'நான் இல்லனா எதுவும் நடக்காது' - இந்த எண்ணம் ஆபத்தானதா?

ஒருவரை மட்டுமே சார்ந்து இயங்கும் குடும்பமும் அலுவலகமும் ஏன் பலவீனமாக மாறுகிறது, பொறுப்புகளை பகிர்வது எப்படி உண்மையான வளர்ச்சியை உருவாக்குகிறது என்பதை விளக்கும் ஆழமான பதிவு.
Delegation of Work
Delegation of WorkImage credit: AI Image
Updated on

நாம் வீட்டிலோ, அலுவலகங்களிலோ அடிக்கடி சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனை உண்டு.

“சார் வந்தாத்தான் தெரியும்…”

“அவர் கேட்டுட்டுத்தான் முடிவு பண்ணணும்…”

“எங்க வச்சுருக்காங்கன்னு தெரியல…”

ஒரு அவசர வேலையாகச் சென்றாலும், குறிப்பிட்ட நபர் இல்லாததால் அந்த வேலையை முடிக்க முடியாமல் திரும்பி வர வேண்டிய நிலை உருவாகிறது.

வீட்டில்கூட சில சமயங்களில், “அம்மா வந்தாத்தான் தெரியும்…” என்ற பதிலை நாம் கேட்டிருப்போம்.

ஒரு மனிதர் இல்லாததால் ஒரு வீடும், ஒரு அலுவலகமும் செயலிழந்து போகும் நிலை — அது திறமையின் அடையாளமா? இல்லையெனில் ஒரு அமைப்பின் பலவீனமா?

“எல்லாம் என்னால்தான்…”

நம்மில் பலரின் மனதிலும் ஒரு மறைமுகமான எண்ணம் இருக்கிறது.

“நான் இல்லையென்றால் வேலை நின்றுவிடும்…”

“இதையெல்லாம் என்னால்தான் செய்ய முடியும்…”

உண்மையாகச் சொன்னால், அந்த மனப்பாங்கு என்னிடமும் இருந்திருக்கிறது. பலரிடமும் இது இருக்கிறது.

வீட்டில்கூட சில அம்மாக்கள், “நான் இல்லையென்றால் வீடு அப்படியே கிடக்கும்…” என்று சொல்லக் கேள்விப்பட்டிருப்போம்.

இதற்கு பெயர் அகந்தையா?

“எனக்குத்தான் எல்லாம் தெரியும்” என்ற ஆணவமா?

ஆழமாக யோசித்துப் பார்த்தால், இதற்குப் பின்னால் இருப்பது அகந்தை அல்ல — பயம்.

முக்கியத்துவத்தை இழந்துவிடுமோ என்ற பயம்.

“நான் இல்லாமல் இவர்கள் வேலை பார்த்துவிட்டால், நாளை என்னுடைய முக்கியத்துவம் குறைந்து விடுமோ?” என்ற அமைதியான பயம் பலரின் உள்ளுக்குள் மறைந்து கிடக்கிறது.

இந்த வேகமான உலகத்தில், பணியிடத்தில் தன்னுடைய இடம் குறைந்து விடுமோ, வேலை பாதுகாப்பு பாதிக்கப்படுமோ என்ற அச்சம் பலருக்குள் இருக்கிறது. அதனால் தான் சிலர் எல்லா விஷயங்களையும் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள முயற்சிக்கிறார்கள்.

ஆனால், அது நீண்ட காலத்தில் நல்லதா?

ஒரு அமைப்பு ஒரே நபரை மட்டும் சார்ந்து இயங்கத் தொடங்கினால், அந்த நபர் இல்லாத நேரத்தில் முழு செயல்பாடும் தடுமாறும். அவசர நேரங்களில் அது பெரிய சிக்கலாக மாறும். வேலைகளை பகிர்ந்தால்தான் வளர்ச்சி. அதனால், வேலைகளை பகிர்ந்து கொடுக்கும் பழக்கத்தை (Delegation of Work) நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

அதற்கான சில எளிய வழிமுறைகள்:

முதலில், உங்களுடைய வேலைகளை முழுமையாக பட்டியலிடுங்கள்.

அடுத்து, அந்த வேலைகளை திறமையுள்ளவர்களிடம் பிரித்து ஒப்படையுங்கள்.

மிக முக்கியமான முடிவுகள் அல்லது இறுதி ஒப்புதல்களுக்கு மட்டும் நீங்கள் சரிபார்க்கும் ஒரு 'Check Point' வைத்துக்கொள்ளுங்கள்.

இப்படிச் செயல்பட்டால், நீங்கள் விடுப்பில் இருக்கும் நேரத்திலும் மனஅழுத்தமின்றி இருக்க முடியும். உங்களுடன் பணிபுரிபவர்களும் புதிய திறன்களை கற்றுக்கொள்வார்கள்.

உண்மையான தலைவன் எல்லா வேலையையும் தனியாக செய்பவன் அல்ல; தான் இல்லாமல்கூட வேலைகள் சிறப்பாக நடைபெறும் அமைப்பை உருவாக்குபவன்தான்.

உண்மையில், நமக்குக் கீழ் ஒரு திறமையான அணியை உருவாக்குவது மிகப்பெரிய சாதனை. அப்போது வேலைகள் அழகாகவும் கச்சிதமாகவும் நடைபெறும்.

அதைவிட முக்கியமாக, மற்றவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் மனிதராக நாம் மாறுகிறோம்.

நான் சிலரை பார்த்திருக்கிறேன். பல வருடங்கள் ஒரே துறையில் வேலை செய்திருந்தாலும், அவர்களுக்கு தங்களுடைய வேலையின் ஒரு சிறிய பகுதியை மட்டுமே செய்யத் தெரியும்.

இதையும் படியுங்கள்:
வெற்றி வேண்டுமா? முதலில் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள்!
Delegation of Work

“அதுக்கு முன்னாடி என்ன நடக்குது, அடுத்தது என்ன நடக்குது எனக்குத் தெரியாது… நான் இது மட்டும் தான் செய்வேன்…” என்று சொல்வார்கள். அதற்குக் காரணம், அவர்களுடைய மேலதிகாரி அனைத்தையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதுதான்.

ஒரு மனிதரை மட்டும் மையமாக வைத்து இயங்கும் அமைப்புகள் வளர்ச்சியடையாது. அறிவு பகிரப்படும் இடங்களில்தான் முன்னேற்றம் உருவாகும்.

எல்லாவற்றையும் ஒருவரே கையில் வைத்திருப்பது, அவர் இல்லாத நேரத்தில் அவருக்கே எதிராக மாறக்கூடும்.

இதே அணுகுமுறையை வீட்டிலும் பயன்படுத்த வேண்டும்.

'குழந்தைகளுக்கு எதுவும் தெரியாது' என்று நினைப்பதற்குப் பதிலாக, அவர்களின் வயதுக்கேற்ற பொறுப்புகளை கொடுக்க வேண்டும்.

அவர்கள் தவறு செய்தாலும், அதைத் திருத்திக் கற்றுக்கொடுப்பது பெற்றோரின் கடமை.

குறிப்பாக, பணத்தின் மதிப்பு, செலவழிக்கும் முறை, சேமிப்பு ஆகியவற்றை சிறு வயதிலிருந்தே சொல்லித் தர வேண்டும்.

பத்து வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்து, “இந்த வருடத்திற்கான உன் செலவு இதுதான். இதை எப்படி திட்டமிட்டு பயன்படுத்தப் போகிறாய்?” என்று கேட்கலாம்.

ஆரம்பத்தில் அவர்கள் தவறு செய்யலாம். தேவையற்ற பொருட்களை வாங்கலாம். பணத்தை வீணாக்கலாம்.

இதையும் படியுங்கள்:
தன்னிறைவு: தனித்து நின்று வெல்லும் வாழ்வியல் ரகசியம்!
Delegation of Work

ஆனால், அந்த தவறுகளே அவர்களுக்கு வாழ்க்கையின் மிகப் பெரிய பாடங்களை கற்றுத்தந்து அவர்களை பொறுப்பானவர்களாக மாற்றும்.

வாழ்க்கைத் திறன்கள் அவசியம். அதேபோல், ஆண்களும் பெண்களும் இருவரும் வீட்டை நிர்வகிப்பது, சமையல் செய்வது, அன்றாட வேலைகளை கையாளுவது போன்ற வாழ்க்கைத் திறன்களை கற்றுக்கொள்ள வேண்டும்.

சிறு சிறு பொறுப்புகள், பெரிய வாழ்க்கைத் திறன்களை உருவாக்கும். எல்லாவற்றையும் நாமே செய்ய வேண்டும் என்று நினைப்பது திறமை அல்ல.

நம்முடன் இருப்பவர்களையும் வளர்த்துக்கொண்டு முன்னேறச் செய்வதே உண்மையான திறமை.

முடிவில், நம்மைச் சுற்றியிருப்பவர்கள் வளரும்போது தான் நாமும் உண்மையாக உயர்கிறோம்.

எல்லாவற்றையும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது பாதுகாப்பு போல தோன்றலாம்; ஆனால் பகிர்ந்த பொறுப்புதான் நீடித்த வெற்றியை உருவாக்கும்.

ஏனெனில்… அகந்தை போலத் தோன்றும் பல விஷயங்களின் பின்னாலும், பல நேரங்களில் ஒளிந்திருப்பது — பயம்தான்.

logo
Kalki Online
kalkionline.com