நம்முடைய வாழ்க்கையில் நம்மைச் சுற்றி நடப்பதெல்லாம் கெட்டதாகவே இருக்கிறது என்று உங்களுக்கு தோன்றியதுண்டா? ‘இந்த உலகத்தில் எல்லா கெட்ட விஷயங்களும் எனக்கு மட்டுமே நடக்கிறது’ என்று நினைப்பவரா நீங்கள்? அப்போ இந்தக் கதையை முழுமையாக படியுங்கள்.
ஒரு கண்ணாடியால் ஆன மியூசியத்தில் சுவர் முதல் கூரை வரை எல்லாமே முழுக்க முழுக்க கண்ணாடியால் செய்யப்பட்டிருந்தது. ஒருவர் நின்று பார்க்கையில் அவரை போலவே நூறு உருவத்தை அந்த இடம் காட்டக் கூடியதாக இருந்தது. ஒருநாள் தவறுதலாக அந்த மியூசியத்தின் பின்பகுதியை பூட்டுவதற்கு மறந்துவிடுகிறார்கள். அப்போது அந்த வழியாக சென்றுக் கொண்டிருந்த நாய் ஒன்று அந்த கண்ணாடி மியூசியத்துக்குள் நுழைகிறது. அந்த நாய்க்கு தன்னை சுற்றி உள்ளதெல்லாம் கண்ணாடி என்று சொல்லிக் கொடுக்க யாரும் இல்லை.
தன்னை சுற்றி இத்தனை நாய்கள் இருக்கிறதே? என்ற பயத்தில் தன்னுடைய சொந்த பிம்பத்தை பார்த்தே அந்த நாய் குலைக்க ஆரம்பிக்கிறது. உடனே அந்த பிம்பங்களும் இந்த நாயை பார்த்து திருப்பிக் குலைக்க ஆரம்பிக்கிறது.
இதை பார்த்த நாய் இன்னும் அதிகமாக குலைக்க ஆரம்பிக்கிறது. இந்த நாயும் குலைப்பதை நிறுத்தவில்லை. அதை சுற்றியுள்ள பிம்பத்தில் இருக்கும் நாய் உருவங்களும் குலைத்துக் கொண்டிருந்தது.
மறுநாள் காலை அந்த மியூசியத்தின் செக்யூரிட்டி வந்து பார்த்தபோது, அங்கே பயத்தில் இறந்து கிடந்த ஒரு நாயின் உடலை பார்க்கிறார்.
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால், அந்த நாயை துன்புறுத்த அங்கே யாருமில்லை. இருப்பினும் அதனுடைய பிரதிபலிப்பை பார்த்து பயந்து, அதனுடன் சண்டை போட்டே அது இறந்துவிட்டது. இதே மாதிரிதான், இந்த உலகமும் ஒரு பெரிய கண்ணாடி போன்றது. இங்கே நம்மை சுற்றி நடக்கும் நல்லதும், கெட்டதும் நம்முடைய சிந்தனையும், செயலுடைய சொந்த பிரதிபலிப்புதான். நாம் நம்மை சுற்றியிருப்பவர்களுக்கு நல்லது நினைக்கும்போது நமக்கும் நல்லதே நடக்கிறது. கெட்டது நினைத்தால் நமக்கும் கெட்டதே நிகழும்.
இது எப்போது நமக்கு புரிகிறதோ, அப்போது நம்முடைய வாழ்க்கையில் சிறப்பான மாற்றத்தை காணமுடியும். அதனால் நாமும் நம்மை சுற்றியிருப்பவர்களுக்கு எப்போதும் நல்லதே நினைப்போம். நம்முடைய வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும். முயற்சித்துப் பாருங்களேன்.