

பிரபல நாடக ஆசிரியர் ஜார்ஜ் பெர்னாட்ஷாவுக்கும், இங்கிலாந்து பிரதமர் சர்ச்சிலுக்கும் இடையே அரசியல் கருத்து வேறுபாடுகள் நிறைய உண்டு. ஆகவே, வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்வது அவர்களின் வழக்கம். அப்போதும் கூட அந்தத் தாக்குதல் நளினமாகவும், நாகரிகமாகவும் இருக்கும்.
ஒருமுறை பெர்னாட்ஷாவின் புதிய நாடகம் ஒன்று அரங்கேறிய போது, இரண்டு இலவச டிக்கெட்டுகளைச் சர்ச்சிலுக்கு அவர் அனுப்பி வைத்தார். அத்துடன் ஒரு கடிதத்தில், "இரண்டு டிக்கெட்டுகளை அனுப்பி இருக்கிறேன். ஒன்று உங்களுக்காக; மற்றொன்று உங்களின் நண்பருக்காக — நண்பர் யாராவது உங்களுக்கு இருந்தால்!" என்று எழுதினார்.
சர்ச்சில் அந்த இரண்டு டிக்கெட்டுகளுக்கும் நன்றி தெரிவித்து, அவற்றைப் பெர்னாட்ஷாவிடமே திருப்பி அனுப்பினார். அத்துடன் ஒரு கடிதத்தையும் இணைத்தார். அதில், "முதல் நாள் நாடகத்திற்கு என்னால் வர இயலவில்லை. இரண்டாம் நாள் நாடகத்திற்கு வருகிறேன் — இரண்டாம் நாளும் உங்கள் நாடகம் நடந்தால்!" என்று குறிப்பிட்டிருந்தார்.
இருவரும் ஒருவர் மீது மற்றொருவருக்குள்ள மனத்தாங்கலை வெளிப்படுத்திக்கொண்ட விதம் சுவையானது. கடுமையான விஷயங்களைக் கூட நகைச்சுவையுடன் வெளியிடுவதில் பெர்னாட்ஷா வல்லவர். அவர் மீது காதல் கொண்ட உலகப் புகழ்பெற்ற நடிகை ஒருத்தி அவருக்கு ஒரு கடிதம் எழுதினாள். அந்தக் கடிதத்தின் சாரம் இதுதான்:
"நீங்களும் நானும் திருமணம் செய்துகொண்டால் அது உலகுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நமக்குப் பிறக்கும் குழந்தைகள் என்னைப் போல அழகும், உங்களைப் போல அறிவும் உடையவர்களாக இருப்பார்கள். அது மனித இனத்துக்கே சிறப்பைத் தரும்."
இதற்குப் பெர்னாட்ஷா அளித்த பதில் (Bernard shaw funny reply): "நீங்கள் சொல்வது மெய்தான். ஆனால், பிறக்கும் குழந்தை என்னைப் போல உருவமும், உங்களைப் போன்ற அறிவும் உடையதாகப் பிறந்துவிட்டால் என்ன செய்வது என்பதுதான் என்னுடைய கவலை!"
இவற்றிலிருந்து நாம் அறிவது என்னவென்றால், ஒருவரை ஒருவர் குறை சொல்லும்போது கூட, மனம் புண்படாத வகையிலும் ரசிக்கும்படியான நகைச்சுவையுடனும் சொல்ல முடியும் என்பதே.
வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போலக் குறைகளைச் சுட்டிக்காட்ட வேண்டும். குறைகளைச் சுட்டிக்காட்டாமலோ, தவறுகளைக் கண்டிக்காமலோ இருக்க முடியாது. அப்படிச் செய்கின்ற போது, அக்குறைகளையும் தவறுகளையும் உணரச் செய்வதுதான் நோக்கமாக இருக்க வேண்டுமே தவிர, மற்றவர்களுக்குத் துன்பத்தை ஏற்படுத்துவது நோக்கமாக இருக்கக் கூடாது.
உலகப் புகழ்பெற்ற தளபதியாகவும், தலைசிறந்த நிர்வாகியாகவும் விளங்கிய நெப்போலியன், ஆட்சி செய்யும் கலை பற்றி நன்கு அறிந்தவன். லட்சக்கணக்கான மக்களைத் தன் சொற்கேட்டு நடக்க வைத்த அவன் சொல்லுகிறான்:
"வெல்வெட் உறை அணிந்த இரும்புக் கரத்துடன் மக்களை ஆள வேண்டும்."
அதாவது, உன்னுடைய செயல் உறுதியானதாக இருக்க வேண்டும்; ஆனால், தோற்றத்தில் அது மிருதுவானதாகவும் கவர்ச்சியானதாகவும் இருக்க வேண்டும் என்கிற கருத்தில் நெப்போலியன் இதைச் சொல்லியிருக்கிறான். மனிதர்களை நமக்குக் கட்டுப்படுத்தி வைக்கும்போது கூட, கவர்ச்சியான மற்றும் மிருதுவான தன்மையைக் கையாள்வதே சிறந்தது என்பதே நெப்போலியன் போதிக்கும் பாடம்.