நீண்ட கால உறவுக்கு நம்பிக்கையும், அன்பும் மிகவும் அவசியம். அவை கிடைக்காமல் நாம் ஏமாற்றப்படும் பொழுது அந்த உறவு நீடிக்க வாய்ப்பில்லை. உறவு நீடித்து இருக்க நம் மீது காட்டப்படும் அன்புக்கு நாம் உண்மையாக இருக்க வேண்டும். மற்றவர்களின் உணர்வுகளை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் உறவு நீண்ட காலத்திற்கு நிலைத்து நிற்கும்.
சமயம் கிடைக்கும் பொழுதெல்லாம், அவ்வப்பொழுது சின்ன சின்ன பரிசுகளை பரிமாறிக் கொள்வது மகிழ்ச்சியையும், உறவையும் நீடிக்கச் செய்யும். இயந்திரத்தனமான வாழ்க்கையில் ஒருவருடன் ஒருவர் பேசிக் கொள்வதே அரிதாகி வருகின்றது. இது தவறான போக்கு. எவ்வளவு தான் நாம் பிசியாக இருந்தாலும் வாரத்திற்கு ஒரு முறையோ, 10 நாட்களுக்கு ஒரு முறையோ உறவுகளுடன் போன் மூலமாக அல்லது நேரில் சென்று உறவை புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
கேட்காத கடனும், பார்க்காத உறவும் பாழ் என்று நம் முன்னோர்கள் சொல்வார்கள். ஒருவருக்கு கடன் கொடுத்துவிட்டு அதை திரும்ப கேட்கவில்லை என்றால் கிடைக்காது. அதுபோல்தான் பழகாத மற்றும் பார்க்காத உறவும் பாழாகிவிடும். மொபைல் போன்களின் தாக்கத்தால் வீட்டில் உள்ள நபர்களிடமே பேசுவது குறைந்து விடுகிறது இந்த நிலையில் உறவுகளை எப்படி பேணி காப்பது?
எத்தனையோ வேலைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாம் நம் உறவை பேணி காப்பதிலும் முக்கியத்துவம் கொடுப்பது நல்லது. இல்லையெனில் உறவு நீடித்திருக்க வாய்ப்பில்லாமல் போகும். உறவுகளிடையே பரஸ்பர புரிதல் மிகவும் அவசியம். அடிப்படை புரிதல் இல்லாமை, ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள், விட்டுக்கொடுத்து போகும் தன்மை குறைவது, அன்பை விட பணமே பெரிது என எண்ணி உறவுகளை புறக்கணிப்பது போன்ற காரணங்களினால் உறவுகளில் பிரிவுகள் ஏற்படுகின்றன.
மற்றவர் மதிக்க வாழ வேண்டும் என்று தேவையில்லாமல் நினைத்து தன் நிலைமைக்கு கீழே இருக்கும் உறவுகளுடன் சரியாக பழகாமல் இருப்பது நல்ல உறவை முறித்து விடும். இருப்பதைக் கொண்டு சிறப்புடன் எளிமையாக வாழ நினைத்தால் அன்பான, மிகவும் அனுசரணையான உறவுகள் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால் நாம் என்ன செய்கிறோம் அந்தஸ்து பார்த்து பழகுவதும், நம்மை விட உயர்ந்த நிலையில் இருப்பவர்களைக் கண்டு பொறாமை கொள்வதும், சின்ன தவறு ஏற்பட்டாலும் புறக்கணிப்பதும், சகிப்புத்தன்மை இல்லாமல் இருப்பதும், முக்கியமாக வீட்டிற்கு வரும் உறவினர்களுக்கு விருந்தோம்பல் என்ற ஒரு பழக்கம் இல்லாமல் போவதும் என பல காரணங்களால் உறவுகளில் பிரிவு ஏற்படுகிறது.
எனவே நீண்ட கால உறவுக்கு மிகவும் அவசியமான விட்டுக் கொடுத்தல், பிறரை மதிக்க கற்றுக் கொள்ளுதல், தவறை மன்னித்தல், சகிப்புத்தன்மை போன்றவை இருப்பின் உறவு நன்கு செழித்து வளரும். விட்டுக் கொடுத்தவர்கள் வாழ்வில் என்றும் கெட்டுப் போவதில்லை என்ற சொலவடைக்கு ஏற்ப விட்டுக் கொடுத்துச் செல்வது உறவுகள் நீடித்து இருக்க உதவும்.