இங்கிருக்கும் பல பேருக்கு தன்னுடைய மதிப்பு என்னவென்பது புரிவதில்லை. ‘என்னுடைய மதிப்பு இவ்வளவுதான்’ என்று தன்னைத்தானே குறைத்து மதிப்பிட்டுக் கொள்கிறார்கள். நம்முடைய மதிப்பை நாமே உணர்ந்துக் கொள்ளவில்லை என்றால், மற்றவர்களை குறைக்கூறி என்ன பயன் இருக்கிறது. இந்த கதையை முழுமையாக படியுங்கள். கண்டிப்பாக உங்கள் மதிப்பு என்னவென்பதை இந்த கதையின் முடிவில் உணர்ந்துக் கொள்வீர்கள்.
ஒருநாள் ஆசிரியர் ஒருவர் அவருடைய மாணவர்களுக்கு வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கிறார். அப்போது அவர் பாக்கெட்டில் இருந்து ஒரு தங்க காசை எடுத்து, ‘இது யாருக்கு வேண்டும்?’ என்று கேட்கிறார். வகுப்பில் உள்ள மாணவர்கள் அனைவருமே ‘எனக்கு வேண்டும்’ என்று போட்டி போட்டுக்கொண்டு கையை தூக்குகிறார்கள். அதன் பிறகு அந்த தங்க காசை தரையிலே போட்டுவிட்டு, ‘இந்த அழுக்கு தரையில் இருக்கும் தங்க காசு யாருக்கெல்லாம் வேண்டும்?’ என்று கேட்கிறார்கள். இப்போதும் மாணவர்கள் அனைவரும் தங்களுக்கு வேண்டும் என்று கை தூக்குகிறார்கள்.
இப்போது அந்த தங்கக் காசை எடுத்து அடித்து நசுக்கி இப்போது இந்த நசுங்கிப்போன காசு யாருக்கு வேண்டும் என்று கேட்க, அதேபோலவே எல்லா மாணவர்களும் வேண்டும் என்று கூறுகிறார்கள். அப்போது ஆசிரியர் மாணவர்களிடம் கூறுகிறார், இந்த தங்கக் காசை நான் என்ன செய்தாலும் இதை நீங்க வேண்டாம் என்று சொல்லமாட்டீர்கள்.
ஏன்னா, தங்கத்துடைய மதிப்பு என்னவென்பது உங்களுக்கு நன்றாக தெரியும். இந்த தங்கத்தை போல தான் நாம்முடைய மதிப்பும். உங்கள் வாழ்க்கையில் உங்களை யார் அவமானப்படுத்தினாலும், நசுக்கினாலும், தூக்கி எறிந்தாலும் சரி. எல்லா சூழ்நிலையிலும் உங்களால் வாழ்ந்துக்காட்ட முடியும். உங்களுடைய மதிப்பை நீங்களே குறைத்து எடை போடாதீர்கள் என்று சொன்னாராம்.
இதுபோலத்தான் நிறைய சமயங்களில் நம் வாழ்க்கையில் பட்ட தோல்விகளாலோ, அடிகளாலோ நம்முடைய மதிப்பு என்னவென்பதை நாமே உணராமல் போவதுண்டு. ஆனால், எத்தனை அடிப்பட்டாலும் தங்கத்தின் மதிப்பு எப்படி மாறாதோ அதேபோலத்தான் நம்முடைய மதிப்பு சில தோல்விகளாலும், அவமானங்களாலோ குறைந்துவிட போவதில்லை என்பதை உணர்ந்துக் கொண்டு செயலாற்றினால் நிச்சயம் வாழ்வில் வெற்றிப் பெறலாம். முயற்சித்துப் பாருங்களேன்.