
வண்ணங்கள் எப்படி மலர்களுக்கு அழகு தருகிறதோ அப்படியே நல்ல எண்ணங்கள் நம் உடலுக்கும் மனதுக்கும் அழகு தரும். நல்ல எண்ணங்கள் ஈடேற வேண்டும் என்றால் நல்ல எண்ணங்களை மட்டுமே மனதில் விதைக்க வேண்டும்.
நல்ல எண்ணங்களை விதைத்தால் நல்ல செயலை அறுவடை செய்யலாம். நல்ல செயலை விதைத்தால் நல்ல பழக்கத்தை அறுவடை செய்யலாம். நல்ல பழக்கத்தை விதைத்தால் நல்ல குணத்தை அறுவடை செய்யலாம். நல்ல குணத்தை அறுவடை செய்தால் நல்ல வாழ்க்கை நமக்கு கிடைக்கும்.
மனம் ஒரு குரங்கு. நல்ல எண்ணங்கள் கெட்ட எண்ணங்கள் என்று மாறி மாறி வந்து அலை மோதும் . கெட்ட எண்ணங்களை அகற்றி நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். எதிர்மறையான எண்ணங்களை வளர விடக்கூடாது.
சிலர் தங்களுக்கு கிடைத்த சாதாரண வெற்றியைக் கூட நன்றியுடன் நினைத்து கொண்டாடுவர். வேறு சிலர் அதில் திருப்தி அடையாமல் இன்னும் அதிக அளவில் வெற்றி கிடைத்திருக்கலாம் என்று எண்ணி கிடைத்த வெற்றிக்கு கூட மகிழ்ச்சியாக இருக்க மாட்டார்கள்..அது ஆரோக்கியமான மனநிலை அல்ல.
நம் மனதில் ஏதேதோ எண்ணங்கள் அலைபாய்ந்து கொண்டுதான் இருக்கிறது. எண்ணங்கள்தான் மகிழ்ச்சி மற்றும் சோர்வு இரண்டையும் தருகிறது.
நேர்மறையான எண்ணங்களை அதை செயல்படுத்தும்போது வாழ்க்கை அழகாக மாறும். நமக்கு நல்லதே நடக்கும் என்று மனதில் நினைத்து கொண்டு இருந்தால் கண்டிப்பாக நல்லதுதான் நடக்கும்.
ஒரு கதை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒரு மனிதன் நடந்து கொண்டிருந்தபோது வெயிலாக இருந்ததால் ஒரு மர நிழலில் படுத்து உறங்கினானாம். அப்போது குளிர்ந்த காற்று வீசியது. ஆஹா.. இப்போது குளிர்ந்த நீர் கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தானாம். குளிர்ந்த தண்ணீரும் கிடைத்தது. இப்போது சாப்பிட நல்ல உணவு கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தானாம். நல்ல உணவும் கிடைத்தது. ஏனெனில் அது கேட்டதை தரும் கற்பக மரம். திடீரென அவன் மனதில் புலி வந்து அடித்து இவிடுமோ என்று நினைத்தானாம். புலி வந்து அவனை அடித்தது. இதன் மூலமாக புரிவது என்ன என்றால் நல்லது நினைத்தால் நல்லது நடக்கும். கெடுதல் நினைத்தால் கேடு விளைவிக்கும்.
சரி நல்ல எண்ணங்களை எப்படி வளர்த்துக் கொள்ளவேண்டும். எப்போதும் இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியாக இருத்தல் , மற்றவருடன் தன்னை ஒப்பிட்டுப் பார்த்து சோர்வுடன் இல்லாமல் இருத்தல், தோல்வி அடைந்தால் கூட வெற்றிக்கான வழியைத் தேடுதல் இவையே நல்ல எண்ணங்கள் உருவாக வழி வகுக்கும்..
நாம் நம் ஐம்புலன்களால் உணர்ந்த ஒரு விஷயத்தை நமது அறிவால் வளர்த்துக் கொண்டால் அதிலிருந்து எண்ணங்கள் பிறக்கிறது.
உள்ளுவது எல்லாம்
உயர்வுள்ளல் மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து
எண்ணுதல் எல்லாம் உயர்வாகவே இருக்கவேண்டும். கெட்ட எண்ணங்களை அடக்கும்போது சிறந்த எண்ணங்கள் உருவாகும்.
சிந்தை தெளிவாக்கு
அல்லால் இதைச் செத்தவுடலாக்கு என்றார் பாரதி. மனதில் உயர்ந்த எண்ணங்களை உருவாக்கி அதை செயல்படுத்தினால் நல்ல ஒரு ஆரோக்கியமான சமுதாயம் உருவாகும்.