், ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி, தியானம் போன்ற தளர்வு நுட்பங்களை பயிற்சி செய்யவும் பழகிக்கொண்டால் கோபத்தை நம்மால் எளிதில் கையாள முடியும்.
மற்றவர்களிடமிருந்து எதையும் எதிர்பார்க்காத ஒரு மனநிலையை ஏற்படுத்திக் கொண்டால் கோபமோ, ஏமாற்றமோ உண்டாகாது. பொதுவாகவே ஏமாற்றம் அல்லது எதிர்பார்ப்பின் விளைவாகவே கோபம் உண்டாகிறது. இதற்கு நாம் மற்றவர்களின் பார்வையில் இருந்து விஷயங்களை பார்ப்பதும், அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முயற்சிப்பதும் கோபத்தை குறைக்கும். அத்துடன் நமக்கு பிடித்த விஷயங்களில் கவனம் செலுத்துவது மனதை அமைதிப்படுத்த உதவும்.
கோபத்தைத் தூண்டும் சூழலில் இருந்து விலகிச்செல்வது கோபத்தால் ஏற்படும் பின் விளைவுகளை தவிர்க்க உதவும். கோபம் வராமல் இருப்பதற்கு நம் உணர்வுகளை புரிந்து கொண்டு அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொள்ளலாம். கோபத்தை வெளிப்படுத்தும் முன் சில நிமிடங்கள் அமைதியாக இருந்து பின்பு நம்முடைய உணர்வுகளை வெளிப்படுத்துவது கடுமையான சூழலை தவிர்க்க உதவும். கோபத்தை கட்டுக்குள் கொண்டு வர சில நிமிடங்கள் ஒதுக்கினால் போதும்.
'ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு', 'கோபத்தோடு எழுந்தவன் நஷ்டத்தோடு உட்காருவான்', 'கோபத்தில் செய்த வினை(செயல்) வருத்தத்தில் முடியும்' போன்ற பழமொழிகள் கோபத்தால் உண்டாகும் விளைவுகளை கூறுகின்றது. சில நொடி நேர கோபங்கள் பல தலைமுறைகளைத் தாண்டிய உறவையும் அடையாளம் தெரியாமல் அழித்துவிடும் என்பார்கள். எனவே கோபத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்வோம்.
நான் சொல்வது உண்மைதானே நண்பர்களே!