
நம்முடைய வாழ்வில் பல நேரங்களில் நாம் முன்பே முயற்சித்து தோல்வி அடைந்த விஷயங்களை நினைத்து பயந்துக்கொண்டே மென்மேலுமே முயற்சிப்பதை கைவிட்டு விடுகிறோம். இந்த எண்ணம்தான் நம் வளர்ச்சிக்கு பெரிய தடையாக இருக்கிறது. எத்தனை முறை தோல்வியடைந்தாலும், ஜெயிக்க முடியும் என்ற உந்துதலோடு முயற்சிக்க வேண்டியது அவசியமாகும். இதை புரிந்துக்கொள்ள ஒரு குட்டி கதையை பார்ப்போம்.
யானைப் பாகனிடம் ஒரு சிறுவன் கேட்கிறான், ‘யானையின் காலில் சங்கிலி கட்டியிருக்கிறீர்களே? யானையால் அதை அறுத்துக்கொண்டுபோக முடியாதா? என்று கேட்கிறான்.
அதற்கு யானைப் பாகன் சொல்கிறார், யானையால் அந்த சங்கிலியை அறுத்துக் கொண்டு போகமுடியும். ஆனால், யானை போகாது. ஏனெனில், யானை குட்டியாக இருந்த போது இதைப்போலவே யானையின் காலை சங்கிலியால் கட்டிப்போடுவார்கள்.
அப்போது அந்த குட்டி யானை சங்கிலியை அறுத்துக் கொண்டுபோக எவ்வளவோ முயற்சிக்கும். ஆனால், அதற்கு போதிய பலம் இல்லாததால் முயற்சியை கைவிட்டுவிடும். அந்த யானை, ‘நம்மால் முடியாது’ என்ற முடிவிற்கு வந்துவிடும். இதனால் யானை சங்கிலியை அறுத்துக்கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தை கை விட்டுவிடும்.
அந்த குட்டி வளர்ந்து பெரிய யானையாக மாறிய பிறகும் அது சிறுவயதில் முயற்சித்து தோற்றதை எண்ணி அதனுடைய தற்போதைய வலிமையை உணராமல், ‘தன்னால் முடியாது’ என்று நினைத்து சங்கிலியை அறுக்க முயற்சிக்காது.
நம்முடைய வாழ்க்கையில் நாமும் அந்த யானயைப்போல தான் பல சமயங்களில் நடந்துக் கொள்கிறோம். எத்தனையோ முயற்சிகளை நாம் எடுத்திருப்போம். அதில் ஒரு சின்ன தோல்வியை பார்த்தாலும், ‘இனி அவ்வளவு தான் எல்லாம் முடிந்தது’ என்று முடிவுக்கு வந்து விடுகிறோம்.
நம்மால் முடியாது, நமக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது, இதெல்லாம நமக்கு பெரிய விஷயம் என்பது போன்ற அவநம்பிக்கைதான் நாம் மேலே வருவதற்கு பெரிய தடையாக உள்ளது. எனவே, இவற்றையெல்லாம் தூக்கிப் போட்டுவிட்டு தோல்வியைக் கண்டு கவலைப்படாமல் முயற்சித்துப் பாருங்கள். நிச்சயம் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.