
குற்றம் காணத் தொடங்கினால் அன்பு செய்ய நேரம் இருக்காது என்பது அன்னை தெரசாவின் பொன்மொழி. அதுவே அன்பு செய்ய துவங்கிவிட்டோம் என்றால் குற்றம் காணும் எண்ணமே நமக்கு வராது. அன்பான சொற்களில் தான் வாழ்க்கை வடிவம் பெறுகிறது. பிறர் மீது கொள்ளும் அன்பும், அக்கறையும்தான் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்குகிறது.
ஒருவரிடம் இருக்கும் குற்றங்களைத் தேடும்பொழுது அதில் அதிக நேரத்தை செலவிடுவோம். அதனால் அந்த நபரின் நல்ல குணங்களையும், அன்பையும் கவனிக்க தவறி விடுவோம்.
எனவே அன்பு செலுத்த விரும்பினாலோ, உறவுகளை மேம்படுத்த விரும்பினாலோ, கண்களில் விளக்கெண்ணையை விட்டுக் கொண்டு பிறருடைய குற்றங்களைத் தேடாமல் அவர்களுடைய நல்ல குணங்களை கவனிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
'குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை' என்பார்கள். அதாவது பிறருடைய குறைகளை மட்டுமே தோண்டித் துருவி பார்த்துக் கொண்டிருந்தால் உறவுகளும், நட்புகளும் நிலைக்காது. இந்த சமூகத்தில் நாம் தனிமைப்பட்டு போவோம். எந்த ஒரு மனிதரிடமும் குறைகளும், நிறைகளும் என இரண்டும் கலந்துதான் இருக்கும். குறை இல்லாத மனிதர்களே கிடையாது. எனவே குறைகளை மட்டுமே பெரிது படுத்தாமல் அவர்களிடம் இருக்கும் நல்ல குணங்களையும் பார்த்து போற்றத் தொடங்கினால் உறவுகள் நீடிக்கும்.
தரும புத்திரருக்கு கெட்டவர்களே கண்ணில் படவில்லையாம். துரியோதனனுக்கோ நல்லவர்களே கண்ணில் படவில்லையாம்! எல்லாவற்றிற்கும் நம்முடைய மனநிலைதான் காரணம். உலகில் ஒரு நல்லது இல்லாமல் கெட்டது இல்லை. அதுபோல் கெட்டது இல்லாமல் நல்லது இல்லை என்பதை உணர்ந்து குற்றம் குறைகளை அதிகம் பாராட்டாமல் பிறரிடம் இருக்கும் நல்ல குணங்களை பார்க்க கற்றுக்கொள்ள வேண்டும்.
குறைகள் சொல்லாத இடத்தில்தான் அன்பு வளரும். உலகத்தில் உள்ள மற்ற எல்லோருடைய குறைகளையும் கண்டுபிடிக்கும் சிலருக்கு தன் குறைகள் மட்டும் தெரியாமலே போய்விடும். ஒருவருடைய குறைகளைத்தாண்டி அவர்கள் மீது அன்பு செலுத்துவது 'நிபந்தனையற்ற அன்பு' என்று சொல்லப்படும். எதற்கும் கவலைப்படாமல் ஒருவரை அவர் எப்படி இருக்கிறாரோ அப்படியே முழு மனதுடன் ஏற்றுக் கொள்வதுதான் நிபந்தனை அற்ற அன்பு. எனவே அன்பை வெளிப்படுத்த, குறைகளை விட நல்ல விஷயங்களில் கவனம் செலுத்தவேண்டும்.
சிறு சிறு குறைகளைக் கண்டும் காணாமல் இருப்பவர்களையே சுற்றி இருப்பவர்கள் விரும்புவார்கள்; நேசிப்பார்கள். அவருடனேயே எப்போதும் இருக்க ஆசைப்படுவார்கள். அவர்களால் மிகவும் விரும்பப்படுவார்கள். அதனால் அவரும் நிம்மதி அடைந்து, சுற்றி இருப்பவர்களையும் மகிழ்ச்சி அடையச்செய்ய முடியும். வாழ்கின்ற கொஞ்ச நாட்களில் இதுதானே நமக்குத் தேவை.
நான் சொல்வது சரிதானே நண்பர்களே!