
ஒரு தனி நபரின் வாழ்க்கையில் எத்தனையோ துன்பங்களும், தோல்விகளும், துயரங்களும், சோதனைகளும் இருக்கும். அவற்றிலிருந்து மீண்டெழுகிறபோது, அவற்றுக்கப்பால் முகங்காட்ட முடிகிறபோதுதான் உலகம் அவரை வியக்கிறது.
ஒரு உன்னத இடத்தை அவருக்கு வழங்கி மகிழ்கிறது. இன்ற உலகக்கோடீஸ்வரப் பட்டியலில் இடம் பிடித்திருப்பவர்களும் அருஞ்சாதனை நிகழ்த்திப் புகழ்பெற்றவர்களும் அப்படி மீண்டு வந்து காட்டியவர்கள்தாம்.
இங்கே 'லாரிகிங்' கைப்பற்றி அவசியம் குறிப்பிட வேண்டும். இவரது வெல்வெட் (Velvet) குரல் வானொலி மூலமும், டி.வி கேபிள் நியூஸ் மூலமும் அமெரிக்காவின் மூலை முடுக்கில் உள்ளவர் களையெல்லாம் கவர்ந்திழுத்திருக்கிறது.
ஆனால், கிங்கின் தனிப்பட்ட வாழ்க்கையில் எத்தனை சோகங்கள் இருக்கிறதென்று அவர்களுக்குத் தெரிந்திருக்காது. சில ஆண்டுகளுக்கு முன்வரை அவர் பெரிய கடன்காரராயிருந்தார். இரண்டுமுறை அவருடையு மணவாழ்க்கை தோல்வியில் முடித்திருக்கிறது. மனிதர் உணர்வு ரீதியாக ரொம்பவே காயப்பட்டிருந்தார். நிதி நிறுவனம் நடத்துகிற ஒருவர் தம்மிடம் கிங் 3000 டாலர்கள் வாங்கி ஏமாற்றிவிட்டதாய் வழக்கு தொடுத்தார். அதன் விளைவாய் கிங்கிற்கு வேலை போயிற்று. அடுத்த மூன்றாண்டுகள் தம்முடைய நண்பர்களின் பராமரிப்பில் அவர் காலம் தள்ளும்படி ஆயிற்று.
பிற்பாடு சக்சஸ் என்ற பத்திரிக்கையில் கிங் இப்படித் குறிப்பிட்டிருக்கிறார்: நான் ரேடியோ, டிவி இண்டர்வியூக்களை கவனிப்பேன். அதில் இன்டர்வ்யூ செய்பவர்களை விட நான் திறமையானவன் என்றுதான் எனக்குத் தோன்றியது. அவர்களை விட என்னால் சிறப்பாகச் செய்ய முடியும் என்று நம்பினேன்.
நம்முடைய குழப்பத்துக்கும் தேக்க நிலைக்கு அடுத்தவர்கள் காரணமில்லை. நாம்தான் அதைச் செய்து கொள்கிறோம். இதனைப் புரிந்துகொண்ட கிங் ஒரு தீர்மானத்திற்கு வந்தார். "நான் மீண்டும் அதைப் பெறுவேன்" என்று தனக்குள் சொல்லிக்கொண்டார்.
அவர் தம்முடைய ஆடம்பர வாழ்க்கை முறையையும், கட்டுப்பாடின்றி செலவு செய்வதையும் நிறுத்திக் கொண்டார். ஒரு நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அதிகாரியாய் வேலையில் சேர்ந்தார். அடுத்து உலகக் கால் ந்துக் கழகத்தில் இருந்து அழைப்பு. ஓராண்டுக்குள் - முன்பு வேலையிலிருந்து அவரை நீக்கிய வானொலி நிறுவனமே மீண்டும் வேலைக்கு வந்து சேரும்படி அழைத்தது. சீக்கிரமே பழைய கடன்களை அடைத்து, நல்ல நிலைக்கு வந்தார் கிங்.
தம்முடைய வாழ்வின் மோசமான நிகழ்வுகளைச் சகித்துக் கொண்டதிலிருந்து, பிரச்னைகளை வெல்வதற்கான விவேகத்தை அவர் பெற்றார். தம்முடைய துன்பங்களிலிருந்து தாம் பெற்ற மன உறுதியைக் கொண்டுதான் அவர் மீண்டும் வந்துகாட்ட முடிந்தது.
ரொம்ப பேருடைய வாழ்வில் திருப்பு முனை என்பது தோல்வியின் வடிவில்தான் வந்திருக்கிறது. தோல்வியை உங்கள் மன உறுதிக்கு வைக்கப்பட்ட சோதனையாய் எண்ணிக் கொள்ளுங்கள். எந்தத் தோல்வியும் நிரந்தரமானதல்ல. தற்காலிகமானதே.