"The greatest mistake you can make in life is to continually be afraid you will make one. வாழ்க்கையின் மிகப்பெரிய தவறே அப்படி ஒன்றைச் செய்து விடுவோமோ என்று தொடர்ந்து அச்சப்படுவதுதான்."-- Elbert Hubbard.
இரு நண்பர்கள் பள்ளிக்கூடத்தில் இருந்து ஒன்றாகவே வளர்ந்தவர்கள். முதல் ஒருவர் எப்போதும் எதை செய்வதற்கும் அச்சப்பட்டு தான் செய்வது சரியாக வருமா வராதா என்ற எண்ணத்திலேயே இருப்பவர். இன்னொருவரோ எதையுமே துணிந்து செய்வதில் வல்லவர். "ரிஸ்க் எடுப்பது தனக்கு ரஸ்க் சாப்பிடுவது போல" என்று சொல்லி மகிழ்பவர்.
உதாரணத்திற்கு இவர்கள் சிறுவர்களாக இருந்தபோது எதிரில் வந்த ஒரு பாம்பை பார்த்து முன்னவர் பயந்து போய் நிற்க இன்னொருவரோ பாய்ந்து போய் அதை துரத்தினார். கல்லூரியில் நிகழ்ந்த ஒரு அநியாயத்தை தட்டிக் கேட்க முன்னவர் பயப்பட பின்னவர் அதிரடியாய் களத்தில் இறங்கி அந்த கல்லூரிக்கே ஹீரோ ஆனார்." என்ன நடந்தாலும் பரவாயில்லை இறங்கித்தான் பார்ப்போம். வா" என்று தன் நண்பனுக்கு இவர் எவ்வளவோ அறிவுறுத்தியும் அவரால் துணிச்சலாக எந்த காரியத்திலும் இறங்க முடியவில்லை.
கல்லூரி படிப்பு முடிந்தது. இருவருமே வேலை தேடி அலைந்தனர். ஒரு கட்டத்தில் பின்னவர் தன் தந்தையின் தொழிலான மளிகை கடையில் போய் உட்கார்ந்து கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். அங்கு அவரைப் பார்த்தவர்கள் பல வித விமர்சனங்களை முன் வைத்தனர். இன்ஜினியராக பட்டப்படிப்பு படித்துவிட்டு மளிகை கடையில் பொட்டலம் கட்டுவதுதான் வேலையா என்று கிண்டல் அடித்தனர்.
அதைக் கண்டு கொள்ளாமல் துணிச்சலாக தந்தையுடன் மளிகை கடையில் சாமான்களை வாங்குவதில் ஆர்வம் காட்டினார் அவர். இரண்டே வருடங்கள்தான் பத்துக்கு எட்டு அறையில் இருந்த மளிகை கடை பத்து அறைகள் கொண்ட கட்டிடமாக மாறியது. காரணம் அந்த இளைஞரின் அச்சமற்ற ஆர்வமும் தொழிலை கற்றுக் கொண்ட வேகமும்தான். "தவறு செய்து விடுவோமோ" என்று எண்ணி இருந்தால் அந்த இளைஞரால் இந்த தொழிலில் சாதித்திருக்க முடியாது.
இவருடைய நண்பரோ இன்னும் வேலை தேடிக் கொண்டே இருக்கிறார். காரணம் புதியதாக எதிலும் இறங்குவதற்கு தயக்கம் பயம். இவரும் பல்வேறு விமர்சனங்களை சந்திக்கிறார். "படித்துவிட்டு சும்மாவே இருக்கிறான் பார் ஒரு வேலையும் தெரியவில்லை துப்பில்லாத இளைஞன்" என்றெல்லாம் பேசுகிறார்கள்.
இந்த உலகம் நாம் எப்படி இருந்தாலும் விமர்சனங்களை முன் வைக்கத்தான் போகிறது. நாம் செய்வதில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டி நம்மை புண்படுத்தத்தான் போகிறது. ஆனால் நம் அனுமதி இன்றி நம் தவறுகள் நிகழாது. அப்படியே நிகழ்ந்தாலும் அந்த தவறுகள் நமக்கு அனுபவ பாடங்களாக இருக்குமே தவிர தோல்விகளாக மாறாது. இதை நன்றாக புரிந்துகொண்டு வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான வழிகளில் இறங்கி தவறு நடந்து விடுமோ என்ற அச்சத்தை விளக்கி வெற்றி இலக்கை நோக்கி கவனமுடன் ரிஸ்க் எடுப்போம்.