இன்றைய காலக்கட்டத்தில் நிறைய பேர் தனக்கு பிரச்னை வரும் பொழுது அதை எப்படி கையாள்வது என்று யோசிக்காமல், அதை அடுத்தவர்களிடம் சொல்லி புலம்புவதை ஒரு வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இப்படி செய்வது சொல்லும் நபருக்கும் சரி, அதை கேட்கும் நபருக்கும் சரி எந்த பயனையும் கொடுப்பதில்லை. நீங்களும் இப்படி புலம்புபவராக இருந்தால், இந்தக் கதை உங்களுக்குத்தான்.
ஒரு ஊரில் ஒரு குட்டி பையனும், அவனுடைய அம்மாவும் வாழ்ந்து வந்தார்கள். ஒருநாள் அந்த குட்டி பையனுடைய அம்மா அந்த பையனை அழைத்து ஒரு வேலையாக வெளியில் போறேன். நான் வருவதற்கு இரவு ஆகிவிடும். அதனால் எங்கும் போகாமல் வீட்டை பூட்டிக் கொண்டு இருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு, அந்த பையனை வீட்டிலேயே தனியாக விட்டு விட்டு செல்கிறார்.
அந்த பையனும் வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கும் போது தெரியாமல் தன்னுடைய கையை கதவில் நசுக்கிக் கொள்கிறான். அந்த குட்டி யையனால் வலியை தாங்க முடியவில்லை. இருந்தாலும் கொஞ்சம் கூட அழாமல் வலியை பொறுத்துக் கொண்டிருந்தான்.
அவனுடைய அம்மாவும் வீட்டிற்கு வருவதற்கு ரொம்ப நேரம் ஆகிவிட்டது. அந்த குட்டி பையன் அவனுடைய அம்மாவை பார்த்த பிறகு கதறி அழ ஆரம்பித்தான். அந்த அம்மாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. ‘என்ன ஆச்சு? ஏன் அழுகிறாய்?’ என்று கேட்கும்போது அந்த குட்டி பையன் நடந்த எல்லா விஷயத்தையும் சொல்றான். அதற்கு அம்மா, ‘இவ்வளவு நேரம் அழாமல் ஏன் என்னை பார்த்ததும் அழுகிறாய்?’ என்று கேட்கிறார்.
அதற்கு அந்த சின்ன பையனோ, ‘அப்போ நான் அழறதை பார்க்க யாருமேயில்லை. ஆனால் இப்போது உங்களை பார்த்ததும் அழுகை வந்துவிட்டது’ என்று சொன்னான்.
இதே மாதிரிதான் நமக்கு ஆறுதல் சொல்ல ஒரு கூட்டம் இருக்கும் வரை நமக்கு அது பிரச்னை, இது பிரச்னைன்னு புலம்பிக்கிட்டேதான் இருப்போம். ஆனால் உண்மை என்னவென்றால், நமக்கு அக்கரை செலுத்த ஆளேயில்லை என்றாலும் நம்மால் அந்த பிரச்னையை சமாளிக்க முடியும்.
எனவே, இனி பிரச்னையை அடுத்தவரிடம் சொல்லி புலம்புவதை நிறுத்திவிட்டு, அதை எப்படி எதிர்க்கொள்ளலாம் என்று யோசித்தால் அதற்கான சரியான தீர்வு கிடைக்கும். முயற்சித்துப் பாருங்களேன்.