நம்முடைய வாழ்க்கையில் நம்மை வெற்றியை நோக்கிக் கூட்டிச்செல்வது கடும் உழைப்பும், சாமர்த்தியமுமேயாகும். படிப்பு மட்டுமே எல்லா நேரங்களிலும் உதவுவதில்லை. சாமர்த்தியமாக செயல்படுவது, கிடைக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்வது போன்ற அறிவும் இருக்க வேண்டும். இதை தெளிவாக புரிந்துக்கொள்ள ஒரு குட்டி கதையைப் பார்ப்போம்.
ஒரு ஊரில் படிக்க, எழுத தெரியாத முதியவர் ஒருவர் காவலாளியாக வேலைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவரிடம் அந்த கம்பெனிக்கு வந்து போகிறவர்களைப் பற்றிய தகவலைக் கொண்ட ஒரு ரெஜிஸ்டரை பார்த்துக்கொள்ள சொல்கிறார்கள். ஆனால், அவர் தனக்கு எழுதப்படிக்க தெரியாது என்று கூறுகிறார். உடனே அவரை வேலையைவிட்டு தூக்கி விடுகிறார்கள்.
இதனால் மனவேதனையில் இருந்த முதியவருக்கு அவருடைய வீட்டிற்கு பக்கத்திலேயே ரிப்பேர் செய்யும் வேலைக் கிடைக்கிறது. இருப்பினும், இவரிடம் ரிப்பேர் செய்ய டூல்ஸ் எதுவும் இல்லை. அதை வாங்குவதற்காக இரண்டு நாள் பயணம் செய்து வெளியூருக்கு சென்று வாங்கி வருகிறார்.
இப்படியிருக்கையில் ஒருநாள் இவர் வாங்கி வந்த டூல்ஸை பக்கத்து வீட்டுக்காரர் கடனாக கேட்கிறார். அப்போது தான் அவருக்கு ஒரு ஐடியா வருகிறது. ‘நாம் ஏன் இங்கே ஒரு டூல்ஸ் கடை ஆரம்பிக்கக்கூடாது?’ என்று அவருக்கு தோன்றுகிறது. அந்த ஊரைச் சுற்றி எந்த டூல்ஸ் கடையும் இல்லை என்று சின்னதாக ஆரம்பிக்கிறார். ரோட்டில் கடைப் போட்டிருந்தவர் ஒரு கடையை வைத்து பார்த்துக் கொள்ளும் அளவிற்கு வளர்கிறார். பிறகு பெரிய பிசினஸ்மேனாகவே மாறிவிடுகிறார்.
ஒருநாள் ஊர் தலைவர் திருவிழாவிற்காக நன்கொடைக் கேட்டு இவரிடம் வருகிறார். ‘நீங்கள் எவ்வளவு பணம் கொடுக்கிறீர்களோ அதை இந்த நோட்டில் எழுதி கையெழுத்துப் போடுங்கள்’ என்று சொல்கிறார். அதற்கு அந்த முதியவரோ, ‘எனக்கு எழுதப்படிக்க தெரியாது!’ என்று கூறுகிறார்.
இதைக்கேட்ட அந்த ஊர் தலைவர், ‘எழுதப்படிக்க தெரியாமலேயே இவ்வளவு பெரிய பிசினஸ்மேனாக ஆகிவிட்டீர்களே? ஒருவேளை உங்களுக்கு எழுதப்படிக்க தெரிந்திருந்தால் என்னவாகியிருப்பீர்கள்?’ என்று கேட்கிறார்.
அதற்கு அந்த முதியவர் சிரித்துக்கொண்டே சொல்கிறார், ‘எனக்கு எழுதப்படிக்க தெரிந்திருந்தால், இந்நேரம் ஒரு காவலாளியாக இருந்திருப்பேன்’ என்று கூறுகிறார். இந்த கதையில் இருந்து நாம் புரிந்துக்கொள்ள வேண்டிய பாடம் என்னவென்றால், வாழ்க்கையில் வெற்றிபெற படிப்பு ஒரு தடையில்லை. கொஞ்சம் சாமர்த்தியமாக செயல்பட்டால் போதும் சுலபமாக வெற்றி பெறலாம். முயற்சித்துப் பாருங்கள்.