
மேலை நாடுகளுக்கு சுற்றுலா அல்லது வேலை காரணமாக செல்பவர்கள் முதலில் அங்கு நிலவும் நடைமுறைகளையும், சட்ட திட்டங்களையும் அறிந்து கொண்டு செல்வது நல்லது. அப்படி உலகில் சில நாடுகளில் நிலவும் நடைமுறைகள் உங்களது பார்வைக்கு.
ஜப்பான் நாட்டில் வாயைத் திறந்து சப்தமாக சிரிப்பது அநாகரிகமான செயலாக கருதப்படுகிறது. ஜப்பானில் ஹோட்டல்களில் "டிப்ஸ்"கொடுப்பது அநாகரிகம்.
சிங்கப்பூர் நாட்டில் பொது கழிப்பறைகளை பயன்படுத்தி விட்டு சுத்தம் செய்யாமல் வெளியேறுவது தண்டனைக்குரிய குற்றமாகும். சூயிங்கம் மெல்வது அங்கே தடை செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் , அன்பளிப்பாக கடிகாரம் தருவதை விரும்ப மாட்டார்கள். காரணம், கடிகாரம் மரணத்தை நினைவுபடுத்துவதாக அங்கு கருதுகின்றனர்.
கையில் பிரஸ்ஸான காய்கறிகள், பழங்களை, தேன் மற்றும் இறைச்சியை தூக்கிச் செல்வது நியூசிலாந்து நாட்டில் குற்றமாக கருதப்படுகிறது.அப்படி கொண்டு சென்றால் அதை பறிமுதல் செய்து விடுவார்கள்.
ஆஸ்திரேலியாவில் விமானங்கள் மற்றும் கப்பல்களில் பயணம் செய்யும்போது சமைத்த உணவை கொண்டு செல்வது குற்றமாக கருதப்படுகிறது.
இந்தியாவில் பிரபலமாக இருக்கும் மசாலாப் பொருளான கசகசாவை அரபு நாடுகளில் கொண்டு செல்ல முடியாது. அதை வைத்து இருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.
வெறிநாய்கடிகள் இல்லாத முதன்மையான நாடு நார்வே. காரணம் இங்கு நாய் வளர்க்க ஏகப்பட்ட கெடுபிடிகள் உண்டு.
சில நாடுகளில் தலைவலி மாத்திரைகள், வயிற்று வலி மாத்திரைகளை கூட வைத்திருக்க கூடாது என்று விதிகள் உண்டு.
டென்மார்க் நாட்டில் நீங்கள் காரை ஸ்டார்ட் செய்து ஓட்டுவதற்கு முன்பு உங்கள் அல்லது வேறு யாருடைய குழந்தைகளாவது காரின் அடியில் இருக்கிறதா? என்று பார்த்து விட்டுதான் காரை எடுக்க வேண்டும் என்று சட்டம் உள்ளது. இல்லாவிட்டால் சிறை தண்டனை உண்டு.
தாய்லாந்து நாட்டில் ஒரு வேடிக்கையான சட்டம் உள்ளது. வீட்டிலிருந்து ஒருவர் உள்ளாடைகளை அணியாமல் வெளியே செல்ல முடியாது. சட்டை அணியாமல் அங்கே கார் ஓட்ட முடியாது.
உக்ரைன் நாட்டில் மறுப்பதை நாகரீகமான முறையில் வெளிப்படுத்துவார்கள் ஒருவர் ஒரு வீட்டில் பெண் கேட்கிறார் என்றால் "சம்மதம்" இல்லை என்பதை தெரியப்படுத்த அவர்கள் ஒரு பூசணிக்காயை கொடுத்து அதை தெரியப்படுத்துவார்கள். இதுபோல் தங்களுக்கு எதிலும் விருப்பமில்லை என்பதை தெரிவிக்க பூசணிக்காயை கொடுத்தே தெரிவிக்கிறார்கள்.
அமெரிக்காவில் ஒருவருக்கு அன்பளிப்பு தருவதாக இருந்தால். அதை வாங்கிய கடை ரசீதுகளுடனே தருவர். ஏனெனில், அது பிடிக்கவில்லை என்றால், அதே கடையில் கொடுத்து மாற்றிக்கொள்ளதான். அமெரிக்கர்கள் நலம் விசாரிக்கும்போது உங்களை மட்டுமே நலம் விசாரிப்பார்கள். "அம்மா, அப்பா எப்படி இருக்காங்க என்று நலம் விசாரிக்க மாட்டார்கள். அதை அவர்கள் அநாகரிகமாக கருதுகின்றனர்.
இங்கிலாந்து நாட்டில் கார் ஓட்டும்போது தேவையில்லாமல் "ஹாரன்"அடிப்பதை அநாகரிகமாக கருதுகின்றனர். இங்கு ஒருவர் கைக்குழந்தையுடன் சாலையை கடக்கும்போது. நீங்கள் உங்களது காரை உடனே நிறுத்தி அவரை செல்ல அனுமதிக்கவேண்டும்.
சீனாவில் நீங்கள் அன்பளிப்பாக எந்த நிற மலர்களையும் தரலாம். ஆனால் வெள்ளை நிறத்தில் மட்டும் மலர்களை கொடுக்கக் கூடாது. காரணம் வெள்ளை நிறம், அங்கு துக்கத்தின் சின்னம்.