
நீண்ட நெடிய கதைகளைக் கூறும்பொழுது சின்னஞ்சிறிய அடை மொழியாய் உள்ள பழமொழி களையும், சொலவடைகளையும் சொல்லுவதுண்டு. அது அனைவரையும் ஈர்க்கும் வண்ணம் இருக்கும். சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் ஆற்றல் படைத்தது இந்தப் பழமொழிகள்தான். அப்படி மனதிற்கு உற்சாகமூட்டும் உலகப் பழமொழிகள் சிலவற்றைக் காண்போம்.
வழிபாட்டின் கதவுகள் மூடிக்கிடந்த போதிலும் கண்ணீரின் கதவுகள் திறந்திருக்கின்றன.
-ஹீப்ரு பழமொழி
உன்னுடைய பணக்கார நண்பன் உன்னை அழைத்தால் மட்டும் அவனது வீட்டிற்குச் செல்; ஏழை நண்பனிடம் இருந்து அழைப்பை எதிர்பார்க்காமலேயே அவனது வீட்டிற்கு செல்.
- போர்த்கீசியப் பழமொழி
உன்னுடன் சமநிலையில் உள்ளவர்களுடன் நீ கேளிக்கை பரிகாசங்களில் ஈடுபட வேண்டும். அதுவும் ஒரு அளவேதான் இருக்க வேண்டும்.
-வெல்ஷ் பழமொழி
கழுதையை அறிந்து காலைக் குறைத்தான்;. குதிரையை அறிந்து கொம்பைக் குறைத்தான்.
-தமிழ்ப் பழமொழி
பெரியவர்கள் நேர்மையாக நடந்து கொள்ளாவிடின் அவர்களுடைய மக்களும் சந்ததிகளும் போக்கிரிகளாக ஆகிவிடுவார்கள்.
- சீனப் பழமொழி
தம்முடைய தகுதிக்கு அதிகமாக செலவழிப்பவர்கள் தம்முடைய கழுத்தைச் சுற்றிக் கயிற்றை முறுக்கி கொள்கிறார்கள்.
- பிரெஞ்சுப் பழமொழி
தன்னையே தான் புகழ்ந்து கொள்பவன் ஒரு முட்டாள். தன்னையே தான் இகழ்ந்து கொள்பவன் ஒரு பைத்தியக்காரன்.
- டேனிஷ் பழமொழி
ஒரு நாடு சமாதானத்தை விரும்பும் ஆயின் அது எப்பொழுதும் சண்டைக்குத் தயாரான ஆயுத பலத்துடன் இருக்க வேண்டும்.
-லத்தின் பழமொழி
கொழுத்த பணப் பைக்கு நரகத்தின் காவலர்கள் கூட அடிபணிகிறார்கள்.
- ஜப்பானியப் பழமொழி
பணம் பேச ஆரம்பிக்கும் பொழுது நியாயம் மௌனம் காக்கிறது.
- ரஷ்யப் பழமொழி
ஒரு கழுதை கூட ஒரே கல்லில் இரண்டு தடவை முட்டிக் கொள்ளாது.
- டச்சுப் பழமொழி
தங்கத்திற்கு அரசர்கள் கூட தங்களது தொப்பியைக் கழற்றி மரியாதை செய்கின்றனர்.
- ஜெர்மானியப் பழமொழி