வெற்றியை தக்க வைத்துக் கொள்ள கட்டுப்பாடுகள் அவசியமா? பட்டம் உணர்த்தும் பாடம்.

Are restrictions necessary to maintain success?
Are restrictions necessary to maintain success?
Published on

பொதுவாகவே மனிதர்களாகிய நமக்கு வெற்றியை நோக்கி ஓடும் போது இருக்கும் நிதானமும் பொறுமையும் பெரும்பாலும் அந்த வெற்றியை அடைந்த பின்பு இருப்பதில்லை. வெற்றி என்பது மனதை மகிழ்விக்க கூடிய ஒரு செயலாக இருந்தாலும் அந்த வெற்றிக்கு பின் பல நேரங்களில் நாம் சில கட்டுப்பாடுகளையும் நிதானங்களையும் இழந்து விடுகிறோம் என்பதை நம்மால் மறுத்து விட முடியாது. இலக்குகளை அடைவதை காட்டிலும் நாம் அடைந்த அந்த இலக்குகளை தக்க வைத்துக் கொள்வது தான் இன்றைய காலகட்டத்தில் பெரும் சவாலாக உள்ளது. 

போட்டிகள் நிறைந்த உலகில் வெற்றிக்கு பின்னும் சில கட்டுப்பாடுகளை வைத்துக் கொள்வதன் மூலமாகவே  அந்த வெற்றியை நம்மால் தக்க வைத்துக் கொள்ள முடியும். கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க தவறினால் நாம் அடைந்த வெற்றிகளானது நொடி பொழுதில் கூட நம்மிடையே ஒரு வெற்றிடத்தை உருவாக்கி விட்டு சென்றுவிடும்.

இதோ இந்த பள்ளிச் சிறுவனுக்கு நிகழ்ந்ததைப் போல! 

ஐந்து வயது நிரம்பிய பள்ளிச் சிறுவன் ஒருவன் கோடை விடுமுறையை கழிப்பதற்காக தன்னுடைய தாத்தா, பாட்டி இருக்கும் கிராமத்திற்கு சென்றான். பெரும்பாலான நேரங்களில் பள்ளி விட்டால் வீடு, வீடு விட்டால் பள்ளி, அதையும் தாண்டினால் டிவி,மொபைல் என பொழுதுகள் கழிந்த அந்த சிறுவனுக்கு கிராமத்து சூழல் மிகவும் ரம்மியமாக காட்சி அளித்தது. பார்ப்பதற்கு நிறைய இடங்களும், குறைவான மனிதர்களும் நிறைந்த கிராமத்து வாழ்க்கை அந்தச் சிறுவனை புதியதோர் உலகத்திற்கு அழைத்துச் சென்றிருந்ததை போன்ற மனநிலையை ஏற்படுத்தியது. கிராமத்தில் இருக்கும் ஆடு, மாடு, கோழி,  விவசாயம், கிராமத்து விளையாட்டுக்கள் என ஒவ்வொன்றையும் அச்சிறுவன்  மகிழ்ச்சியாக அனுபவித்து வந்தான்.

இப்படியே பொழுதுகள் நகர்ந்து கொண்டிருக்கும்போது ஒரு நாள் அச்சிறுவனும் அவனுடைய தாத்தாவும் வீட்டில் பட்டம் ஒன்று இருப்பதை கண்டனர். அதைப் பார்த்தவுடன்  சிறுவனுக்கு பட்டம் விட வேண்டும் என்று மிகுந்த ஆசையாக இருந்தது. தாத்தாவும் அதற்கு சம்மதிக்கவே இருவரும் பட்டம் விடுவதற்காக ஒரு மைதானத்துக்கு சென்றனர். தாத்தா கையில் நூலை பிடித்துக் கொள்ள, சிறுவன்  மெதுவாக பட்டத்தை வானை நோக்கி பறக்கவிட ஆரம்பித்தான். நல்ல காற்று அடிக்கவே பட்டமானது மெல்ல மெல்ல பறந்து உயரே சென்றது. சிறுவனின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

பட்டத்தை இன்னும் உயர உயர பறக்க விட வேண்டும் என்ற எண்ணம் சிறுவனுக்கு வந்தது. அதனால் அவனுடைய தாத்தாவை நூலை அதிகமாக விடச் சொல்லி நச்சரிக்க ஆரம்பித்தான். அவன் தாத்தாவோ நூலை அதிகமாக விட்டால் பட்டமானது காற்றின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் அறுந்துவிடும். அதனால் மிக வேகமாக நூலை விடக்கூடாது என்று கூறினார். ஆனால் சிறுவனோ அவன் தாத்தா கூறியதை காது கொடுத்து கேட்கவே இல்லை. பட்டத்தை இன்னும் மேலே உயர்த்துவதிலே அச்சிறுவன் குறியாக இருந்தான்.

சிறுவனின் நச்சரிப்பு தாங்காமல் தாத்தா நூலை விட்டார். பட்டமானது மிக உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. திடீரென்று காற்று அதிகமாக வீசவே, காற்றின் வேகத்துக்கு தாக்கு பிடிக்க முடியாமல் அருகில் உள்ள மரக்கிளை ஒன்றில் மோதி  பட்டம் அறுந்து போனது. சிறுவனுக்கு அழுகை தாங்க முடியவில்லை. அவனது தாத்தா அவனை தேற்றி எவ்வளவோ சமாதானம் செய்தார். 

இதையும் படியுங்கள்:
முருங்கை பிசின் ஒரு கழிவுப் பொருளா? அதன் நன்மைகள் பற்றி தெரியுமா?
Are restrictions necessary to maintain success?

அச்சிறுவன் அவனது தாத்தாவிடம், "ஏன் தாத்தா பட்டம் பறந்து போச்சு?" என்று கேட்டான்.

"அந்தப் பட்டம் சுதந்திரமாக பறக்க வேண்டும் என்றால் அதன் பிடி நம்மிடம் இருக்க வேண்டும். கட்டுப்பாடுகள் இல்லாத எந்த ஒரு சுதந்திரமும் அதன் வெற்றியை தக்க வைத்துக் கொள்ள முடியாது. அந்தப் பட்டம் தொடர்ந்து பறக்க வேண்டும் என்றால்  அதனை கட்டுப்படுத்தும் சக்தி நம்மிடம் இருக்க வேண்டும். நாம் சில கட்டுப்பாடுகளை சரியாக கையாளாததால் பட்டம்  மரக்கிளையில் மோதி அறுந்து விட்டது," என்று கூறினார் அச்சிறுவனின் தாத்தா.

அதைக் கேட்ட சிறுவன் "சரி தாத்தா, நான் புரிந்து கொண்டேன். இனிமேல் நீங்கள் கூறியது போலவே நடந்து கொள்கிறேன்." என்று  கூறினான். 

எந்த ஒரு மனிதனும் வெற்றியை  அடைவது மிகக் கடினமான காரியம் என்றாலும் கூட, அந்த வெற்றியை தக்க வைத்துக் கொள்வது அதைவிட கடினம். எனவே நம்முடைய வெற்றிகளை தக்க வைத்துக் கொள்ள  நாம் சில கட்டுப்பாடுகளை நமக்குள் ஏற்படுத்திக் கொள்ளத்தான் வேண்டும். இந்த உலகில் கட்டுப்பாடு இல்லாத சுதந்திரம் என்று எதுவும் இல்லை. எல்லாவிதமான சுதந்திரத்துக்குள்ளும் சில கட்டுப்பாடுகள் இருக்கத்தான் செய்கின்றன (Freedom within Discipline). அதை நாம் சரியாக புரிந்து கொண்டால்  நம்முடைய வாழ்க்கையை வளமாக வாழ முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com