

பொதுவாகவே, நமது அன்றாட வாழ்க்கையில் தினசரி பலதரப்பட்ட நபர்களோடு பேசிப் பழகி வருகிறோம். அப்படிப் பழகும் சிலரை 'நல்லவர்' என நினைத்துப் பழகுவோம்; சிலரைத் தவறான பாதையில் செல்பவர் என நினைத்து விலகுவோம். ஆனால், நமது கணிப்புகள் சில சமயங்களில் பொய்யாகப் போகவும் வாய்ப்புகள் உண்டு.
எவ்வளவுதான் நல்லவர்கள் போலப் பழகினாலும், நாம் வெகுளித்தனமாக அனைத்து விஷயங்களையும் யாரிடமும் பகிர்ந்து கொள்ளக் கூடாது. காலம் வெகுவாக மாறி வருகிறது. ஆகையால், நாம் பழகும்போதே யார் யார் எப்படிப்பட்டவர்கள் என 'பில்டர்' போட்டுப் பார்த்துப் பழக வேண்டும். அந்த வகையில், கீழே குறிப்பிட்டுள்ள குணங்களைக் கொண்ட நபர்களிடம் நாம் ஜாக்கிரதையாக (beware-of-toxic-people-in-life) இருப்பது நல்லது.
தம்பட்டம் அடிக்கும் நபர்கள்: "தன்னுடைய வார்த்தையைத்தான் அனைவரும் கேட்க வேண்டும்; தான் சொல்வதே நியாயம்; தனக்குத்தான் எல்லாம் தெரியும்; எனக்கு அவரைத் தெரியும், இவரைத் தெரியும்; என் அனுபவத்தில், என்னுடைய வயதிற்கு நான் எத்தனை நபர்களைப் பார்த்திருக்கிறேன் தெரியுமா?" எனத் தம்பட்டம் அடிக்கும் நபர்களிடம் எப்போதும் ஒரு கவனம் தேவை!
நயவஞ்சகப் புத்தியுடையவர்கள்: தான் செய்த தவறை மறைத்து, அடுத்தவர் மீது பழியைப் போட்டு, சந்தர்ப்பத்திற்குத் தகுந்தாற்போலச் சுயநலமாகப் பழகுபவர்கள். நமது பலவீனங்களைத் தெரிந்து கொண்டு, அதற்குத் தகுந்தாற்போல "பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்" என்ற வகையில் நயவஞ்சகமாய் நடமாடும் நபர்களிடம் ஜாக்கிரதையாகவும், முன்யோசனையுடனும் பழகுவதே நல்லது.
முதுகிற்குப் பின்னால் பேசுபவர்கள்: நம்முடன் பழகும்போது நல்லவர் போல நடித்து, "உங்களைப் போல் உண்டா? நான் உங்களைத்தான் ரோல் மாடலாக (Role Model) வைத்துள்ளேன். உங்களைப் போன்ற நண்பர் கிடைத்தது எனக்குப் பெரிய பாக்கியம். இத்தனை நாளாக உங்களை மிஸ் செய்துவிட்டேனே!" என நண்பர்கள் மத்தியில் உங்களைப் புகழ்ந்து தள்ளிவிட்டு, நீங்கள் அங்கிருந்து புறப்பட்ட பிறகு, உங்கள் முதுகிற்குப் பின்னால் புறம் பேசும் நபர்களிடம் மிகவும் ஜாக்கிரதையாக இருங்கள். இவர்களிடம் பழகாமல் கொஞ்சம் விலகி இருப்பதே மிக மிக நல்லது.
குடும்ப விஷயத்தில் தலையிடும் சந்தர்ப்ப 'வியாதிகள்': தேவையில்லாமல் நமது குடும்ப விஷயத்தில் தலையிட்டு, "ஆலோசனை சொல்கிறேன்" என்ற பேரில் தேவையில்லாத சங்கடங்களை ஏற்படுத்துபவர்கள். நமக்கு நல்லது சொல்வது போல நடித்து, எதிர்மறையான விஷயங்களை நம் மனதில் விதைத்து மூளைச்சலவை செய்பவர்கள். நமது சிரமங்களைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு, குடும்பத்தில் பிரிவினையை ஏற்படுத்தி, அதில் குளிர்காய நினைக்கும் இவர்களை 'சந்தர்ப்பவாதி' என்பதை விட 'சந்தர்ப்ப வியாதிகள்' என்றுதான் சொல்ல வேண்டும். இவர்களிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இதுபோன்ற நச்சுத்தன்மை வாய்ந்த நபர்களை நம் வீட்டு வரவேற்பறையோடு நிறுத்திவிடுவது நமக்கும், நமது குடும்பத்திற்கும் நல்லது. இத்தகைய சூழல்களில் நாமும் விழிப்புணர்வோடு இருந்து, "பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்" என்ற நிலைப்பாட்டில் இருக்கும் நபர்களைக் கண்டறிந்து விலகி வாழ்வதே நமக்குப் பாதுகாப்பானது!