
நீங்கள் எதையாவது புதுமையாகச் செய்தால், அதை இந்த உலகம் உடனே ஏற்றுக்கொள்ளாது. பலவகையில் அதை விமர்சனம் செய்யும். இதைக்கண்டு கவலைப்பட்டால் நீங்கள் சாதிக்க முடியாது. பெரும்பாலான விஞ்ஞானிகள் இப்படிப் பல விமர்சனங்களுக்கு ஆளாகி இருக்கிறார்கள். ஏனெனில் புதுமைப் படைப்பில் எல்லோருக்குமே ஒரு சந்தேகப் பார்வை இருக்கத்தான் செய்யும்.
பெரிய பெரிய படைப்பாளிகளெல்லாம், ஆரம்பத்தில் பிறர் விமர்சனத்திற்கும் கேலிக்கும் ஆளாகி இருக்கிறார்கள். பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஸ்கர் சினிமா உலகத்தில் பல இசையமைப்பாளர்களிடம் சென்று வாய்ப்பு கேட்டார். அவர்களில் ஒருவர் லதாவைப் பார்த்து "இந்த எலி குரலை வைத்துக் கொண்டு, சினிமா உலகத்தில் எப்படி நுழைய முடியும்” என்கிற முறையில் பலவாறாக கேலி பேசி திருப்பி அனுப்பிவிட்டார்.
இன்று உலகத்திலேயே அதிக பாடல்களைப் பாடிய இசைக்குயில் அவர்தான். பிறரது விமர்சனத்திற்கும். அவமதிப்புக்கும் யார் ஒருவர் ஆனாகிறாரோ அவரிடம் ஏதோ புதுமை இருக்கிறது என்று அர்த்தம். அப்பொழுது அவர் தன் ஊக்கத்தைக் கைவிடாது கேலி செய்தவர்கள் வெட்கப்படும்படியாக செய்யவேண்டும். மேலும் மேலும் முயற்சி செய்து சாதனை படைக்க வேண்டும் தளர்த்து விடக்கூடாது. அதை கைவிடவும் கூடாது.
சாதனையாளர்கள் பலபேர்களின் கதையில், இப்படி ஏகப்பட்ட அவமானங்கள்' காணப்படும். இதற்கு எவ்வளவோ உதாரணங்கள் சொல்லலாம்.
ஆப்ரஹாம் லிங்கனை விடவா ஒருவர் அவமானத்துக்கும்.. தோல்விக்கும் உள்ளாவார்? என்ன அற்புதமான ஊக்கம் பெற்ற மனிதர்? என்ன பிடிவதம்? நீங்கள் உங்கள் இலக்கை அடைய வெற்றிபெற ஆப்ரஹாம் லிங்களின் வாழ்க்கை ஒன்றே போதும். அதைப்போல தம் தேசத்தின் தந்தை என போற்றப்படும் மகாத்மா காந்தி அவர்கள். இவர்களெல்லாம் உதாரண புருஷர்கள் இல்லை அவதாரங்கள், இப்படி உதாரணங்களுக்குப் பஞ்சமில்லை.
பிறகு ஏன் எல்லோராலும் அவர்கள் பெற்ற வெற்றியை அடைய முடியவில்லை. பிறர் தன்னை ஏளனமாக விமர்சனம் செய்வார்கள் என்ற தயக்கமும் பயமும்தான் இருக்கும்!
ஆகவே உங்களுக்கு எது சரி என்று தோன்றுகிறதோ, அதைத் தைரியமாகச் செய்யுங்கள். பிறகுடைய விமர்சனத்தைக் கண்டு கலங்காதீர்கள். அதற்காக எப்பொழுதும் ஏங்காதீர்கள். அப்படி செய்தால், உங்கள் முன்னேற்றம் நிச்சயம் தடைப்படும்.