எங்கும் எப்போதும் எதற்கும் தயாராக இருங்கள். வெற்றி நிச்சயம்!

school classroom...
school classroom...image credit - tamilauthors.com
Published on

கேள்வி கேட்டால் சிலருக்குக் கோபம் வரும். பள்ளிக் கூடங்களில் கூட கேள்வி கேட்க அனுமதிக்கப் படுவதில்லை. ஆசிரியர் பாடம் நடத்திய பிறகு கேள்வி பதிலாக இரண்டையும் கொடுக்கிறார். இந்தக் கூத்துக்கு நோட்ஸ் என்று அச்சிட்டு விற்று ஆசிரியரே அவசியம் இல்லை என்று அவமானப்படுத்தவும் ஒரு கூட்டம் தயாராக இருக்கிறது. பாடம் புரிந்து கொண்டு, மாணவன் நன்றாகக் கேள்வி கேட்கத் தொடங்கினால் அவன் அறிவு வளரும். ஏன்? எப்படி? எதற்காக?, எவ்வாறு என்று விதவிதமாக கேள்விகளுக்குப் பதில் சொல்லும் பொறுமையோ திறமையோ பலருக்கும் இல்லாமல் போனதுதான் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை.

மரத்திலிருந்து பழம் ஏன் கீழே விழுகிறது என்று ஒருவன் கேட்டால்தான் புவியீர்ப்பு சக்தி அறியப்பட்டது. பறவைகள்  மட்டும் பறக்கின்றதே. மனிதன் ஏன் பறக்க முடியவில்லை  என்ற கேள்வி விமானத்தை விளைவித்தது. மெய்ஞானிகள் மட்டும் என்ன? உபநிடதங்கள் கேள்வி பதில் பாணியில் இருப்பது எதனால்? கேள்விகளே சாவிகளாக விஞ்ஞானியும், கேள்விகளே வேள்விகளாய் மெய்ஞானியும் வாழ்ந்திருந்ததை மறக்க வேண்டாம்.

நான் யார்? என்ற கடுமையான கேள்விதான் வெங்கட்ரமணனை பகவான் ரமணர் ஆக்கியது. நான் யார் என்ற கேள்விதான் திருவாசகம் பாடிய மாணிக்கவாசகரை மலர வைத்தது. மீன் தண்ணீரில் ஏன் வாழ்கிறது என்று ஒற்றை வரியில் பாடம் நடத்தினால் போதாது. தரையில் ஏன் வாழமுடியாது இப்படி மாணவன் கேள்விகளுக்கு தடைபோட்டு எல்லாவற்றையும் ஆசிரியரே தருவது சரியல்ல. கேள்விகளையும் ஆசிரியரே கொடுத்தால் மாணவன் அரை அங்குலம் கூட அறிவை நோக்கி நகர மாட்டான். மாறாக மீன் ஏன் தண்ணீரில் வாழ்கிறது? தரையில்  ஏன் வாழ்வதில்லை என்று யோசித்தால் தரையில் வாழும் உயிர்களுக்கு நுரையீரல் அவசியம் என்ற பொரி தட்டும்.

ஒரு சின்னக்கதை. இரண்டு குருமார்கள் எதிர் எதிர் மடாலயத்தில் மாணவர்களுக்குப் பாடம் நடத்தினர். அவர்கள் இரண்டு பேர்களின் மனமும் எதிர் எதிராக இருந்தது. அதனால் தங்கள் மாணவர்களை  எதிர் மடாலய மாணவர்களோடு பேசக்கூடாது என கட்டளை இட்டனர். ஒரு 10 வயது மாணவன் எதிர் மடத்தின் 7 வயது மாணவனிடம் எங்கே போகிறாய் என கேட்டான். அவன் காற்று எங்கே கொண்டு போகிறதோ அங்கே போகிறேன் என்றான்.

தனது ஆசிரியரிடம் மாணவன் வந்து நடந்ததைகூறி இப்படிப் பேச நீங்கள் கற்றுத்தரவில்லையே என்றான். உடனே ஆசிரியர் நீ காற்று இல்லையென்றால் என்ன செய்வாய்  என்று நீ கேட்டிருக்க வேண்டும் என்றார்.

மறுநாள் மாணவன் எதிர்மட மாணவனிடம் எங்கே போகிறாய் என கேட்க கால்கள் என்னை எங்கு கொண்டு செல்கிறதோ  அங்கே செல்வேன் என்றான். கேள்வி கேட்டவன் திரும்ப. ஆசிரியரிடம் ஓடினான் .மடையா இதற்கு நீ கால்கள் இல்லையென்றால் என்ன செய்வாய் என்று கேட்டிருக்க வேண்டும் என்றார்.

இதையும் படியுங்கள்:
இஞ்சி, பூண்டு, மிளகு ருசிக்காக மட்டுமல்ல; ஆரோக்கியம் பெறவும்தான்!
school classroom...

மறுநாள் பதில் தயாராக வைத்திருந்த மாணவன் எதிர் மாணவனிடம் எங்கே போகிறாய் என கேட்க அவன் கறிகாய் வாங்க என்று சொல்லி அவனை வீழ்த்தினான். எதற்கும் தயாராக இருக்கும் எதிர் மடாலய மாணவனை தயாரிக்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லிப் பழக்கப்பட்ட மாணவனால் வெல்ல முடியவில்லை. வாழ்க்கை ஒரு வித்யாசமான பரீட்சை. இங்கே கேள்வி பதில் இரண்டையும் தயாரித்து விட முடியாது. நீங்கள்தான் தயாரிக்க வேண்டும். எங்கும் எப்போது எதற்கும் தயாராக இருங்கள். வெற்றி நிச்சயம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com