

ஊர் விழாவை பற்றிய கலந்துரையாடல்கள் அங்கு நிகழ்ந்துகொண்டிருந்தன. அந்த இடத்தில் ஒரு பெரியவர் வந்தார். கருத்து சொன்ன அனைவரையும் அடக்கி அவர் சொன்னதுதான் இறுதி முடிவானது.
அப்பொழுது ஒரு இளைஞர் போகிற போக்கில் "அவர் எப்போதுமே இப்படித்தான். ஒன் மேன் ஆர்மியாக இருந்து பழகிட்டார். அடுத்தவங்க பேச்சை கேட்கவே மாட்டார். நமக்கெல்லாம் சான்சே தரமாட்டார்" என்று சொல்லிவிட்டு சென்றார்.
இந்த ஒன் மேன் ஆர்மி ஆசாமிகளை நாம் நிறைய வீடுகளில், அலுவலகங்கள், விழாக்குழுக்கள், கிராம பஞ்சாயத்துகள் போன்ற எல்லா இடங்களிலும் காணலாம். யாருடைய தலையீடும் இல்லாமல், தானே வேலைகளை செய்துமுடித்து நல்ல பெயர் வாங்க வேண்டும் என்ற விருப்பத்தில் அனைத்து வேலைகளையும் தன் தலையில் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்பவர்கள் இவர்கள்.
இதில் பிரெஸ்டீஜ் பார்த்து நுழைபவர்களும் உண்டு.
தன்னால் செய்யமுடியவில்லை எனும் நிலையை ஒப்புக்கொள்ள மனமின்றி அதை தனக்கான தோல்வி என்று நினைத்துக்கொண்டு அது போன்ற நிலைமை வராமல் இருக்க அளவுக்கு மீறிய சுமைகளை தன் மேல் தாங்கிக்கொள்பவர்களும் இந்த ஒன் மேன் ஆர்மிகள்தான்.
அதேபோல்தான் குடும்பத்தில் சர்வாதிகாரியாக சிலர் (ஆண், பெண் இருவரும்) செயல்படுகின்றனர். தன்னுடைய கருத்து சரியா, தவறா என்றுகூட பார்ப்பதில்லை. தான் சொல்வது சரியாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கையில் அவர் ஒன் மேன் ஆர்மியாக செயல்படுகிறார்.
கருத்து கேட்பதில் மட்டுமல்ல, செய்யும் செயல்களிலும் அடுத்தவரின் பேச்சை கேட்காமல், கருத்தை மதிக்காமல் ‘தான் புடிச்ச முயலுக்கு மூணு கால்’ என்று பிடிவாதமாக இருப்பவர்கள் தங்கள் கேரியரில் நிறைய வாய்ப்புகளை இழக்க நேரிடும்.
இதனால் இவர்கள் சாதித்ததவிட இழந்ததுதான் அதிகமாக இருக்கும். மற்றவருடன் அனுசரித்துப் போகாமல் இருக்கும் அவரைக் கண்டாலே மற்றவர்களை விலகிப் போகத் தோன்றும். முக்கியமாக ஒருங்கிணைந்து மகிழும் தருணங்களையும் நெருங்கிய நட்புகள், உறவுகளையும் இவர்கள் இழக்கும் வாய்ப்புகள் அதிகம்.
ஒரு போர் நடக்கும்போது தளபதியானவர் சொல்வதைத்தான் அந்த போர் வீரர்கள் கேட்க வேண்டும். இது ஒருவிதத்தில் சர்வாதிகாரமாக இருந்தாலும் தலைமைக்கு கட்டுப்பட்டு நடப்பதுவே போர் வீரனின் கடமை. இருந்தாலும் சமயத்தில் தளபதிகள் மற்ற வீரர்களின் ஆலோசனைகளையும் கேட்பதுண்டு.
அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை எவ்வளவு அறிவியல் முன்னேற்றம் வந்தாலும் மனிதர்கள் ஒன்றுகூடி ஒருவருக்கு ஒருவர் கருத்துக்கள் பரிமாறி இளைஞர் களுக்கும் வழிவிட்டு வாழ்வதே சிறந்தது. சர்வாதிகாரத்தினால் சாதிக்க முடியாததை ஒற்றுமை சாதிக்கும்.