
தேடுவது கிடைக்கும்வரை தேடுவதை கைவிடாமல் தொடர்ந்து முயற்சி செய்யவேண்டும். தேடாத வரை எதுவும் கிடைக்காது. கிடைக்காது என்று தோன்றினாலும் மனம் அதைத்தொடர்ந்து நாடுவது ஏன் தெரியுமா?
தொடர் முயற்சி நிச்சயம் நம் தேடலை கிடைக்க வைக்கும் என்ற நம்பிக்கையில்தான். தோல்வி அடைந்தாலும் அதற்கு பயப்படாமல் அதிலிருந்து கற்றுக்கொண்டு மீண்டும் மீண்டும் முயற்சி செய்ய தேடுவது கிடைக்கும். இன்று வெற்றி பெற்று சாதனை படைத்தவர்கள் அனைவரும் ஒருநாள் முயற்சி செய்து தோற்றுப் போனவர்கள்தான் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
தேவை இருக்கும் வரை தேடலும் இருக்கும். அதுபோல்தான் வெற்றி கிடைக்கும்வரை முயற்சியும் இருக்கவேண்டும். முதலில் நாம் எதைத் தேடுகிறோம் என்பதை பற்றிய தெளிவும் புரிதலும் அவசியம். அப்போதுதான் நம்மால் முழு ஈடுபாடுடன் தேடமுடியும். என்ன தேடுகிறோம் என்பதை தெரிந்து கொண்டு அதற்கு சரியான இலக்கை நிர்ணயித்துக்கொண்டு நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் தேடுவது கிடைக்கும். தேடலை தொடங்குவதற்கு முன் சரியான வழியையும் முறைகளையும் தெரிந்து கொண்டு தேட முயற்சித்தால் வெற்றி கிட்டும்.
தேடலின் மதிப்பு கிடைக்கும் வரைதான். கிடைக்கும் வரை தேடல் அதிகமாகவே இருக்கும். கிடைத்த பின்பு அலட்சியம் அதிகமாகும். இருப்பினும் பிடித்தது கிடைக்கும் வரை தேடுவதை நிறுத்த வேண்டாம். கிடைக்கும் வரை தேடு என்பது ஒரு பொதுவான உந்துதல் முழக்கம்தான்.
ஒரு செயலை செய்ய உந்துதல் தேவை. நாம் தேடும் எதுவாக இருந்தாலும் அதற்கான முயற்சியும், உந்துதலும் அவசியம். உதாரணத்திற்கு வேலை தேடும் பொழுது வேறு வேலை கிடைக்கும் வரை கிடைத்த வேலையை விடக்கூடாது என்பார்கள். அதுபோல் நாம் எண்ணுவது கிடைக்கும் வரை போராட வேண்டும்.
ஒன்றை அடையவேண்டும் என்ற எண்ணம் ஆழ்மனதில் தோன்றி விட்டால் எது இருந்தாலும் இல்லை என்றாலும் நம்மால் தொடர்ந்து முயற்சி செய்து அதை அடைய முடியும். மனதிற்கு அவ்வளவு சக்தி உண்டு. ஆனால் நாம் எதை நோக்கி ஓடுகிறோம் என்பது நமக்குத் தெரியவில்லை என்றால் ஒரு பயனுமில்லை.
அதனால் எப்பொழுதும் நம்முடைய தேடுதல் முழுமையாக இருக்க வேண்டும். அது கிடைக்கும் வரை தேடுவதை நிறுத்தக் கூடாது. ஆனால் அந்தத் தேடலில் எக்காரணம் கொண்டும் தொலைக்கக் கூடாத மிகப் பெரிய விஷயம் ஒன்று உண்டென்றால் அது நம் மனநிம்மதி என்பதே மறந்து விடக்கூடாது.
எளிதில் கிடைக்கும் எந்த பொருள் மீதும் மனதிற்கு பெரிதாக நாட்டம் எதுவும் இருக்காது. கிடைப்பதற்கு அரிதான பொருள் மீது தான் மனம் அதிக ஈடுபாடு கொள்ளும். ஒன்றின் மீது ஆசைப்படும்போது அது வெறும் ஆசையாக மட்டுமில்லாமல் அதைப்பற்றிய கனவுகளை வளர்த்துக்கொண்டு அதை அடைய வேண்டும் என்ற முயற்சியில் தேடுவதை கைவிடாமல் தொடர்ந்து முயற்சி செய்ய வெற்றி நிச்சயம்.
நாம் நினைத்தது கிடைக்கும்வரை முழுமனதுடன் முயற்சி செய்ய முதலில் நமக்குத் தேவை அதை அடைந்தே தீருவோம் என்று அதன் மீது ஆழமான முழு நம்பிக்கை வைப்பது தான். அத்துடன் அதில் தீவிர முயற்சி எடுத்து கடுமையாக பிரயத்தனம் செய்ய முக்கியமான தேவை அதில் அதிக ஈடுபாடும் விருப்பமும் கொள்வதுதான்.