
வெற்றி பெற நினைப்பவர்கள் வெற்றியை மட்டுமே யோசிக்க வேண்டும். தோல்வி என்ற எண்ணத்தை கைவிட வேண்டைம். பணிபுரிந்து கொண்டிருக்கும் பொழுதோ, அல்லது வீட்டிலோ இதுவரை சொல்லி வந்த தோல்வி மந்திரத்தை வெற்றி மந்திரத்தால் இடம் மாறச்செய்யுங்கள்.
ஒரு சோதனை மிக்க சூழலை எதிர்கொள்ளும் பொழுது, "நான் வெற்றியே பெறுவேன்" என்று நினையுங்கள். "ஒருவேளை நான் தோற்று விடுவேனோ?" என்று நினைக்க ஆரம்பிக்காதீர்கள். மற்ற ஒருவரோடு போட்டி போடும்பொழுது, "வேறு எவரையும் விட நான் தாழ்ந்தவனல்ல" என்று நினையுங்கள்.
அவ்வளவுதான் நான் எங்கே உருப்படப் போகிறேன் என்றெல்லாம் இழிவாக நினைக்காதீர்கள். சந்தர்ப்பம் தலையைக் காட்டும்பொழுது, நான் நிச்சயமாக வெல்வேன் என்ற உணர்வு உங்களிடம் கொப்பளிக் கட்டும். என்னால் இது முடியவே முடியாது என்று தொய்ந்து விடாதீர்கள்.
உங்கள் எண்ண ஓட்டங்களில் "நான் நிச்சயமாக வெல்லப் போகிறேன்" என்ற எண்ணமே ஒரு பேரலையாக எழும்பி நிற்கட்டும். வெற்றியைப் பற்றிய எண்ணங்களே மனத்தை திட்டமிடச் செய்கின்றன. இறுதியில் அவை வெற்றியைக் கொண்டு வருகின்றன. தோல்வியையே எண்ணிச் செயல்படுவது இதற்கு மாறான விளைவைக் கொண்டு வகுகிறது.
உங்களைப் பற்றி நீங்கள் கொண்டுள்ள கணிப்பைவிட நீங்கள் நிச்சயமாக மேலானவர்தான் என்ற அழுத்தமான உணர்வை அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். இதற்கு முன் வெற்றி பெற்றவர்கள் எல்லோரும் அமானுஷ்ய மனிதர்கள் அல்லர். வெற்றிக்கு அமானுஷ்ய அறிவு தேவை இல்லை. அல்லது வெற்றிக்குப் பின்னணி ஒரு மாயை அல்ல. அதே போல் வெற்றிக்குப் பின்னணி குருட்டு அதிர்ஷ்டம் அல்ல.
வெற்றி அடைந்தவர்கள் யாவரும் மிகச்சாதாரண மக்களே. ஆனால் அவர்களிடமிருந்த ஒரே வேறுபாடு - அவர்கள் நம்பிக்கை கொண்டிருந்தவர்கள். தங்கள் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை உடையவர்களாக இருந்தார்கள். உங்களை என்றைக்கும்,ஆம்! என்றென்றைக்கும் குறைவாக மதிப்பிட்டுக்கொண்டு குறைந்த வருவாயைத் தேடிக்கொள்ளாதீர்கள்.
எதையும் பரந்த நோக்கில் பார்க்கக் கற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்குக் கிடைக்கப்போகும் வெற்றியின் அளவுக்கும் இந்த நம்பிக்கையின் அளவுக்கும் ஒரு சமன்பாடு இருக்கிறது. சிறிய அளவிலேயே சிந்தித்தால், கிடைக்கும் வெற்றிகளும் அந்த அளவில்தான் இருக்கும்.
பெரிதாக நினைக்கக் கற்றுக்கொண்டு பெரிய பெரிய வெற்றிகளைப் பெறுங்கள். ஒன்று மாத்திரம் உங்கள் நினைவிலிருந்து நீங்க வேண்டாம். பெரிய பெரிய யோசனைகளும் பெரிய திட்டங்களும் நீங்கள் நினைப்பதுபோல அவ்வளவு கடினமானவையே அல்ல . பெரிய யோசனைகள் சிறிய யோசனைகளைவிட அவ்வளவு கடினமானவையே அல்ல என்பதை நினைவில் வையுங்கள். இதை மறந்து விடவேண்டாம்.