
சில நேரங்களில் நம்முடைய வாழ்க்கை நம் கட்டுப்பாட்டில் இல்லாமல் போகலாம். சூழ்நிலை காரணமாக அவ்வாறு நடக்கும்போது நம்மால் எதை கட்டுப்படுத்த முடிகிறதோ அதில் கவனம் செலுத்துவது சிறந்ததாக இருக்கும். நம்மால் கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலைகளை எண்ணி வருத்தப்பட தேவையில்லை. இதை தெளிவாகப் புரிந்துக்கொள்ள ஒரு குட்டிக் கதையை பார்ப்போம்.
ஒருநாள் இளைஞன் ஒருவன் கடலுக்கு அருகில் இருந்த பாறையில் அமர்ந்து கடலை பார்த்தவாறு யோசித்துக் கொண்டிருந்தான். அந்நேரம் சரியாக மீனவன் ஒருவன் தன் நண்பர்களுடன் கடலுக்குள் மீன் பிடிக்க படகை தயார் செய்துக்கொண்டிருந்தான்.
அப்போது அந்த மீனவன் இந்த இளைஞனை பார்க்க, அவன் அமர்ந்திருக்கும் இடமோ பலர் தற்கொலை செய்துக் கொள்வதற்காக தேர்வு செய்யும் இடமாகும். சந்தேகப்பட்ட மீனவன் அந்த இளைஞனிடம் சென்று பேச்சுக் கொடுக்கிறான். இருப்பினும், அந்த இளைஞன் எதையும் காதில் வாங்காமல் கடலையே பார்த்துக் கொண்டிருக்க மீனவனுக்கு புரிந்துவிட்டது.
‘இங்கிருந்து கடலை பார்த்துக் கொண்டிருப்பதற்கு பதில் என்னுடன் படகில் கடலுக்குள் வருகிறீர்களா?’ என்று மீனவன் கேட்க இளைஞனும் சம்மதிக்கிறான்.
மீனவனுடன் நடுக்கடலுக்கு செல்கிறான் அந்த இளைஞன். இப்படி போய்க்கொண்டிருக்க திடீரென்று வானம் இருட்டி மழை, காற்று என்று வீசத்தொடங்குகிறது. இதனால் அந்த மீன் பிடிக்கும் படகு ஒருபக்கமாக சாயத் தொடங்குகிறது. இதைப் பார்த்த இளைஞனுக்கு பதற்றம் ஏற்படுகிறது. ஆனால், அந்த சமயம் மீனவர்கள் கடலிலே படகை சரியாக செலுத்துவதிலேயே கவனமாக இருந்தனர். சற்று நேரத்தில் எல்லாம் ஓய்ந்து போகிறது. வானிலை சகஜ நிலைக்கு திரும்புகிறது. இப்போது இளைஞனுக்கு ஒரு கேள்வி தோன்றுகிறது.
‘இறந்துப் போகலாம் என்ற மன விரக்தியில் கடலுக்கு வந்த எனக்கே படகு கவிழும் சூழல் ஏற்பட்டபோது மனம் பதற்றமடைந்தது. ஆனால், இதையே தொழிலாக வைத்துக்கொண்டு தினம் தினம் போராடும் தங்களுக்கு பயமில்லையா?’ என்று மீனவனை பார்த்துக் கேட்டான்.
அதற்கு மீனவன் கூறினான், ‘என்னால் இந்த காற்றை, மழையை, கடல் அலைகளை கட்டுப்படுத்த முடியாது. ஆனால், என்னால் என்னுடைய படகை கட்டுப்படுத்த முடியும். தண்ணீரிலே விழுந்தால் என் மூச்சை கட்டுப்படுத்தி நீந்த முடியும். அதன் மூலமாக அந்த மோசமான சூழ்நிலையில் இருந்து தப்பிக்க முடியும்.
எனவே, நம்மால் கட்டுப்படுத்த முடிந்ததை சரியாக பயன்படுத்தினால் போதும். நம்மால் கட்டுப்படுத்த முடியாததை நினைத்து வருத்தப்பட தேவையில்லை’ என்று கூறினான். இதைப் புரிந்துக்கொண்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். முயற்சித்துப் பாருங்கள்.