விவாதிப்பதை விட, மௌனம் சிறந்தது - ஏன்? வாழ்வை மாற்றும் உளவியல் உண்மைகள்!

man talking and two persons listening silently
argument Vs. silent acceptance credits AI Image
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

சில பேர் தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்பது போல் நடந்துகொள்வார்கள். அவர்களிடம் நமக்குத் தெரிந்த கருத்தைக் கூறுவது கூட மிகவும் கடினமாக இருக்கும். அப்படிப்பட்டவர்களைக் கையாள்வதற்கு ஒரு சுலபமான வழி, அவர்களை ஒரு 'குரு'வைப் போல் பாவித்து நடப்பதுதான். குழந்தைகள் போல் விதவிதமான கேள்விகளைக் கேட்டு அவர்களைத் திணறடிக்கலாம். அவர்கள் அளிக்கும் பதில், ஒரு கேள்வியை அவர்கள் எவ்வாறு அணுகுகிறார்கள் என்பதை நமக்குத் புரிய வைக்கும்.

அதே சமயம், அவர்களிடம் நம் சொந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு கேட்டுப் போய்விடக் கூடாது. அவர்களிடம் பேச வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டால் 'ஆம்', 'இல்லை' என்பது போன்ற ஒரு சில வார்த்தைகளில் பேச்சை முடித்துக்கொள்ளலாம்.

இடத்திற்கு ஏற்ற அணுகுமுறை

  • அலுவலகத்தில்: நம்மை விட மேலான பதவியில் இருப்பவர்கள் அப்படி நடந்துகொண்டால், பேசாமல் சகித்துக்கொள்ள வேண்டியதுதான்.

  • நட்பு வட்டத்தில்: இது போன்ற நண்பர்களிடம் நாம் நினைப்பதைத் தெளிவாகவும் நாசுக்காகவும் சொல்லிவிடலாம்.

  • வீட்டில்: இப்பொழுதெல்லாம் பெரியவர்களை விட வயதில் சிறியவர்கள் கூட 'தனக்கு எல்லாம் தெரியும்' என்ற தோரணையில் பேசுகிறார்கள். அவர்களிடம் தேவையற்ற விவாதங்களைச் செய்யாமல் மௌனமாகிவிடுவது நல்லது. இது உறவுகளிடையே ஏற்படும் கசப்புகளைக் குறைக்கும்.

வீண் விவாதங்களைத் தவிர்க்கும் கலை

"எனக்குத்தான் எல்லாம் தெரியும்" என்று பேசுபவர்களைக் கண்டாலே மற்றவர்கள் தவிர்க்கவே விரும்புவார்கள். முடிந்தால் அவர்களைத் தவிர்த்துவிடலாம்; முடியாத பட்சத்தில், அவர்களைப் பேசவிட்டுப் பின்பு சரியான விதத்தில் உண்மையை எடுத்துச் சொல்லலாம். அப்பொழுதும் சிலர் 'விடாக்கண்டனாக' தான் சொல்வதுதான் சரி என்று சாதிப்பார்கள். அப்படிப்பட்டவர்களைச் சகித்துக்கொண்டு செல்வதே ஒரே வழி. "இவர் இப்படித்தான்" என்ற முடிவுக்கு வந்துவிட்டு, விவாதத்தைத் தொடராமல் "நீங்கள் சொல்வது சரிதான்" என்பது போல் தலையாட்டிவிட்டு நகர்ந்துவிடலாம்.

இப்படிப்பட்டவர்கள், எதிராளி எந்த விதமான எதிர்வாதமும் வைக்கவில்லை என்றால் நல்ல நட்பு பாராட்டிப் பேசிக்கொண்டே இருப்பார்கள். அதுவே யாராவது குறுக்குக் கேள்வி கேட்டால், அதை விரும்புவதில்லை. மாறாக, தாங்களே அறிவாளி எனக் காட்டிக்கொள்வதற்காக வாதம் செய்வார்கள். அத்தகையவர்களிடம் நம்முடைய நேரத்தையும் சக்தியையும் வீணடிக்காமல் ஒதுங்கிச் செல்வதுதான் புத்திசாலித்தனம்.

நீங்கள் சொல்வது தவறு என்று அவர்களுக்கு விளங்க வைக்க முயற்சிப்பது 'விழலுக்கு இறைத்த நீர்' போன்றது. அவர்களுக்குப் புரியப்போவதும் இல்லை; உங்கள் கருத்தை அவர்கள் ஏற்கப்போவதும் இல்லை.

அவர்களிடம் அமைதி காப்பதே சிறந்தது. சிறிது நேரம் அவர்கள் கூறுவதைக் கேட்டுவிட்டு, "மிகவும் அருமையாகப் பேசினீர்கள்" என்று பாராட்டிவிட்டு, உடனடியாக அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிடுவது விவேகமானது.

இதையும் படியுங்கள்:
மன அழுத்தம் உங்களை வாட்டுகிறதா? இந்த ஒரு 'நகை' உங்களிடம் இல்லாதது தான் காரணம்!
man talking and two persons listening silently

உளவியல் பின்னணி: கவன ஈர்ப்பு (Center of Attraction)

உளவியல் ரீதியாகப் பார்த்தால், நம் அனைவருக்குமே மற்றவர்களின் 'கவன ஈர்ப்பு' (Center of Attraction) தேவைப்படுகிறது. பல விஷயங்கள் தெரிந்தது போல் பேசுவது, காட்டிக்கொள்வது, மார்தட்டிக்கொள்வது எல்லாமே பிறரின் கவனத்தைப் பெறுவதற்காகத்தான். ஆனால், இப்படிப் போலியாகப் பாவ்லா செய்வதால் மற்றவர்கள் முன்னிலையில் நாம் கேலிக்குரியவர் ஆகிவிடுவோம் என்பதை அவர்கள் மறந்துவிடுகிறார்கள்.

logo
Kalki Online
kalkionline.com