எந்த ஒரு இழப்பையும் வளர்ச்சிக்கான வாய்ப்பாக பார்க்க முடியும். லட்சக்கணக்கான மீன்களை வாரித் தந்தபோது கவனிக்கப்படாத கடல் சுனாமியின்போது சீறியதால் உடனே எதிரியாக பார்க்கப்பட்டது. துன்பங்கள் அனுபவிப்பவர்கள் மத்தியில் அமர்ந்து நாமும் துன்பத்தில் சிக்கி அழுது கொண்டிருக்கத் தேவையில்லை. நோய்வாய்ப் பட்டவர்களை கவனித்து சிகிச்சைதர வேண்டுமானால் அது யாரால் முடியும்? ஆரோக்கியமானவர்களால்தானே. அடுத்தவன் வருத்தமாக இருக்கும்போது நாம் ஆனந்தமாக இருப்பதா என்ற கேள்வி வரும்.
ஆனந்தமாக என்றால் கும்மாளமும் கொண்டாட்டமாக இருப்பது அல்ல. அன்பாயிருப்பது ஆனந்தம். பரிதவிப்பவர்களை பரிவோடு அணைத்துக் கொள்வது ஆனந்தம். ஆனந்தம் என்பது பெறுவதில் மட்டுமல்ல, வழங்குவதிலும் இருக்கிறது. பசியோடு இருக்கும் ஒருவன் தன் உணவை அடுத்தவனுக்குக்கொடுத்தால் அதுவே அவனை மேலும் சக்தியுள்ளவன் ஆக்குகிறது என்றார் புத்தர்.
ஆற்றில் துணிகளைத் துவைத்துக் கொண்டிருந்த வண்ணான் பார்வையில் பளபளப்பான கல் ஒன்று கிடைத்தது. அதை கழுதையின் கழுத்தில் அலங்காரமாகத் தொங்கவிட்டான். துணிகளை விநியோகம் செய்ய ஊருக்குப் போனபோது ஒரு நகை வியாபாரி அந்தக் கல்லை ஒரு ரூபாய்க்கும் கேட்டான். ஆனால் வண்ணான் 5ரூபாய் கேட்டான். பேரம் நடந்தபோது பக்கத்துக் கடைக்காரன் நான் ஆயிரம் ரூபாய் தருகிறேன் எனக்குத்தா என்று வாங்கிக் கொண்டான்.
நகை வியாபாரி வெறுத்துப்போய் சலவைக்காரனிடம் "அட முட்டாளே அது வைரக்கல்லுடா. அது லட்ச ரூபாய்க்கு விலை போகும். அதை ஆயிரத்திற்கு விற்று ஏமாந்து விட்டாயே " என்றான். உடனே அவன்" இருக்கலாம். என்னைப் பொறுத்தவரை அது சாதாரண கல். அதை ஆயிரத்துக்கு விற்றதில் எனக்கு லாபம்தான். அதன் மதிப்பு தெரிந்தும் ஐந்து ரூபாய் கூட கொடுக்க மனமில்லாமல் பேரம் பேசி முட்டாள்தனமாக நீதான் இழந்து விட்டாய்" என்றான்.
மதிப்பிட முடியாத மனிதத்தன்மை உங்களுக்குள் இருப்பதை உணர்ந்திருந்தும், அதை வெளிக்கொணராமல் பேரம் பேசும் வியாபாரியாக நீங்கள்? எந்த இழப்பையும் நம்வளர்ச்சிக்குப் பயன்படுத்துவதுதான் புத்திசாலித்தனம். இயந்திர வாழ்க்கையில் சிக்கி, மரத்துப்போன மனிதத் தன்மையை மீண்டும் துளிர்த்து எழ கிடைத்த சந்தர்ப்பமாக இதை நினையுங்கள்.
இறந்துபோன பல லட்ச முகங்கள் உங்களுக்குத் தெரியாது. ஆனாலும் அவர்களை உங்களுக்கு நெருக்கமானவராக சில நிமிடங்களாவது மனதார நினையுங்கள். அவர்களை இழந்து பரிதவிப்பவர்களை நீங்கள் பார்க்கும் பார்வையில் தானாகக் கருணை வரும். மிகக் குறுகிய காலத்தில் துக்கம் களையப்பட்டு அவர்களுக்கு ஆனந்தம் திரும்பும்.