தான்தான் புத்திசாலின்னு நினைப்பவரா நீங்க..?

Are you the one who thinks that self is smart?
Talent person
Published on

நேகர்,  தாங்கள்தான் புத்திசாலியென மனதிற்குள் எண்ணி செயல்படுவார்கள். ஆனால்,  யானைக்கும் அடி சறுக்கும் என்பதுபோல,  சொதப்பிவிடும்.

ஒரு சிற்பியின் கதையை இதற்கு உதாரணமாக கூறலாம்.

அது என்ன கதை..?

அந்த ஊரிலிருந்த சிற்பி ஒருவர் அருமையாக சிலைகளை வடிப்பதில் வல்லவராக இருந்தார். தான்தான் புத்திசாலியென அடிக்கடி மற்றவர்களிடம் பெருமை பேசுவார்.  சிற்பிக்கு எமன் நாள் குறித்துவிட்டார். எமன் நாள் குறித்துவிட்டால் அந்த நாளில் அந்த நபரின் உயிரை  எடுத்துவிடுவார் என்று சொல்வது வழக்கம். அது பற்றி,   புத்திசாலியான சிற்பிக்கு எப்படியோ தெரியவந்துவிட்டது. சிற்பிக்கோ இறக்க விருப்பமில்லை. 

எமன் ஒருமுறைதான் தன்னுடைய பாசக்கயிற்றை வீசுவார். அதில் தவறிவிட்டால், மீண்டும் வீசி உயிரைப் பறிக்கும் அதிகாரம் எமனுக்கு இல்லை என்பதும் சிற்பிக்கு தெரியும். அதனைப் பயன்படுத்திக் கொள்ள ஒரு யுக்தி செய்தார்.

என்ன யுக்தி?

தன் முழுத்திறமையையும் பயன்படுத்தி  தன்னைப் போலவே அச்சு அசலாக இரண்டு சிலைகளைச் செய்தார் புத்திசாலி சிற்பி.

எமன் வரும் நேரம் அவைகளைத் தரையில் தன்னுடைய  வலது மற்றும் இடது  புறத்தில்  சாய்த்துப்படுக்க வைத்துவிட்டு, நடுவே தானும் ஆடாமல் அசையாமல்  சிலை மாதிரியே படுத்து கண்ணை மூடிக்கொண்டு விட்டார்.

எமன் வந்து பார்த்தார். திகைத்துப் போனார். மூன்றும் சிலைகளா? சற்றே குழம்பிப்போனார். யோசித்தார். பின்னர் இரண்டுதான் சிலைகள் என்பதை யூகித்துவிட்டார்.  எமனா? கொக்கா..? ஆனால் எவை சிலைகள்? எது சிற்பி? என்பதைத்தான் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவ்வளவு நேர்த்தியாக அவைகள் செய்யப்பட்டிருந்தன. தவறாக சிலையின் மீது கயிற்றை வீசிவிட்டால் சிற்பி தப்பி விடுவாரே. மண்டை காய்ந்தது.  நேரம் ஓடிக்கொண்டிருந்தது. என்ன செய்வதென எமன் யோசித்தார்.

சற்று நேரம் சென்றபின், ஒரு யோசனை வந்தது.

அட ! மூன்று சிலைகளும் எவ்வளவு தத்ரூபமாக இருக்கிறது.. இவற்றைச் செய்த சிற்பியை  பாராட்டவேண்டும். என்னாலேயே எது சிலை? எது ஆள்? என்று கண்டுபிடிக்க முடியவில்லையே! அபாரம்’" என்று  சத்தமாக வாய்விட்டு சொல்லியவாறே,  மூன்று சிலைகளையும் உன்னிப்பாக கவனித்தார். அவர் எதிர்பார்த்தது நடந்துவிட்டது. 

இதையும் படியுங்கள்:
நீண்ட கால உறவுக்கு அவசியமானது எது தெரியுமா?
Are you the one who thinks that self is smart?

நடுவில் படுத்திருந்த சிலையின் உதட்டில் லேசான புன்முறுவல் தெரிந்தது. தற்பெருமைதான், அப்புறமென்ன?  சடாரென சிற்பியின் கழுத்தை நோக்கி எமன் கயிற்றை  வீசினார்.

கெடுத்தது எது? தான்தான் புத்திசாலி என்கிற ஈகோ சிற்பியைக் காட்டிக் கொடுத்து விட்டது. 

ஆக,  பலருடைய பிரச்னைகள்,  மனவருத்தங்கள் மற்றும் சோர்வுகளுக்கு காரணம், நான்தான் புத்திசாலி,  நான்தான் பெரியவன் என்பதாகும். இத்தகைய எண்ணங்களை ஒழித்தோம் என்றால்,  நாம் மிகப்பெரிய வெற்றியாளர்கள் ஆகிவிடுவோம்.  என்ன சரிதானே...!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com