சில நேரங்களில் நாம் உண்டு. நம் வேலையுண்டு என்று இருந்தாலுமே, சம்மந்தமேயில்லாத பிரச்னைகள் நம்மை தேடி வருவதுண்டு. அப்படி வரும் பிரச்னைகளை தவிர்த்துவிட்டு செல்வதே சிறந்தது. அதில் சென்று தலையிடுவது நிச்சயமாக நன்மை பயக்காது. இதைப்பற்றி தெளிவாகப் புரிந்துக்கொள்ள ஒரு குட்டி கதையைப் பார்ப்போம்.
ஒரு காட்டில் வாழ்ந்து வந்த சிங்கத்திற்கு ரொம்ப நாளாகவே தன் மீது துர்நாற்றம் வீசுகிறதோ? என்ற எண்ணம் இருந்து வந்தது. இதை மற்ற விலங்குகளிடம் கேட்டால்தான் உண்மை என்னவென்று தெரியும் என்று சிங்கம் நினைத்தது.
முதலில் சிங்கம் காட்டு மானைப் பார்த்து, ‘என் மீது உண்மையிலேயே துர்நாற்றம் வீசுகிறதா?’ என்று கேட்டது. அதற்கு அந்த மானும், ‘ஆமாம் அரசரே! உங்கள் மீது வரும் துர்நாற்றத்தை என்னால் தாங்கவே முடியவில்லை’ என்று சொல்ல அதைக்கேட்ட சிங்கம் கோவத்தில் அந்த மானை கொன்று விடுகிறது.
அடுத்ததாக அந்த சிங்கம் ஒரு குரங்கை சந்திக்கிறது. அந்த குரங்கிடமும் அதே கேள்வியைக் கேட்கிறது. பயத்தில் அந்த குரங்கு, ‘இல்லை அரசரே! அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை’ என்று சொல்லி முடிப்பதற்குள் குரங்கு பொய் சொல்கிறது என்று எண்ணி அந்தக் குரங்கையும் சிங்கம் கொன்று விடுகிறது.
கடைசியாக, அந்த வழியில் ஒரு நரியை பார்க்கிறது. இப்போது சிங்கம் இந்த நரியிடமும் அதே கேள்வியைக் கேட்கிறது. ஆனால், இப்போது அந்த நரி பதிலுக்கு சாமர்த்தியமாக சொன்னது என்ன தெரியுமா?
‘மன்னித்துவிடுங்கள் அரசரே! என்னுடைய மூக்கு அடைத்துக்கொண்டிருப்பதால் இப்போது என்னால் மோப்பம் பிடிக்க முடியாது. அதனால், நீங்கள் வேறு யாரிடமாவது கேட்டுத் தெரிந்துக் கொள்ளுங்கள்’ என்று கூறியது. இதைக்கேட்ட அந்த சிங்கமும் நரியை எதுவுமே செய்யாமல் அந்த இடத்தை விட்டு கிளம்பி சென்றுவிட்டது.
இந்தக்கதையில் வரும் நரியைப்போல இருந்துவிட்டால் எந்த பிரச்னையிலும் நாம் மாட்டாமல் இருக்கலாம். சில நேரங்களில் இந்த நரியைப்போலவே நமக்கு தேவையேயில்லாத பிரச்னையில் தலையிட்டு மாட்டிக்கொள்ளாமல் அதை தவிர்த்துவிட்டு சென்றுவிட்டால் வாழ்க்கை வளமாக இருக்கும். முயற்சித்துப் பாருங்களேன்.