உலகில் அதிக நேரம் தூங்கும் விலங்குகள் பற்றி தெரியுமா குட்டீஸ்!

Animals that sleep for very longtime
Animals that sleep for very longtime
Published on

தூக்கம் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல. விலங்குகளுக்கும் அத்தியாவசியமான ஒன்று. அனைத்து உயினங்களுக்கும் ஆற்றல் சேமிப்பு, வளர்ச்சி மற்றும் உயிர்வாழ்வதற்கான முக்கிய அங்கமாக தூக்கம் உள்ளது. உலகில் வாழும் ஒவ்வொரு உயிரினங்களின் தூக்க நேரம் அவற்றின் உணவு, உடலமைப்பு, சுற்றுசூழல், தகவமைப்பு  போன்றவற்றுக்கு ஏற்றாற்போல மாறுபடலாம். அந்த வகையில், உலகில் அதிக நேரம் தூங்கும் விலங்குகளை பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

அதிக நேரம் தூங்கும் விலங்குகள்:

கோலா கரடிகள்:  அதிக நேரம் தூங்கும் விலங்குகளில் முதலிடத்தில் இருப்பவை இவைதான். ஒரு நாளைக்கு 22 மணி நேரம் வரை தூங்கக்கூடியவை. யூகலிப்டஸ்   இலைகள்தான் இவற்றின் பிரதான உணவு. இந்த இலைகளில், குறைந்த அளவு ஊட்டச்சத்துக்களும், அதிகளவு நார்ச்சத்தும் இருப்பதால், இவற்றை  ஜீரணிக்க அதிக ஆற்றல் இதற்கு தேவைப்படுகிறது. எனவே ஆற்றலை தக்க வைத்துக் கொள்ள கோலாக்கள் அதிக நேரம் தூக்கத்தில் செலவிடுகிறதாம்.

ப்ரௌன் வௌவால்: ப்ரௌன் வௌவால் ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கில் பூச்சிகளை உண்ணக்கூடியவை. இரவு நேரத்தில் உணவு தேடுவதற்காக பகலில் அதிக நேரம் தூங்குவதன் மூலம், அதிக ஆற்றலை சேமித்து வைக்கிறது. இவை சுமாராக 19 முதல் 20 மணிநேரம் வரை தூங்கக்கூடியவையாம்.  

ஆப்பிரிக்க சிங்கம்: சிங்கங்கள் பெரும்பாலும் கூட்டமாக உறங்குகின்றன. இவை பெரிய இரையை வேட்டையாடி உண்டபின், ஆற்றலை திரும்பப் பெற அதிக நேரம் உறங்குகின்றன. இதன் வழியாக, வேட்டையாடுவதற்கும் பாதுகாப்பிற்கும் ஆற்றலை சேமிக்கின்றன. ஆப்பிரிக்க சிங்கங்கள் ஒரு நாளைக்கு 20 மணி நேரம் வரை தூங்குகின்றன.

இராட்சத ஆர்மடில்லோ (Giant Armadillo): உலகின் மிகப்பெரிய இனமான இராட்சத ஆர்மடில்லோ தினமும் 18 மணிநேரம் தூங்குகின்றன. பொதுவாக, தீவிரமான வானிலை மற்றும் வேட்டையாடுபவர்களிடமிருந்து தன்னை தற்காத்துக் கொள்வதற்காக நிலத்தடித் துளைகளில் இவை தூங்குகின்றன.

ஒபோசம்: ஒபோசம் வட அமெரிக்காவை பூர்விகமாகக் கொண்ட உயிரினம். ஒரு நாளைக்கு 18 முதல் 20 மணிநேரங்களை தூக்கத்திற்காக அவை ஒதுக்குகின்றன. மற்ற நேரங்களை உணவு தேடுவதற்காக பயன்படுத்திக் கொள்கின்றன. இவை, பகலில் ஓய்வெடுத்து, இரவு நேரங்களில் உணவைத் தேடுகின்றன.

இதையும் படியுங்கள்:
நினைவாற்றலை அதிகப்படுத்தும் 6 விளையாட்டுகள். நீங்களும் விளையாடலாமே குட்டீஸ்!
Animals that sleep for very longtime

மலைப்பாம்பு: இவை தினமும் 18 மணி நேரம் வரை தூங்கக்கூடியவை. பெரும்பாலும், மலைப்பாம்புகள்  மெதுவான வளர்ச்சிதை மாற்றங்களைக் கொண்டவை. அதோடு,  உணவு கிடைக்கும் வரை ஆற்றலை சேமிக்க அதிக நேரம் தூங்குகின்றன.

ஆந்தை குரங்கு (Owl Monkey): இவை பழுப்பு நிற பெரிய கண்களைக் கொண்டவை.  இந்தக் கண்கள் அவற்றின் இரவு நேர பார்வைத்திறனை மேம்படுத்துகின்றன. இவை இரவு நேரத்தில் முழித்திருந்து பகலில் ஓய்வெடுக்கின்றன. எனவே, இரவு நேரக் குரங்குகள் என்றும் அழைக்கப்படுகின்றன. ஆந்தை குரங்கு ஒரு நாளைக்கு 16 முதல் 17 மணிநேரம் வரை தூங்கக் கூடியது. 

புலி: புலி தனது உணவை வேட்டையாடுவதற்கென்று அதிக ஆற்றலை பயன்படுத்துகிறது. எனவே, பிற நேரங்களில் ஆற்றலை சேமித்து வைக்க உறங்குகின்றன. பெரும்பாலும், இவை பகல் நேரங்களில் அதிக சுறுசுறுப்பாக செயல்படுகின்றன. ஒரு நாளைக்கு 16 மணி நேரம் வரை தூங்குகின்றன.

ட்ரீ ஷ்ரூ (Tree Shrew): தென்கிழக்கு ஆசியாவை பூர்வீகமாகக் கொண்ட ‘ட்ரீ ஷ்ரூ’ அணில்களைப் போலவே தோற்றமளிக்கின்றன. இவை மிகச்சிறிய பாலூட்டி இனங்களில் ஒன்றாகும். ஆற்றலை சேமிக்கவும், சுறுசுறுப்பாக செயல்படவும் கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 16 மணி நேரம் தூங்குகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com