முன்மாதிரி மனிதராக வாழ்ந்து காட்டுங்கள். மகிழ்ச்சியும் வெற்றியும் நிச்சயம்!

Motivation article
Motivation articleImage credit -pixabay
Published on

நாம் ஒவ்வொருமே நமது குழந்தைகள் நன்றாகப் படிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். நமது குழந்தைகள் சாதனைகளைச் செய்யவேண்டும் என்று விரும்புகிறோம். நமது குழந்தைகள் தொலைக்காட்சியைப் பார்த்தும் மொபைலை அதிகம் உபயோகித்தும் நேரத்தை வீணாக்கக் கூடாது என்று விரும்புகிறோம். நமது குழந்தைகளுக்கு நல்ல நண்பர்கள் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். இது எல்லாமே நியாமான ஆசைகள்தான். இதை எப்படி செயலாக்குவது என்பது பலருக்குத் தெரிவதில்லை.

எந்த ஒரு குழந்தையுமே வழக்கமாக தனது அப்பாவைத்தான் முன்மாதிரியாக நினைக்கும். நம் குழந்தைகள் நன்றாகப் படிக்க வேண்டும் என்று விரும்பினால் நாம் நேரம் கிடைக்கும்போதெல்லாம் நமக்கு விருப்பமான புத்தகங்களைப் படித்து அவர்கள் மனதில் படிக்கும் ஆர்வத்தை உண்டாக்க வேண்டும். காலையில் எழுந்ததும் தவறாமல் செய்தித்தாள் வாசிக்க வேண்டும். மாலையில் வீட்டிற்குத் திரும்பியதும் அன்றாட வேலைகளை முடித்துவிட்டு சிறிது நேரம் நல்ல புத்தகங்களை படிக்க வேண்டும். அதைப் பார்க்கும் நம் குழந்தைகள் தாமும் அப்பாவைப்போல படிக்க வேண்டும் என்று நினைக்கத் தொடங்குவார்கள். விடுமுறை நாட்களில் குழந்தைகளை அழைத்து நல்ல கதைகளைச் சொல்லி அவர்களை உற்சாகப்படுத்தவேண்டும். மாதத்திற்கு ஒரு நல்ல புத்தகத்தை வாங்கி அதை குழந்தைகளுக்கு பரிசளிக்க வேண்டும். குழந்தைகளின் பிறந்தநாள் அன்று தங்கள் சக்திக்கேற்ப புத்தகங்களை வாங்கி பரிசளித்து அவர்களின் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டவேண்டும். இப்படிச் செய்தால் நீங்கள் அவர்களை திட்டவும் தேவையில்லை. அடிக்கவும் தேவையில்லை. படி படி என்று சொல்லவும் தேவையில்லை. மாறாக அவர்களாகவே சிறப்பாக படிப்பார்கள்.

அலுவலகத்திலிருந்து வந்ததும் பையை தூக்கிப் போட்டுவிட்டு நண்பர்களுடன் ஊர் சுற்றக் கிளம்பும் பல தந்தைகளை நாம் பார்க்கிறோம். பல பெற்றோர்கள் ஒரு நாளில் பெரும்பாலான நேரம் தொலைக்காட்சியின் முன்னால் உட்கார்ந்து தொடர்களையும் சினிமாக்களையும் பார்த்து நேரத்தை செலவிடுவதை நாம் பலப்பல வீடுகளில் காண்கிறோம். இதையெல்லாம் பார்க்கும் குழந்தைகள் இதுவே மகிழ்ச்சியான வாழ்க்கை என்று முடிவு செய்து விடுகின்றனர். தங்கள் பெற்றோர்களை முன்மாதிரியாகக் கொண்டு தாங்களும் அதுபோலவே இருக்கவேண்டும் என்று விரும்புகின்றனர்.

நம் குழந்தைகள் நல்ல நண்பர்களுடன் பழகவேண்டும் என்று நினைக்கும் நமக்கு முதலில் நல்ல நண்பர்கள் இருக்க வேண்டும். தம் பெற்றோர்களின் நண்பர்கள் சிறந்த மனிதர்கள் என்று குழந்தைகள் நினைக்கும் அளவிற்கு நல்ல நண்பர்களைப் பெற வேண்டும். தங்கள் நண்பர்களிடம் உள்ள சிறந்த பண்புகளை தம் குழந்தைகளிடம் எடுத்துக் கூற வேண்டும். இப்படியெல்லாம் செய்தால் குழந்தைகளும் பெற்றோரை முன்மாதிரியாகக் கொண்டு சிறந்த பண்புகளைக் கொண்டவர்களைத் தங்கள் நண்பர்களைத் தேர்வு செய்வார்கள்.

இதையும் படியுங்கள்:
ஆக்கம் தரும் விமர்சனங்கள் அவசியம் தேவை!
Motivation article

நாம் செய்யும் ஒவ்வொரு விஷயத்தையும் சிறப்பாகச் செய்து நாம் பிறருக்கு முன்மாதிரியாகத் திகழவேண்டும். பள்ளியில் ஆசிரியராய் இருந்தால் மாணவர்களிடம் அன்பாக நடந்து சிறப்பாக பாடம் நடத்தி நல்லாசிரியர் என்று பெயர் எடுக்க வேண்டும். அலுவலகத்தில் பணியாற்றினால் மனித நேயமிக்க நேர்மையான அதிகாரி என்று பெயரெடுத்து அனைவருக்கும் முன்மாதிரியாகத் திகழ வேண்டும். வியாபாரியாக இருந்தால் வியாபாரத்தில் நியாயமாய் நடந்து அனைவரும் நம்மை நாடிவரும்படி செய்ய வேண்டும். சாதாரண மனிதனாக இருந்தால் பிறரை ஏமாற்றாமல் பொய் பேசாமல் எக்காரணத்தைக் கொண்டும் பிறர் மனம் புண்படாமல் வாழ்ந்து சமுதாயத்தில் முன்மாதிரி மனிதனாகத் திகழ வேண்டும். இப்படி நடந்தால் ஊர் நம்மை மதிக்கும். உலகம் நம் முன்னேற்றத்தைக் கண்டு வியக்கும். நம் மனம் தினம் தினம் மகிழ்ச்சியில் சிறகடித்துப் பறக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com