
கட்டாயப்படுத்தும் எந்த செயலும் நன்மை தராது. கட்டாயப்படுத்துவது என்பது ஒருவரின் சுதந்திரத்தை மீறி அவர்கள் விரும்பாத ஒன்றை செய்யும்படி கட்டாயப் படுத்துவது. இந்த செயலால் அவர்களுக்கு நம் மீது வெறுப்பு ஏற்படலாம். எந்த விஷயத்திலும் ஒருவரின் விருப்பத்திற்கு ஏற்ப செயல்பட அனுமதிப்பதுதான் சிறந்த பலனைத் தரும். குறிப்பாக குழந்தைகளை கட்டாயப்படுத்தி எதையும் செய்ய வைப்பது அவர்களுக்கு நம் மீது கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தும்.
அவர்களுக்கு ஒழுக்கத்தை கற்பிக்க வேண்டி இருந்தாலோ அல்லது அவர்களுக்கு தெரியாத நன்மை தரக்கூடிய ஒன்றை செய்யும்படி கட்டாயப் படுத்துவதாலோ சில நேரங்களில் நன்மை தரலாம். ஆனால் எதையம் ஒரு தந்திரத்துடன் செய்வதன் மூலம்தான் சிறந்த பலனை பெறமுடியும்.
கட்டாயப்படுத்துவது என்பது தனிமனித சுதந்திரத்தை மீறுவதாக தோன்றுவதுடன், சில சமயம் எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்தும். வெறுப்பு, கோபம், விரக்தி போன்ற எதிர்மறையான உணர்வுகளை உண்டாக்கும். காரணம் அவை அவர்களின் சுவாதீனமான முடிவெடுக்கும் திறனை தடுப்பதாக எண்ணுவதால் உறவுகளை பெருமளவு பாதிக்கலாம்.
எனவே, கட்டாயப்படுத்தி ஒரு செயலை செய்ய வைப்பது, மற்றவர்களின் விருப்பத்திற்கு மாறாக செயல்பட வைப்பது சிறந்த பலனைத் தராது. எதையும் கட்டாயப்படுத்துவது என்பது ஒருவரின் சுதந்திரத்தை பறிப்பதாகும். வேண்டுமானால் அந்த செயலை செய்வதற்கான தூண்டுதலை, ஊக்கப்படுத்துதலை செய்யலாம். ஆனால் எதையும் மனமுவந்து செய்வதுதான் சரியானது.
சில சூழ்நிலைகளில் கட்டாயப்படுத்துவது என்பது நியாயமானதாகக் கூட இருக்கலாம். உதாரணத்திற்கு ஒரு ஆபத்தான சூழ்நிலையில் ஒருவரை காப்பாற்றுவதற்காக கட்டாயப்படுத்துவது என்பது சரியானதாக இருக்கலாம். அது மாதிரியான சூழ்நிலைகளில் வேறு வழி இன்றி சிலவற்றை கட்டாயப்படுத்துவது அவசியமாகிறது. குழந்தைகள் விஷயத்தை எடுத்துக்கொண்டால், குழந்தைகள் விரும்பாத சில விஷயங்களை செய்யவைக்க கட்டாயப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.
வீட்டுப்பாடங்களை செய்வதிலும், பொம்மைகள் மற்றும் துணிகளை பராமரிப்பதிலும், படுக்கைக்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்வது, காலையில் நேரத்தோடு எழுந்து பள்ளிக்கு கிளம்புவது போன்ற பெரும்பாலான விஷயங்களை குழந்தைகள் செய்ய விரும்புவதில்லை. அம்மாதிரியான சமயங்களில் அவர்களுக்கு ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்க வேண்டி கட்டாயப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.
ஆனால் எல்லா விஷயத்திலும் கட்டாயப்படுத்துவது என்பது சரியான பலனைைத் தராது. நம்மை நேசிக்காத ஒருவரை நேசிக்கும்படி கட்டாயப்படுத்துவது சரி வருமா? கணவனோ அல்லது மனைவியோ விரும்பி செய்யும் ஒரு வேலையை கட்டாயப்படுத்தி அந்த வேலையை விட வைப்பது சரியாகுமா?
மேல்படிப்பு படிக்க விரும்பும் மகளையோ, மகனையோ கட்டாயப்படுத்தி படிப்பைத் தொடர முடியாத நிலைக்கு தள்ள முடியுமா? ஒருசெயலை கட்டாயப்படுத்தி செய்ய வைப்பதை விட அர்ப்பணிப்புடன் மனமுவந்து செய்வதுதான் சிறப்பானது. கட்டாயப்படுத்துவது என்பது சரியானது அல்ல. ஒருவரின் சுதந்திரத்தை மதித்து, சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படுவது என்பது மிகவும் அவசியம்.