உங்களை யாராவது குறை சொல்கிறார்கள் என்றால் அவர்களை வெறுக்காதீர்கள். உங்களை அவர்களுக்கு பிடிக்கவில்லை போலிருக்கிறது என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். உங்களை யார் குறை சொல்லப் போகிறார்கள்? உங்களுக்கு முன் பின் தெரியாத யாராவது வந்து என்ன இப்படி நாலு வார்த்தை சேர்ந்தார்ப்போல் பேசத் தெரியாமல் இருக்கிறீர்களே என்று உங்களைப் பார்த்துக் குறைப்பட்டுக் கொள்வார்களா? இல்லை. நிச்சயமாக இல்லை.
அப்படிச் சொல்லக் கூடியவர்கள் உங்களுக்கு நன்கு தெரிந்தவர்களாக இருக்கத்தான் வாய்ப்பு அதிகம். உங்கள் பெற்றோர் அப்படிச் சொல்லலாம். உங்கள் நண்பர்கள் இப்படி இடித்துக் காட்டலாம்.
ஆசிரியர்கள் இதைச் சொல்லி சுட்டிக் காட்டலாம். அதிகாரிகள் அதற்காக உங்கள் மீது எரிந்து விழலாம். இவர்கள் எல்லாருமே உங்களுக்குத் தெரிந்தவர்கள்தான், அவர்களது விமர்சனத்தின் நோக்கம் கொஞ்சம் நிதானமாகச் சிந்தித்துப் பார்த்தால் உங்களைக் குறை கூறுவது அவர்கள் நோக்கமாக இருக்காது.
உங்கள் மீதுள்ள அக்கறை. சுட்டிக் காட்டினாலாவது மாறிக் கொள்ளமாட்டீர்களா என்று அவர்களுக்கு ஏற்பட்ட தவிப்பு. குத்திக்காட்டினால் உங்களுக்கு ரோஷம் வராதா என்ற அவர்களின் எதிர்பார்ப்பு. இவற்றால்தான் அவர்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள். இது ஆக்கபூர்வமான விமர்சனம்.
உங்களை முன்னேற வைக்கவேண்டும் என்பதற்காகவே அவர்கள் இப்படி உங்களை விமர்சிக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளுங்கள். உங்களைத் திட்டியவர்களை மன்னியுங்கள். இப்போது அவர்கள் உங்களிடம் எதிர்பார்க்கும் திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கான வாயில் திறந்தாயிற்று.
நீங்கள் மட்டையைப் பிடிக்கும் விதம் சரியில்லை என்பதற்காக உங்கள் பயிற்சியாளர் கோபப்படுகிறார் என்றால் உங்களைத் திட்ட வேண்டும் என்பது அவரது நோக்கமல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
உங்களை மட்டம் தட்டுவதால் அவருக்கு என்ன மகுடமா சூட்டப் போகிறார்கள்? நம்மிடம் பயிற்சி பெறும் இவன் இப்படி அடிப்படையே தெரியாதவனாக இருக்கலாமா என்று அவர் கிடந்து பொருமுவதை உங்கள் காதுகள் கேட்க வேண்டாமா?
ஆகவே ஆக்கபூர்வமான விமர்சனங்களை அமைதியாக ஆனந்தத்துடன் ஏற்றுக்கொண்டு உங்களிடம் உள்ள குறைகளை திருத்திக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.