
யாருடனும் யாரையும் ஒப்பிடாதீர்கள். ஒவ்வொருவருக்கும் தனித்துவமான திறமைகளும், அனுபவங்களும் உண்டு. வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒரு சிறப்பம்சம் இருக்கத்தான் செய்கிறது. அவரவருக்கு என்று ஒரு தனித்தன்மை உள்ளது. அதை உணர்ந்து அதை வளர்க்க வேண்டுமே தவிர மற்றவர்களுடன் ஒப்பிடுவது தவறு.
உதாரணத்திற்கு நம் குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டு பார்ப்பதோ, பேசுவதோ அவர்களின் தன்னம்பிக்கையை குறைக்கும். அத்துடன் அவர்களின் எதிர்காலத்திற்கு தீங்கும் விளைவிக்கும். அவர்களின் தனித்துவத்தையும் மதிப்பையும் இழந்து விடுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
நம்முடைய திறமைகளை வளர்த்துக்கொண்டு நாம் அடைய நினைக்கும் இலக்குகளை அடைய கவனம் செலுத்தி முன்னேறுவதே சிறந்தது. மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பார்ப்பதை விட, அவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைத்துக் கொள்வார்கள் என்று எண்ணுவதைவிட முன்னோக்கி செல்வது சிறந்தது. பொதுவாகவே நாம் நம்மை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்த்துக்கொண்டே இருப்போம். அதனால் தான் தேவையில்லாத மன உளைச்சல், கவலைகள் ஏற்படுகின்றன.
நம்மால் அவரைப்போல் இருக்க முடியவில்லையே என்ற எண்ணம் ஏற்படுவது தவறு. காரணம் அவர்களுடைய சூழலும், வழிகாட்டுதலும் நம்முடைய சூழலிலிருந்து வேறுபட்டு இருக்கலாம். யாரும் யாருக்கும் குறைந்தவர் இல்லை. மற்றவர்கள் நம்மை விட ஒருபடி மேலோ ஒருபடி கீழோ இருக்கிறார்கள் என்றால் அதற்கு அவர்களுடைய குடும்ப சூழலும், முன்னேறுவதற்கான வாய்ப்புகளும் வேறுபடலாம்.
ஒப்பிடும்பொழுது தேவையில்லாமல் மற்றவருக்கு உயர்ந்த அந்தஸ்தை வழங்குகிறோம். அத்துடன் நம்மையும் தாழ்த்திக் கொள்கிறோம். இதனால் நம்முடைய தன்னம்பிக்கை குறைந்து எதிலும் முழு ஈடுபாடுடன் செயல்பட முடியாமல் போய்விடும்.
எப்பொழுதுமே மற்றவர்களுடன் நம்மை ஒப்பிட்டு பார்க்காமல் நம்முடைய இயல்பை, சுயத்தை ஏற்றுக் கொள்வது முக்கியம். நமக்கென்று இருக்கும் தனித்துவமான பண்புகளை வளர்த்துக்கொண்டு சமூகத்தில் முக்கியத்துவத்தை பெறலாம். நம்மால் முடியும் என்ற நம்பிக்கையை நமக்குள் விதைத்துக்கொள்வது நம்மை முன்னேற்ற பாதையில் அழைத்துச்செல்லும். மற்றவருடன் போட்டி போட்டு அவர்களைப்போல் காப்பி அடிப்பது நம் வேலை இல்லை என்பதை உணரவேண்டும்.
நமக்கிருக்கும் தனித்திறமைகளைக் கொண்டு சாதனை புரிய முயற்சிக்க வேண்டுமே தவிர மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்ப்பது கூடாது. மற்றவர்களுடன் ஒப்பிடுவதால் நம் நேரம்தான் வீணாகும். இதனால் வாழ்க்கையில் ஒருபோதும் நம்மால் அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கிச் செல்ல முடியாது.
நம்முடைய கனவுகளை எட்டவும், குறிக்கோள்களை அடையவும் நம் வழியிலேயே பயணிப்பதுதான் நல்லது. ஒருவருக்கு கிடைக்காத ஒன்று மற்றவருக்கு கிடைத்திருக்கலாம். எனவே ஒவ்வொருவரும் தனக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி வாழ்வில் மகிழ்ச்சியுடன் முன்னோக்கி நகர வேண்டியதுதான்.
ஒருவரை பார்க்கும்பொழுது நம்மால் இவரைப்போல் இருக்க முடியவில்லையே என்று நினைத்தால் நம் வாழ்க்கையை ரசிக்க முடியாது. எனவே யாருடனும் யாரையும் ஒப்பிடாமல் இருப்போமா?