அந்தக் காட்டில் ஒரு புலியும் எலியும் நண்பர்கள். அட ஆச்சரியமாக இருக்கா? கதையில் இதெல்லாம் சகஜம்தான். ஒருநாள் புலியும் எலியும் பேசிக்கொண்டிருந்தன. எலி கேட்டது,
"எப்படி உன்னை கண்டால் மட்டும் மனிதர்கள் பயந்து ஓடுகிறார்கள்." என்னைக் கண்டால் அடிக்க வருகிறார்களே!
அதற்கு புலி, "நான் என்றுமே நிதானமாகத்தான் இருக்கிறேன். எனக்கு தேவையான இரையைக் கண்டாலும் பதட்டமே இன்றி அதை நோக்கி நிதானமாக பதுங்கி முன்னேறுகிறேன். ஆனால் உன் இனம் அப்படி அல்ல. இரையைக் கண்டால் குடுகுடுவென்று ஓடி ஆபத்தில் சிக்குவது உங்கள் வாடிக்கை.
உங்களுக்கு இருக்கும் பதட்டத்தில் மர கூண்டுக்குள் மாட்டிக் கொண்டால் கூட திரும்பி வரும் வழி தெரியாமல் அந்த கம்பியை பிடித்து ஆட்டிக் கொண்டிருப்பீர்கள். ஆனால் பதட்டமின்றி யோசித்தால் உங்களால் முடியும். சாதாரண நாட்களில் உன் கூர்மையான பற்களால் மரத்தை கடித்து துப்பும் நீ உயிருக்கு போராடும் வேளையில் அதை மறந்து விட்டு பதட்டத்தில் மன உளைச்சலிலும் அதை மறந்து மனிதர்களிடம் மாட்டிக் கொள்கிறீர்கள்.இது மட்டுமே எனக்கும் உனக்கும் உள்ள வித்தியாசம். பதட்டமும் மன குழப்பமும் இல்லாதவர்கள் தெளிவான வெற்றியை பெறுவார்கள் நான் அப்படித்தான். ஆகவேதான் பதட்டம் மிகுந்த மனிதர்கள் என்னைப் பார்த்து பயப்படுகிறார்கள்" என்றது புலி.
ஆம். இதே பதட்டமும், மனஉளைச்சலும் எலிக்கு மட்டுமல் நம்மையும் பல்வேறு நிலைகளில், பல்வேறு விதங்களில் பாதிக்கிறது. அதைத் தொடக்கத்திலேயே நாம் கிள்ளியெறிய வேண்டும். இல்லையெனில் அதுவே வெற்றிக்குத் தடையாகும் மனநோய்க்கு காரணமாகி விடக்கூடும்.
அந்த எலிக்கும் நமக்கும் இதில் ஒற்றுமை உண்டு. ஆம் நமது வலிமையும் திறமையும் பதட்டத்தில் நமக்கே மறந்து போகிறது. பதட்டமும், மன உளைச்சலும் நமது சிந்தனையை செயல்படாமல் வைத்து முன்னேற்றத்திற்கான வழியை அடைத்து விடுகிறது.
இரையின் மீதான கவனத்தை மட்டும் வைத்து பதட்டமின்றி அதை நோக்கி உறுதியுடன் முன்னேறி அடையும் புலியைப் போல நாமும் நமது இலக்கு ஒன்றை மட்டும் கவனத்தில் நிறுத்தி மற்ற சூழல்களால் வரும் பதட்டம் மன உளைச்சல் தவிர்க்கப் பழக வேண்டும்.
எதிர் வரும் சிக்கல்களில் இருந்து தப்பிக்க வேண்டுமெனில் பதட்டம், மன உளைச்சல் ஆகிய சிறைகளில் இருந்து விலகி இருக்க வேண்டும். ஏனேனில் அனைத்து சிக்கல்களுக்கும் தீர்வு காணத் தெளிவான, பதட்டமற்ற மனதினால் மட்டுமே முடியும்.
ஆகவே பதட்டமின்றி வெற்றி பெறும் புலியா அல்லது பதட்டத்தில் சுய வலிமை மறந்து தோற்கும் எலியா என்பதை முடிவு செய்ய வேண்டியது நம் கையில்தான் உள்ளது.