
இந்த பரந்து விரிந்த உலகத்தில் அன்பே எல்லாவற்றிற்கும் பிரதானமாக அமைகிறது. எனவே, ஏழை, பணக்காரர், கருப்பு, சிவப்பு என்ற பாகுபாடின்றி அனைவருடனும் அன்புடனும், மரியாதையுடனும் நடந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். இதைப் புரிந்துக் கொள்ள ஒரு குட்டி கதையைப் பார்ப்போம்.
ஒருநாள் பணக்காரர் ஒருவர் வீட்டிலிருந்து கிளம்பி காரில் செல்லாமல் காற்றாட நடந்து போகலாம் என்று முடிவு செய்து நடந்துபோய் கொண்டிருக்கிறார். அப்போது திடீரென்று அவருடைய செருப்பு அறுந்து விடுகிறது. அவருக்கோ அந்த அறுந்த செருப்பை தூக்கிப்போட மனம் வரவில்லை.
அப்போது அந்த பணக்காரர் அருகில் இருந்து ஒரு வீட்டிற்கு சென்று அந்த வீட்டில் இருக்கும் நபரிடம், ‘இன்று ஒருநாள் மட்டும் இந்த செருப்பு உங்கள் வீட்டு வாசலில் இருக்கட்டும். நாளை என்னுடைய வேலையாட்கள் வந்து இதை எடுத்து சென்று விடுவார்கள்’ என்று கேட்கிறார். அதற்கு அந்த வீட்டில் இருந்தவர், ‘ஐயா! நீங்கள் எவ்வளவு பெரிய பணக்காரர். உங்கள் செருப்பு என் வீட்டு வாசலில் இருப்பது என்னுடைய பாக்கியம்’ என்று மிகவும் சந்தோஷமாக கூறுகிறார்.
சில மாதத்தில் அந்த செல்வந்தர் இறந்து விடுகிறார். அவருடைய இறுதி ஊர்வலம் எடுத்துச் செல்லும்போது மழை அதிகமாக பெய்ததால், அவர்களால் தூக்கி கொண்டு செல்ல முடியவில்லை. அந்த செல்வந்தர் செருப்பைவிட்ட அதே வீட்டிற்கு சென்று, ‘நாங்கள் கொஞ்ச நேரம் இந்த சடலத்தை இங்கே வைக்கிறோம். மழை நின்றதும் எடுத்து செல்கிறோம்’ என்று கேட்க அந்த வீட்டில் இருந்தவர் சொல்கிறார், ‘இங்கே எல்லாம் சடலத்தை வைக்கக்கூடாது. உடனே எடுத்துக்கிட்டு கிளம்புங்க!’ என்று அவர்களை விரட்டி விடுகிறார்.
இந்தக் கதையில் சொன்னதுப்போல, உயிருடன் இருக்கும் போதுதான் மனிதனுக்கு மதிப்பு இருக்கிறது. இறந்த பிறகு எல்லோருமே சடலம் என்றே அழைக்கப்படுகிறார்கள். எனவே, இருக்கும் கொஞ்ச நாட்களில் அனைவரிடமும் அன்புடனும், மரியாதையுடனும் நடந்துக்கொள்ள வேண்டும். இதை சரியாக புரிந்துக்கொண்டால், வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். முயற்சித்துப் பாருங்கள்.