துணிவுடன் செயல்படுவது என்பது தோல்வி பயம்கண்டு துவளாது, அந்த பயத்தையும் மீறி வெற்றியை நோக்கி நடவடிக்கைகளை மேற்கொள்வதாகும். தைரியமுடைய வர்களே தங்களுக்கு ஏற்படும் இடர்களைத் துணிவுடன் எதிர்கொள்கின்றனர். தேவை ஏற்பட்டால் குரல் கொடுக்கவும், அமைதி காக்கவும் தைரியம் தேவை.
துணிவு என்பது கண்மூடித்தனமாக எதிர்ப்புகளையும் , ஆபத்துக்களையும் இனம் காணாமல் செயலில் குதிப்பதல்ல. அது சரியான வேளையில், சரியான தருணத்தில் ,தோல்வியைக் கண்டு அஞ்சாமல், செய்ய வேண்டிய செயலைச் செய்வது. துணிவுள்ளபோது, உள்ள மனது தன்னம்பிக்கையை ஊட்டுகிறது. சாதிக்க வேண்டும் என்ற அவா எழுகிறது. செயல் வேகம் பெறுகிறது. உடல் சோர்வை மறக்கிறது. நடவடிக்கைகளில் உணர்ச்சி கலந்த உறுதி தென்படுகிறது. துணிவுடன் செயலில் இறங்கும்போது பாதி வெற்றி கிடைத்து விடுகிறது.
துணிவு என்று நாம் கருதும் செயல்கள் கூட ஒருவருக்கு ஒருவர் வேறுபடுகிறது. எனினும் தேவையானவற்றை செய்ய நாம் துணிவு பெற்றாக வேண்டும். பல்வேறு நற்பண்புகளை கற்பது போல் துணிச்சலை நாம் கற்பதன் மூலமும், பழகுவதன் மூலமும், முயல்வதை அதிகரிக்கலாம். துணிச்சலால் நம் எல்லைகள் விரிவாவதையும், திறன்கள் அதிகரிப்பதையும் உணரலாம். புதிய நடைமுறைகளைப் பின்பற்றி வெற்றிக்கனியை இலகுவாகப் பெறும் தருணங்கள் இதன் மூலம் அதிகரிக்கும். துணிவு ஏற்படும்போது மாற்றத்தைக் கண்டு பயப்படாமல் அதை முன்னேற்றத்திற்காக பயன்படுத்துகிறோம்.
இதுவரை யாரும் செல்லாத பாதையைக் கண்டுபிடித்து அதில் பயணிப்பதற்கும்,வித்யாசமாக சிந்திப்பதற்கும், எதிர்ப்படும் சிக்கல்களைத் தீர்க்கலாம் என்று நம்புவதற்கும், முடியாது என்ற எண்ணத்தை மனதை விட்டு அகற்றவும் துணிவு தேவை. சமூக ஏற்றத் தாழ்வுகளை அகற்றவும், குற்றங்களுக்கு எதிராக குரல் கொடுக்கவும் துணிவு தேவை. ஒரு செயலை விரும்பிச் செய்கிறபோது அச்செயலை முடிப்பதற்காக உறுதியும் துணிவும் அதிகரிக்கிறது. சுதந்திரம் பறிக்கப்படும் போதும், அன்பு கொண்டுள்ள ஒன்று அவமானத்திற்கு ஆளாகும் போதும், மனிதன் பலமடங்கு சக்தி பெற்று எதிர் செயல்களை செய்வதற்கான துணிச்சலை பெறுகிறான்.
துணிச்சலான செயல்கள் குறித்து கவனமாக இருக்க வேண்டும். நேரிய, சுயநலமற்ற செயல்களே துணிவுக்கு அங்கீகாரம் தரும். எல்லாச் சூழ்நிலைகளிலும் சமூக ஒழுக்கங்கள் குறித்தும், தனிமனித நற்பண்புகள் குறித்தும் கவனமாக இருக்க வேண்டும். துணிச்சல் காரணமாக உள் மனது சமூக கட்டுக்களை மீற ஆணையிடும். உதாரணமாக ஒரு சிறுவன் துணிச்சல் காரணமாக ஒரு பெரியவரை அவமானப்படுத்தினால் அது ஏற்றுக் கொள்ளக்கூடிய செயலாவதில்லை. கண்மூடித்தனமான துணிச்சல் கெடுதலை விரைவாக தருவிக்கும். துணிவு பயத்திற்கு எதிரி. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்ற நிலை ஏற்படாமல், துணிந்தவனுக்கு தூக்கு மேடையும் பஞ்சு மெத்தை என்ற நிலைக்கு, நம் எண்ண ஓட்டம் மாறக் காரணமானது நம் துணிவுதான்.