
‘கோபம்’ என்பது நம்மை அழிப்பதோடு மட்டுமில்லாமல் நம்மை சுற்றியுள்ள நல்ல உறவுகளையும் அழித்துவிடும். எனவே, கோபம் வரும்பொழுது சற்று நிறுத்தி நிதானமாக அதை கையாளவேண்டியது மிகவும் அவசியமாகும். இதைப் புரிந்துக்கொள்ள ஒரு குட்டி கதையை காண்போம்.
ஒருநாள் அப்பா தன் பையனை அழைத்து, ‘இப்போதெல்லாம் நீ அதிகமாக கோபப்படுவதை பார்க்கிறேன். இனிமேல் உனக்கு கோபம் வரும் போதெல்லாம் நம் வீட்டின் வாசலில் இருக்கும் சுவரில் ஒரு ஆணியை அடிக்கவேண்டும்’ என்று கூறுகிறார்.
அதற்கு பையனும் சரி என்று ஒப்புக்கொள்கிறான். அந்த பையனும் கோபம் வரும்போதெல்லாம், அந்த சுவற்றில் ஒரு ஆணியை அடிக்கிறான். இப்படியே போக அவன் அடிக்கும் ஆணிகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துக்கொண்டே வந்தது. தற்போது அந்த பையன் கோபப்பட வேண்டிய அவசியமே வராதவனாய் சாந்தமாக மாறிவிட்டான்.
இதை அப்பாவிடம் வந்து சொல்கிறான், ‘அப்பா! இப்போதெல்லாம் எனக்கு கோபமே வருவதில்லை’ என்று சொல்கிறான். அதற்கு அப்பா சொல்கிறார், ‘அப்படியா! நல்லது. அப்படியென்றால் இன்றிலிருந்து உனக்கு கோபம் வராதபோதெல்லாம் ஒவ்வொரு ஆணியாக சுவரில் இருந்து எடுத்துவிடு’ என்று கூறுகிறார். இப்படியே போக ஒருநாள் எல்லா ஆணிகளையும் சுவற்றில் இருந்து எடுத்துவிட்டு அப்பாவிடம் வந்து சொல்கிறான்.
இப்போது அப்பா சொல்கிறார், ‘அந்த சுவரைப்போய் பார்! நீ ஆணி அடிப்பதற்கு முன்னாடி இருந்த சுவர் இப்போது இருக்காது. அதுப்போலதான் நீ கோபத்தாலும், வார்த்தையாலும் குத்துகிற மனிதர்கள் இப்போது உன்னுடன் இருக்கமாட்டார்கள். வார்த்தையை விடுவதற்கு முன்போ கோபப்படுவதற்கு முன்போ ஒருமுறை யோசித்து எதுவாக இருந்தாலும் செய்ய வேண்டும்’ என்று கூறினார்.
இந்தக் கதையில் வந்ததுப்போல, கோபத்தால் நாம் எதையும் சாதிக்க முடியாது. அதற்கு பதில் அன்பை வெளிப்படுத்துங்கள். நாமும் மகிழ்ச்சியாக இருக்கலாம், நம்மை சுற்றியுள்ளவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளலாம். இதை தெளிவாக புரிந்துக்கொண்டால் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் இருக்கும். முயற்சித்துப் பாருங்கள்.