
ஒரு மனிதன் வெற்றி அடைவதற்கான காரணங்களை ஆராய்வதைவிட அவன் விரும்பிய வெற்றியை அவன் அடையாமல் போனதற்கான காரணங்களை ஆராய்ந்தால் மற்றவர்கள் அதே தவறுகளைச் செய்து நேரத்தை வீணாக்காமல் இருப்பார்கள் இல்லையா? இது ஒரு வகையில் 'போஸ்ட் மார்டம்' போல்தான். நிகழ்வுகளை ஆராயும் போதுதான் தவறு எங்கே நிகழ்ந்தது என்று தெரியும். அது அந்த தவறு மீண்டும் நிகழாமல் இருக்க உதவும். வெற்றி என்ற இலக்கைத் தொட நினைக்கும் ஒவ்வொரு மனிதரும் செய்ய வேண்டிய செயல் இது.
நாம் நினைத்ததை, நாம் விரும்பியதை அடையவிடாமல் தடுக்கும் சக்திகள் அனைத்துமே வெளியிலிருந்து வருபவை அல்ல. அவைகளில் சில நம்மிடமே உள்ளன. பல நேரங்களில் நமக்கு நாமே எதிரிகளாக இருக்கிறோம். நம்முடைய சில இறைவனால் படைக்கப்பட்ட மனிதர்கள் அனைவரிடமும் அனைத்துக் குணங்களும் இருக்கும் என்பது உண்மை.
என்ன ஒரு சிலருக்கு சிலகுணங்கள் சற்றே அதிகமாகவும் சிலருக்கு அதே குணம் சற்றே குறைவாகவும் இருக்கும். அளவுகளிலும் குணங்களின் தன்மைகளிலும்தான் வேறுபாடே தவிற மற்றபடி எல்லாரிடமும் எல்லா குணங்களும் உண்டு. வெற்றி அடைய வேண்டுமென்றால் நம்மை நாமே அலசிப் பார்த்து நம்முடைய குணங்களைப் பற்றி நமக்குள்ளேயே ஒரு பட்டி மன்றம் நடத்தி கடைசியில் நமக்கு சரியென்று தோன்றுவதைச் செய்ய வேண்டும்.
இலக்கை அடையும் லட்சியம் உள்ள ஒரு மனிதர் எக்காரணத்தைக் கொண்டும் நத்தையைப்போல் சுருங்கி போகக்கூடாது. இந்த மாதிரி சுருங்குபவர்களால் எதையும் சாதிக்க முடியாது. எதிர்ப்பு வரும்போது நாம் இன்னும் பலமாக கால் ஊன்றி நிற்க வேண்டுமே தவிர அதைக் கண்டு அஞ்சி ஓடி ஒளியக்கூடாது.
வெற்றிக் கனி சுலபமாக நம் கையில் தானாக வந்து வீழ்ந்து விடாது. அதற்காகக் கடினமாக உழைக்க வேண்டும். சமயோசித புத்தி வேண்டும். அதோடு தைரியமும் துணிச்சலும் நிறையவே வேண்டும். தைரியம் என்பது ஒரு செயலைத் தன்னளவில் செய்வது. துணிச்சல் என்பது அதையும்தாண்டி மற்றவர்களிடம் நேருக்கு நேர் மோதுவது. தைரியம் இருக்கும் அனைவரிடமும் துணிச்சல் இருக்காது.
திறமை மட்டும் வெற்றி அடைய போதாது. சிலரிடம் அபாரமான திறமை இருக்கும். ஆனால் அவர்கள் கோழைகளாக எதிர்ப்பவர்களை ஏமாற்றுபவர்களை சமாளிக்கும் தைரியம் இல்லாதவர்களாக இருப்பார்கள். எனவே திறமை சாலிகளிடம் தைரியம் துணிச்சல் இரண்டும் வேண்டும். இந்த இரண்டும் இருந்தால் வெற்றி என்பது கைக்கெட்டும் தூரத்தில்தான் இருக்கும். சும்மா அப்படி கையை லேசாகத் தூக்கினாலே போதும் வெற்றிக் கனியைப் பறித்துவிடலாம். எண்ணுங்கள்! துணியுங்கள்! வெற்றி பெறுங்கள்!