யாரையும் குறைத்து மதிப்பிடாதீர்கள்!

Don't underestimate anyone!
motivational articlesImage credit - pixabay
Published on

ல்லோருக்கும் ஏதோ ஒரு திறமை இருக்கவே செய்கிறது. திறமை என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையில் சில சந்தர்ப்பங்களில் அவ்வப்போது வெளிப்படும். திறமையை வெளிகாட்டும் சந்தர்ப்பங்கள் தானாகவே அமையும். அதை உணர்ந்து ஆக்கபூர்வமாக செயல்படுபவரே வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார். மற்றவர்களோ தனக்கு வாழ்க்கையில் அதிர்ஷ்டமே இல்லை என்று தமக்குத் தாமே வருத்தப்பட்டு வாழ்க்கையைக் கழிப்பவர்களாக இருக்கிறார்கள்.

இந்த உலகத்தில் திறமை இல்லாதவர் என்று ஒருவரையாவது உங்களால் அடையாளம் காட்ட முடியுமா என்று கேட்டால் முடியாது என்றே தைரியமாகச் சொல்லலாம். ஒருசிலர் மற்றவரைப் பற்றி எப்போதும் குறைத்துப் பேசுபவர்களாகவே இருக்கிறார்கள். “என் அளவுக்கு அவனுக்குத் திறமை இல்லே. அவனுக்கு ஒண்ணுமே தெரியாது” என்று தன்னை உயர்த்திப் பிறரைத் தாழ்த்திப் பேசுபவர்களே நம்மில் அதிகமாக உள்ளனர். இதில் ஒரு விஷயம் என்னவென்றால் அவரைப் பற்றியும் அவருக்கு இருக்கும் திறமைகளைப் பற்றியும் குறைத்து மதிப்பிடுபவர்களுக்கு ஒன்றுமே தெரியாது

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டு “அவனைப்பார் எவ்வளவு சாமர்த்தியமா இருக்கான். அவன் அளவு உனக்குத் திறமை இல்லே. சாமர்த்தியம் இல்லே” என்று தங்கள் குழந்தைகளை மட்டம் தட்டுபவர்களாக இருக்கிறார்கள். பிறருடன் ஒப்பிடும் போதுதான் இத்தகைய தவறான எண்ணங்கள் நமக்குத் தோன்றும்.

சிலர் தங்கள் திறமைகளை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அடக்கமாக இருக்கலாம். சிலர் தங்கள் திறமைகளை எங்கு வெளிப்பட வேண்டுமோ அங்கு மட்டுமே வெளிப்படுத்துபவர்களாக இருக்கலாம். இதை வைத்து அவருக்குத் திறமையே இல்லை என்று நாம் தீர்மானிக்கக் கூடாது.

சில வருடங்களுக்கு முன்னால் ஒரு கூட்டத்தில் கேட்ட ஒரு விஷயம் இப்போது எனக்கு நினைவிற்கு வருகிறது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்.

ஒரு பால்பவுடர் தயாரிக்கும் நிறுவனத்தின் தயாரிப்புகள் ஒரு கட்டத்தில் எதிர்பார்த்த அளவிற்கு அதிகரிக்க வில்லை. பால்பவுடர் விற்பனையை அதிகரிக்க என்ன செய்யலாம் என்று அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் விற்பனைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் ஒன்று கூடி விவாதித்தனர். அவர்கள் பெரிய பெரிய கல்வி நிறுவனங்களில் படித்தவர்கள். மார்க்கெட்டிங் துறையின் ஒட்டு மொத்த புள்ளிவிவரங்களையும் விரல் நுனியில் வைத்திருப்பவர்கள். விற்பனையை அதிகரிக்கச் செய்யும் விவாதத்தில் ஒவ்வொருவரும் ஒரு யோசனையைத் தெரிவித்தார்கள்.

எந்த யோசனையும் புதிதாக இல்லை. அந்த நிறுவனத்தில் பணிபுரியும் நேர் முக உதவியாளரான (Personal Assistant) ஒரு பெண் ஊழியர் அந்த கூட்டத்தில் விவாதிப்பதைக் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் “சார் எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. சொல்லலாமா?” என்று அந்த கூட்டத்திற்குத் தலைமை வகித்த தன் அதிகாரியிடம் அனுமதி கேட்டார். எல்லோருக்கும் திறமை உள்ளது என்று நம்பும் உயரதிகாரியான அவர் அனுமதி அளித்தார். கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் “இவர் என்ன பெரிதாக யோசனை சொல்லிவிடப் போகிறார்” என்று அலட்சியமாக இருந்தார்கள். ஆனால் நேர்முக உதவியாளர் கூறிய யோசனை அனைவரையும் திகைக்க வைத்தது.

இதையும் படியுங்கள்:
குழப்பமான மனநிலையில் சரியான முடிவு எடுப்பது எப்படி?
Don't underestimate anyone!

“சார். எந்த ஒரு அம்மாவும் தன் குழந்தை ஆரோக்கியமா வளரணும்னுதான் நினைப்பாங்க. செலவைப் பற்றிக் கவலைப்படமாட்டாங்க. நம்ம கம்பெனி தயாரிக்கும் பால்பவுடர் டப்பாவுக்குள்ளே பால்பவுடரைப் பயன்படுத்த நாம் இப்ப கொடுக்கற ஸ்பூன் கொஞ்சம் சிறியதா இருக்கு. அந்த ஸ்பூனோட அளவை கொஞ்சம் அதிகப்படுத்தினா பால்பவுடர் சீக்கிரம் தீர்ந்து போகும். விற்பனையும் அதிகரிக்கும்.”

உதவியாளர் சொன்ன யோசனை. சாதாரண யோசனைதான். ஆனால் அபாரமான யோசனை. அனைவரும் அந்த யோசனையை ஏற்றுக் கொண்டார்கள். வியாபாரமும் கணிசமாக அதிகரித்தது.

திறமை என்பது யாரிடம் ஒளிந்திருக்கும் என்பது தெரியாது. சரியான சந்தர்ப்பத்தில் அது வெளிப்படும் என்பதை இந்த சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.

எனவே நண்பர்களே. யாரையும் குறைத்து மதிப்பிடாதீர்கள். நம்மைப் போலவே பிறருக்கும் திறமை இருக்கிறது என்று நம்புங்கள். எல்லோரையும் ஊக்கப்படுத்தும் விதத்தில் பேசப் பழகுங்கள். பிறர் திறமையும் வெளிப்படும். உங்களுக்கும் சமுதாயத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் கிடைக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com