
ஒவ்வொருவரும் தங்கள் தொழில் சார்ந்த வாழ்வில் வெற்றியடையவே விரும்புவர். ஆனால் எத்தனை கடினமாகவும் அர்ப்பணிப்புடனும் பணி புரிந்தாலும் சிலருக்கு அது சாத்தியப்படாது. காரணம் அவர்களிடம் உள்ள சில கெட்ட பழக்கங்களேயாகும். அவை வெற்றி வாய்ப்பைத் தராததுடன் வேலை இழக்கவும் காரணமாகிவிடும். அவ்வாறான ஐந்து கெட்ட பழக்கங்கள் என்னென்ன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
1.உங்களிடம் கொடுக்கப்படும் ஒவ்வொரு வேலைக்கும், அதை செய்து முடிக்க ஒரு குறிப்பிட்ட நேர அளவும் நிர்ணயம் செய்து தரப்பட்டிருக்கும். ஒவ்வொரு வேலையையும் செய்து முடிக்க நீங்கள் நிர்ணயம் செய்ததைவிட அதிக நேரம் எடுத்துக்கொள்ளும்போது உங்க பாஸ் உங்களை, "நேர மேலாண்மையில் இவன் தகுதியற்றவன். இவனை நம்பி வேலையை ஒப்படைப்பது பிரயோஜனமற்ற செயல்" என்றெண்ணி அடுத்தமுறை வரும் ப்ராஜெக்ட்டை வேறொரு டீமிடம் ஒப்படைப்பார். நாளடைவில் உங்களின் இந்தச்செயல் பந்தயத்தில் உங்களைப் பின்னுக்குத் தள்ளவும், வேலையிழக்கக் காரணமாகவும் ஆகிவிடும்.
2.வேலை செய்யுமிடத்தில் பலருடன் தொடர்பு கொண்டு உரையாட வேண்டிய அவசியம் ஏற்படும். அதற்கு உங்கள் மனதில் உள்ள எண்ணங்களை தெளிவாகவும், வெளிப்படையாகவும், பயனுள்ள முறையிலும் மற்றவரிடம் கூறுவதற்கு ஒரு தனித்திறமை (Communication skill) வேண்டும். உங்களிடம் இத்திறமையில் குறைபாடு இருக்கும்போது உங்களால் உங்கள் குழு உறுப்பினர்களுடன் சகஜமாக உரையாட இயலாது. இக்குறையை நீக்க நீங்கள் மற்றவர்கள் பேசுவதை உன்னிப்பாக கவனிக்கவும், யோசித்துப் பேசவும், சந்தேகங்களை கேட்டுத் தெளிவுறவும் முயற்சிப்பது அவசியம். அது இல்லாதபோது நீங்கள் வேலை இழக்கும் வாய்ப்பு உருவாகும்.
3.எப்பொழுதும் எதிர்மறை எண்ணங்களையே மனதில் வைத்துக்கொண்டு உங்கள் வேலை, கம்பெனியின் கொள்கைகள், உடன் பணிபுரிபவர்களின் தனிப்பட்ட குணாதிசயங்கள் போன்றவற்றை விமர்சிப்பது, வதந்தி பரப்புதல், குறை காணுதல் போன்ற செயல்களில் நீங்கள் ஈடுபடும்போது முதலாளிக்கு உங்கள் மீதுள்ள நல்லெண்ணம் மறையும். உங்கள் சுய வளர்ச்சி தடைபடும். எனவே, பணிபுரியுமிடத்தில் நேர்மறை எண்ணங்களோடும் வளர்ச்சிக்காக உழைக்கும் மனோபாவத்துடனும் செயல்படுவது மிக அவசியம்.
4.உங்கள் பாஸ் உங்களிடமிருந்து கடின உழைப்பையும் அதிகளவு உற்பத்தித் திறனை மட்டுமே எதிர்பார்ப்பார். தொடர்ந்து வேலையில் எந்தவித முன்னேற்றமும் காட்டாமல், உங்கள் சொந்த வேலைகள், சோசியல் மீடியா போன்றவற்றில் நீங்கள் கவனம் செலுத்தும்போது அது உங்கள் முதலாளியை எரிச்சலடையச் செய்யும். பின் உங்களை வேலையிலிருந்து நீக்கவும் காரணமாகிவிடும்.
5.மாறிவரும் தற்போதைய சூழலில் பணியாளர்கள் எப்பொழுதும் சவால்களை சந்திக்கவும், மாற்றங்களை ஏற்றுக்கொள்ளவும் தன்னை தயார்ப்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதைப்பற்றி ஆரோக்கியமான கருத்துக்களை தெரிவிக்கவும் அவர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை நிர்வாகம் பிரச்னை பண்ணக்கூடியவர்கள், முன்னேற்றத்திற்கு உதவாதவர்கள் என முடிவெடுத்து அவர்களை வேலையிலிருந்து நீக்கவும் தயாராகிவிடுவார்கள்.