
தற்காலத்தில் அனுபவம் மிக்கவர்கள் கூறும் அறிவுரைகளை யாரும் ஏற்கத் தயாராக இல்லை. மேலும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் இடையே நடைபெற்ற ஆரோக்கியமான உரையாடல்கள் வெகுவாகக் குறைந்துபோய்விட்டன. எல்லாம் எனக்குத்தெரியும் என்ற மனோபாவமும், காலச்சூழலும் டிஜிட்டல் வாழ்க்கையும் இத்தகைய உரையாடல்களை வெகுவாகக் குறைத்துவிட்டன எனலாம்.
நாற்பது வருடங்களுக்கு முன்னால் அக்கம்பக்கத்தவர்கள் ஒன்று கூடி ஓய்வு நேரங்களில் ஓரிடத்தில் அமர்ந்து தினமும் ஒரு மணிநேரமாவது பேசி மகிழ்வர். ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் நடைபெற்ற சுவாரசியமான நிகழ்வுகளை அனுபவங்களை அக்கம்பக்கத்தவர்களிடம் பகிர்ந்து மகிழ்வர். அதில் சிலர் தினமும் சொன்னதையே திரும்பத்திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.
ஆனால் அது கேட்பவருக்குத் தெரிந்த விஷயமே என்றாலும் எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது. உரையாடல் என்பது மனதிற்கு மகிழ்ச்சியையும் புத்துணர்வையும் தரும் ஒரு மகத்தான விஷயம். ஆனால் தற்காலத்தில் உரையாடல் என்பது சுயநலம் சார்ந்த ஒரு விஷயமாக மாறிப்போய்விட்டது பெரும் சோகம்.
நம்மில் பலர் பிறரிடம் தமக்கு ஏதாவது ஒரு காரியம் ஆகவேண்டும் என்றால் வலிய வந்து பேசுபவராக இருக்கின்றனர். அந்த காரியம் அவரால் முடிந்ததும் அவரிடம் பேசுவதைத் தவிர்ப்பர். மேலும் தற்காலத்தில் விளையாட்டுக்காக ஏதாவது பேசினாலும் அதை மிகவும் சீரியசாக எடுத்துக்கொண்டு எதிர்வினையாற்றுவதை நாம் பார்க்க நேரிடுகிறது. இது மிகவும் சிக்கலான பிரச்சினையும் கூட. இதனாலேயே பலர் தேவையின்றிப் பேசுவதைத் தவிர்க்கின்றனர்.
தற்கால இளைஞர்கள் உரையாடலையும் அறிவுரைகளையும் விரும்புவதே இல்லை. கையில் எப்போதும் மொபைல் போனுடன் வலம் வருகின்றனர். வாட்ஸ்அப் சாட்டிங், ஃபேஸ்புக் சாட்டிங் என வாழ்க்கையே சாட்டிங்கிற்குள் அடங்கிவிடுகிறது. அறிவுரைகளைக் கூறினால் உடனே ஏதாவது ஒரு காரணத்தைச்சொல்லி நகர்ந்து விடுகின்றனர். சிலரோ முகத்திற்கு நேராக எனக்கு உங்கள் அறிவுரை தேவையில்லை என்று கூறிவிடுகின்றனர்.
வீட்டிற்கு வரும் உறவினர்கள் நண்பர்களிடம் கூட உரையாடி மகிழ்வது தற்காலத்தில் குறைந்து போய் விட்டது. தொலைக்காட்சி மீது வைத்திருக்கும் பாசத்தில் சிறிதளவாவது வீட்டிற்கு வரும் உறவினர்கள் நண்பர்களிடம் காட்டலாம். ஆனால் அதில் பலருக்கு விருப்பமில்லை.
வாழ்க்கை விரிவடைந்துவிட்டது. வசதிகள் பெருகிவிட்டன. எதையும் இணையத்தின் மூலமாக வாங்கிவிடலாம் என்ற நிலையும் ஏற்பட்டு விட்டது. பேரம் பேசுதல் என்பதும் ஒரு உரையாடல் கலைதான். ஒரு பொருளை தொடர்ந்து பேரம் பேசி விலை குறைத்து வாங்கினால் அதில் ஒரு மகிழ்ச்சி ஏற்படும். ஆனால் தற்கால கணினி யுகத்தில் பேரம் பேசுதலும் குறைந்து கொண்டே வருகிறது.
அதிகம் பேசுவதும் தவறு. பேசாமல் இருப்பதும் தவறு. தேவையான சமயத்தில் தேவையான விஷயத்தை சுருக்கமாக அளந்து பேசுவதையே தற்காலச் சந்ததியினர் விரும்புகின்றனர். நாம் பேசுவதை யாரும் கேட்கத் தயாரில்லாத போது நாம் ஏன் வீணாகப்பேசி மனஉளைச்சலுக்கு ஆளாக வேண்டும். பேசிப் பேசி பழகியவர்களால் பேசாமல் இருக்கமுடியாது. இதன் காரணமாகவே சிலர் பிறருக்கு பிடிக்கிறதோ இல்லையோ எதையாவது பேசிக்கொண்டே இருக்கின்றனர். பிறருடைய வெறுப்பிற்கும் ஆளாகின்றனர்.
தற்கால சூழலில் பேச்சைக் குறைப்பது பல பிரச்னைகளைத் தவிர்க்கிறது. உங்கள் அமைதி பிறருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது என்றால் நீங்கள் அமைதியாக இருப்பதுதான் உங்களுக்கும் நல்லது. பிறருக்கும் நல்லது. அதிகம் பேசுபவர்களைவிட அளந்து பேசுபவர்களைத்தான் பலருக்கும் பிடிக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டிய தருணம் இது.