
ஆங்கிலத்தில் உரையாட உங்களுக்குள் இருக்கும் தயக்கத்தை நீக்க முதல் படியாக நல்ல பயிற்சியும், பொறுமையும், நம்பிக்கையும் தேவை. அதற்கு நீங்கள் செய்யவேண்டியவை என்னென்ன என்பது தொடர்பான 10 ஆலோசனைகளை இங்கு பார்க்கலாம்.
1.உங்கள் நண்பருடன் கொஞ்சம் கொஞ்சம் ஆங்கிலத்தில் பேசி பயிற்சியைத் தொடங்கலாம் அல்லது பிறருக்கு முன்பாகப் பேசத் தொடங்கும் முன், நீங்களாகப் பேசி அதை போனில் பதிவு செய்து பின் அதைப் போட்டுக் கேட்கலாம்.
2.எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாகப் பயிற்சி எடுத்துக் கொள்கிறீர்களோ அந்த அளவுக்கு மனதில் நம்பிக்கை பிறக்கும்.
3.தவறில்லாமல் பேசவேண்டும் என்று எண்ணாமல் சரளமாகப் பேசுவதற்கு முன்னுரிமை கொடுத்து பயிற்சியைத் தொடங்குங்கள். ஏனெனில் சொல்ல நினைக்கும் விஷயத்தை பிறர் புரிந்துகொள்வதே முக்கியம்; இலக்கண சுத்தத்தை பிறகு போகப் போக தெரிந்துகொள்ளலாம்.
4.உள்ளூர்வாசிகள் பேசும் ஆங்கிலத்தை உன்னிப்பாக காது கொடுத்துக் கேட்கப் பழகுங்கள். திரைப்படங்கள், டி.வி. ஷோக்கள், நேரடி நிகழ்வுகள் மற்றும் வலையொலிபரப்பு போன்றவற்றைப் பார்த்து ஆங்கில உச்சரிப்பையும் ஒலி வேறுபாட்டையும் கற்றுக் கொள்ளுங்கள்.
5. நீங்கள் பேசும்போது உண்டாகும் தவறுகளை நினைத்து அஞ்ச வேண்டாம். அவற்றை கற்றுக்கொவதற்கு கிடைத்த சந்தர்ப்பங்களாக எண்ணி பேச்சுத் திறமையை வளர்க்க முயற்சி செய்யுங்கள்.
6. ஒரு நாளில் இத்தனை நிமிடங்கள் ஆங்கிலத்தில் பேசவேண்டும் என்று ஓர் இலக்கை நிர்ணயித்துக் கொண்டு செயல்படுங்கள். தேவைப்படின், ஆங்கிலம் சரளமாக பேசக்கற்றுத்தரும் கல்வி நிறுவனம் ஒன்றில் சேர்ந்து சில காலம் பயிற்சி பெறுவதும் பயன் தரும்.
7. நீங்கள் பேசுவதை பதிவு பண்ணி கேட்கும்போது, எந்தெந்த இடங்களில் தவறு ஏற்பட்டுள்ளது என்பதைக் கேட்டறிந்து திருத்திக்கொண்டால் அது உங்கள் வளர்ச்சிக்கு உதவும்.
8. நீங்கள் பேச நினைப்பதை தெளிவாகவும் உறுதியாகவும் வெளிப்படுத்துவதற்கு ஆங்கில அகராதி மூலம் தினசரி ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான புதிய வார்த்தைகளை கற்றுக்கொள்வது சிறந்த பலனளிக்கும்.
9. சில நேரம் நீங்களாகப் பேசிக்கொள்ளும்போது, உங்களுக்குள் வளர்ச்சிக்கான நம்பிக்கையை உண்டுபண்ணும் விதத்தில் நேர்மறையான விஷயங்களைப் பேசிப்பழகுவது நல்லது.
10. எப்போதெல்லாம் உங்களுக்கு முடிகிறதோ அப்போதெல்லாம் பயிற்சியை விட்டுவிடாமல் தொடருங்கள். அது ஒரு உரையாடலாக இருக்கலாம் அல்லது ஓர் ஆங்கிலப் புத்தகத்தை வாய்விட்டு சத்தமாக நீங்க படிப்பதாகவும் இருக்கலாம். ஆன்லைன் பேச்சுக்களை கவனிப்பதும் நன்மை தரும்.
மேற்கூறிய 10 ஆலோசனைகளைப் பின்பற்றி ஆங்கிலத்தில் பேசும் திறனை வளர்த்துக்கொண்டு பயன்பெறுங்கள்.