
நாம் மற்றவர்களிடம் பழகுவதற்கு அவர்களின் தகுதி, பணம், அந்தஸ்து போன்றவற்றை காரணமாக வைத்துப் பழகாமல் அவர்களின் குணத்திற்காகவும், அன்பைப் பரிமாறவும் பழகுவது மிகவும் அவசியமாகும். ஒருவரின் தகுதியை வைத்து அவருக்கு மரியாதை கொடுப்பதை விடுத்து எல்லோரிடமும் மரியாதையாக நடந்துக் கொள்வது நம்மை வாழ்வில் மேன்மையாக்கும். இதைப் புரிந்துக்கொள்ள ஒரு குட்டி கதையை பார்ப்போம்.
ஒரு தோல் பதப்படுத்தும் தொழிற்சாலையில் பணிபுரியும் ஒருவர் மாலை பணிமுடியும் சமயத்தில் தோல் பதப்படுத்தும் குளிரும் அறைக்கு சென்று வேலையில் இருந்த சமயத்தில் எதிர்ப்பாராத விதமாக தானியங்கி கதவு மூடிக்கொண்டது.
அவர் பெரும் கூச்சலிட்டு உதவிக்கேட்டும் அவருடைய சத்தம் வெளியில் யாருக்கும் கேட்கவில்லை. அங்கே வேலை செய்துக்கொண்டிருந்த பெரும்பாலானோர் பணி முடிந்து வீட்டுக்கு போய்விட்டனர். இன்னும் சற்று நேரத்தில் குளிரில் உறைந்து இறக்கப் போகிறோம் என்று எண்ணி கவலையில் இருந்தப்போது, கதவு திறக்கும் சத்தம் கேட்டது.
மீண்டும் உயிர் வந்தவராய் வெளியிலே வந்துப்பார்த்தார். அங்கே தொழிற்சாலையின் காவலாளி நின்றுக் கொண்டிருந்தார். மகிழ்ச்சியில் அவரை கட்டித்தழுவி விட்டு, ' நான் உள்ளேயிருப்பது உங்களுக்கு எப்படி தெரியும்?' என ஆவலாகக் கேட்டார். அதற்கு அந்த காவலாளி சொன்னார்,'சார்! நான் இந்த தொழிற்சாலையில் பத்து வருடங்களாக வேலை செய்கிறேன்.
நீங்கள் ஒருவர் மட்டும்தான் என்னை மனிதனாக மதித்து காலையில் வணக்கமும், சாயங்காலம் ‘போய்ட்டு வரேன்’ என்றும் சொல்பவர். இன்று காலையில் ‘வணக்கம்’ சொன்னீர்கள். ஆனால் சாயங்காலம் ஆகியும் ‘போய்ட்டு வரேன்’ என்று நீங்கள் சொல்லவேயில்லை. அதனால்தான் ஏதேனும் பிரச்னையாக இருக்குமோ? என்று நினைத்து உங்களை ஒவ்வொரு அறையாக தேடிக் கொண்டிருந்தேன். அப்போதுதான் உங்களை இங்கே பார்த்தேன்' என்று கூறினார்.
இந்தக் கதையில் சொன்னதுப்போல, ஒருவர் செய்யும் பணியை வைத்து அவர்களை எடைபோடாமல், எல்லோரிடமும் மரியாதையாகவும், அன்பாகவும் நடந்துக்கொள்வது எப்போதுமே நன்மையைக் கொடுக்கும். இதைப் புரிந்துக்கொண்டு நடந்தால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். முயற்சித்துப் பாருங்களேன்.