ஒரு பிரபலமான பழமொழி உண்டு. ‘துஷ்டனைக் கண்டால் தூர விலகு’ என்று சொல்வார்கள். நாம் எவ்வளவு பெரிய பலசாலியாக இருந்தாலும் நமக்கு வரும் சில தேவையில்லாத பிரச்னைகளையும், நம் வாழ்வில் வரும் தேவையில்லாத நபர்களையும் விட்டு விலகியிருப்பதே நல்லதாகும். அதற்கு பேர் பயமில்லை புத்திசாலித்தனம். இதை தெளிவாகப் புரிந்துக் கொள்ள ஒரு குட்டிக் கதையை காண்போம்.
ஒரு அடர்ந்த காட்டில் அழகான யானை ஒன்று ஆற்றில் குளித்து முடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து சென்றுக் கொண்டிருந்தது. அப்படி போய்க்கொண்டிருந்த யானையின் எதிரே ஒரு அழுக்கான பன்றி சேற்றில் புரண்டு ஆட்டம் போட்டுவிட்டு மிகவும் அழுக்காக வந்துக் கொண்டிருந்தது.
இதைப் பார்த்த யானை நாமும் அழுக்காகிவிடக்கூடாது என்று அந்த பன்றி போவதற்கு வழிவிட்டு ஓரமாக ஒதுங்கி நின்றுக்கொண்டிருந்தது. ஆனால், இதைக் கவனித்த பன்றி அன்று காட்டில் இருந்த எல்லா விலங்குகளிடமும், ‘நான் எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா?அந்த யானையே நான் வருவதைப் பார்த்து பயந்து போய் ஓரமாக வழிவிட்டு நின்றுக்கொண்டிருந்தது’ என்று பெருமையாகக் கூறியது.
இப்போது அந்தக் காட்டில் இருந்த நிறைய விலங்குகள், ‘இது உண்மைதானா? எதற்காக ஒரு பன்றியைப் பார்த்து நீ பயந்து வழிவிட்டு நின்றாய்?' என்று கிண்டலாக யானையிடம் கேட்டது.
இதைக்கேட்ட யானை சிரித்துக் கொண்டே சொன்னது, ‘நான் நினைத்திருந்தால் அந்த பன்றியைக் காலால் மிதித்து நசுக்கியிருக்க முடியும். ஆனால், நான் அதை செய்யவில்லை. ஏனெனில், அந்த பன்றி மிகவும் அழுக்காக இருந்தது. நான் அதை மிதித்திருந்தால், நானும் அதனுடன் சேர்ந்து அசுத்தமாகியிருப்பேன். ஒருவர் பயந்து போவதற்கும், வேண்டாம் என்று ஒதுங்கிப் போவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது’ என்று யானைக் கூறியது.
இந்த கதையில் வந்ததுப்போலத்தான் புத்திசாலியான மக்கள் எப்போதுமே தவறான ஆட்களிடமிருந்து விலகியே தான் இருப்பார்கள். அப்படி விலகியிருப்பதற்கு பேர் பயமில்லை புத்திசாலித்தனமாகும். நீங்களும் உங்கள் வாழ்வில் வரும் தவறான சகவாசத்தில் இருந்து விலகி உங்கள் குறிக்கோளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். நிச்சயமாக வாழ்வில் வெற்றிப் பெறலாம். முயற்சித்துதான் பாருங்களேன்.