சில நேரங்களில் நாம் மற்றவர்கள் மீது அதிகப்படியான அன்பை வைத்து விடுகிறோம். ஆனால், அதற்கான சரியான அன்பு நமக்கு திரும்பி கிடைக்காவிட்டால் மிகவும் மனவருத்தம் அடைகிறோம். 'நாம் நேசித்தது போல அவர்கள் நம்மை நேசிக்கவில்லையே?' என்று தோன்றுவதுண்டு. அன்பைக் கொடுத்து அதற்கு பதில் திரும்ப அன்பை எதிர்ப்பார்ப்பது சரியா? இதைப் பற்றி சரியாக புரிந்துக்கொள்ள இந்தப் பதிவில் ஒரு குட்டிக் கதையை பார்ப்போம்.
ஒரு ஊரில் பாட்டி ஒருவர் இருந்தார். ஒருநாள் அவர் வீட்டிற்கு பக்கத்தில் உள்ள கோவில் மண்டபத்தில் சென்று அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இவருக்கு தெரிந்த ஒரு பெண் கைகளில் நிறைய பூக்கள் கொண்ட பூக்கூடையுடன் கோவிலுக்கு சென்றுக்கொண்டிருந்தார்.
அந்த பெண்மணியையே பாட்டி பார்த்துக் கொண்டிருந்தார். பாட்டிக்கு நன்றாக தெரிந்த பெண் தான். இருப்பினும், ஏதோ யோசனையிலேயே பாட்டியை கண்டுக்கொள்ளாமல் சென்றுவிட்டார். பிறகு பாட்டி அந்த பெண்ணின் பெயரை சத்தமாக கூப்பிட அப்போதுதான் அவருக்கு சுயநினைவு வந்ததுபபோல பாட்டியை பார்த்து கவனிக்காமல் சென்றதற்காக மன்னிப்பு கேட்டார்.
பாட்டி அந்த பெண்மணியிடம், 'அப்படி என்னதான் யோசனை உனக்கு? ஏன் உன் முகம் வாடியிருக்கிறது' என்று கேட்டார். அதற்கு அந்த பெண்ணோ அழுதுக்கொண்டே, 'நான் என் கணவன் மீது எவ்வளவு அன்புக்காட்டினாலும் அவர் அதில் பத்து சதவீதம் கூட திருப்பி செலுத்துவதில்லை. என்னுடைய நெருங்கிய தோழியும் சமீபகாலமாக என்னிடம் சரியாக பேசுவதில்லை. ஏன் என்று கேட்டதற்கு ஒன்றுமில்லை' என்று கூறிவிட்டனர் என்று வருத்தமாக கூறினார்.
இப்போது பாட்டி அந்த பெண்ணின் கைகளில் இருக்கும் கூடையை கவனிக்கிறார். 'அந்த கூடையில் இருக்கும் பூக்கள் உன் தோட்டத்தில் மலர்ந்ததா?' என்று கேட்கிறார். அதை கேட்டதும் அந்த பெண்மணியின் முகத்தில் ஒரே மகிழ்ச்சி. அந்த பூக்களை தானே பயிரிட்டு வளர்ப்பதாக கூறி மனம் மகிழ்ந்தார்.
அதேசமயம், அந்த மண்டம் வழியாக சென்ற இன்னொரு நபர் பாட்டிக்கு தெரிந்தவர்தான். பாட்டி பேச்சு சத்தத்தைக் கேட்டு அவரிடம் பேச வந்தார். அவரிடம் பேசிக்கொண்டிருந்த பாட்டி இந்த பெண்மணியின் கூடையிலிருந்த பூவில் ஒரு பூவை எடுத்து அந்த நபரிடம் கொடுத்தார். கொடுத்தது மட்டுமில்லாமல், அந்த நபரிடம் இந்த பெண்மணியே அந்த பூவை தோட்டத்தில் வைத்து வளர்த்ததாக கூறினார். அதைக்கேட்ட அந்த நபர், 'எதற்காக கஷ்டப்பட்டு தோட்டம் வைத்து பராமரித்து வளர்க்க வேண்டும். பூக்கடையில் இரண்டு பூக்கள் பத்து ரூபாய் என்று விற்கிறது' என்று கூறிவிட்டு சென்றார்.
இப்போது பாட்டி அந்த பெண்ணிடம், 'என்னம்மா! நீ எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த பூவை வளர்த்தாய்? ஆனால், அந்த நபரோ இப்படி பேசிவிட்டு போய்விட்டாரே!' என்று பாவமாக சொன்னார். அதற்கு அந்த பெண்மணி கோவப்படாமல் ஒரு பதிலைக் கூறினார், 'அதாவது தோட்டக்கலை என்பது மிகவும் சுவாரஸ்யமானது. சிலருக்கு அதனுடைய அருமை புரியும். சிலருக்கு அதனுடைய அருமை புரியாது. அதற்காக நாம் கோபப்பட முடியுமா? அவ்வளவுதான் அவர்களுக்கு தெரிந்தது' என்று கூறினார்.
இதைக் கேட்டதும் பாட்டி புன்முறுவலுடன் கூறினார். எப்படி தோட்டக்கலையைப் பற்றி தெரியாத நபருக்கு ரோஜாவின் அருமையைப்பற்றி தெரியாதோ? அதேப்போலதான் அன்பு என்னும் அருமருந்தின் அருமை தெரியாதவருக்கு எவ்வளவுதான் அன்பைக் கொட்டிக்கொடுத்தாலும் அதன் மதிப்பு தெரியாது. அன்பின் அருமை தெரியாதவரிடம் அதைக்காட்டுவது கூட தவறில்லை. ஆனால், அதற்கான பலனை எதிர்ப்பார்ப்பதுதான் தவறு என்று அறிவுரைக் கூறினார்.
இந்தக் கதையில் வருவதுபோலத்தான் நாமும் மற்றவர்களிடம் அன்பை காட்டிவிட்டு அதற்கான பலனை எதிர்ப்பார்க்கும்போது அன்பிற்கு பதில் கசப்பு, வெறுப்பு இதெல்லாம் கிடைத்ததால் வெறுத்துப் போயிருப்போம். யாருக்கு அதனுடைய அருமை புரிகிறதோ அவர்களால் தானே அந்த அன்பை திருப்பி செலுத்த முடியும். எப்படி உங்கள் அன்பை நிராகரிக்க ஒரு இடமிருந்ததோ அதுபோல உங்கள் அன்பு ஏற்றுக்கொள்ளப்படவும் ஒரு இடம் இருக்கும். அதுவரை பொறுமையாக காத்திருங்கள்.