இன்றைய காலக்கட்டத்தில் ‘சேமிப்பு’ என்பதை நம்மில் பலபேர் செய்வதே கிடையாது. நாம் சம்பாதிக்கும் பணத்தை அன்றைக்கே செலவு செய்துவிட்டால் போதும் என்று நினைக்கிறார்கள். ஆனால் சிறிய சேமிப்புக்கூட எப்படி பெரிதும் நம் வாழ்வில் இக்கட்டான சூழலில் கைக்கொடுக்கும் என்பதை புரிந்துக்கொள்வதில்லை. அதைப்பற்றி தான் தெளிவாக இந்த பதிவில் காண உள்ளோம்.
ஒரு கிராமத்தில் ஒரு சிறுவன் பத்தாவது படித்து வருகிறான். அவன் ஸ்கூல் சென்றுவிட்டு வரும் வழியில் இரண்டு இட்லி கடைகள் இருக்கும். இரண்டு கடைகளிலும் அன்றைக்கு எத்தனை பேர் வந்தார்கள், எத்தனை இட்லி விற்றது, எப்படி வியாபாரம் நடந்தது போன்ற சின்ன சின்ன விஷயங்களை கூர்ந்து நோக்குவதை வாடிக்கையாக வைத்திருந்தான்.
எதிர்ப்பாராத விதமாக அந்த சிறுவனுடைய அப்பாவிற்கு வெளியூரில் வேலைமாற்றம் செய்யப்பட்டது. அதனால் அந்த ஊரை காலி செய்துவிட்டு போக வேண்டிய நிலை அந்த சிறுவனுக்கு வந்தது. அவனும் சொந்த ஊரை விட்டு காலி செய்து வேறு ஊருக்கு சென்று விடுகிறான். பிறகு ஆறு வருடம் கழித்து திருவிழாவிற்காக சொந்த ஊர் வருகிறான் அந்த சிறுவன்.
அவன் படித்த ஸ்கூலை ஒருமுறை பார்த்துவிட்டு வரலாம் என்று போன அந்த சிறுவனுக்கு அங்கே பெரிய அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. அவனுடைய ஸ்கூல் அருகில் இருந்த இட்லி கடையில் ஒரு கடை நன்றாக வளர்ந்து ஹோட்டலாக மாறியிருந்தது. அதுவே இன்னோரு கடையோ அவன் ஆறு வருடத்திற்கு முன் பார்த்தது போலவே அதே தள்ளுவண்டியில் இருந்தது.
முதலில் அந்த சிறுவன் தள்ளுவண்டி வைத்திருப்பவரிடம் சென்று, ‘நீங்கள் இன்னும் வளராமல் இருக்க என்ன காரணம்?’ என்று கேட்கும் போது அவர் சொன்னது, ‘எனக்கு என்னதான் தினமும் வருமானம் வந்தாலும் நான் அந்த பணத்தை சேமிக்காமல் அன்றைக்கே செலவு செய்துவிடுவேன். அதனால்தான் நான் இன்னும் வளராமலேயே இருக்கிறேன்’ என்று கூறினார்.
இப்போது அந்த சிறுவன் அந்த ஹோட்டல் ஓனரிடம் அவர் வளர்ந்ததற்கான காரணத்தை கேட்கிறான். அதற்கு அவரோ, ‘எனக்கு வருமானம் கம்மியாக இருந்தாலும், தினமும் சேமிப்பு என்ற ஒரு விஷயம் என் வாழ்க்கையில் இருந்தது. இன்றைக்கு என்னுடைய வெற்றிக்கு அந்த சேமிப்பும் ஒரு மிக முக்கியமான காரணம்’ என்று கூறினார்.
திருவிழாவை பார்ப்பதற்காக சொந்த ஊருக்கு வந்த அந்த சிறுவனுக்கு சேமிப்பை பற்றி மிக முக்கியமான வாழ்க்கை பாடம் கிடைத்தது. நீங்களும் சேமிப்பின் முக்கியத்துவத்தை புரிந்துக்கொண்டீர்கள் அல்லவா? அப்படியென்றால் இன்றிலிருந்தே சேமிப்பை உங்கள் வாழ்க்கையில் ஒரு பழக்கமாக ஆக்கிக்கொள்ளுங்கள்.