

இந்த உலகத்துல ப்ரூஸ் லீயை தெரியாதவங்க யாரும் இருக்க முடியாது. சின்ன வயசுல நம்ம எல்லாரும் கண்ணாடி முன்னாடி நின்னு "வவவ்வாவ்"னு கத்தி, மூக்கைத் தொடைச்சுக்கிட்டு ப்ரூஸ் லீ மாதிரி சீன் போட்டிருப்போம். ஆனா, அவர் வெறும் ஒரு சண்டைக்காரர் மட்டும் கிடையாதுங்க, அவர் ஒரு பெரிய தத்துவவாதி. அவர் சொன்ன விஷயங்களை மட்டும் நம்ம வாழ்க்கையில கடைப்பிடிச்சா, நம்மளை யாராலயும் அசைச்சுக்க முடியாது.
தண்ணீர் போல இருங்கள்! (Be Water, My Friend)
ப்ரூஸ் லீயோட ரொம்ப ஃபேமஸான டயலாக் ஒண்ணு இருக்கு, "Be water, my friend" (தண்ணீர் போல இரு நண்பா). தண்ணிய ஒரு கப்புல ஊத்தினா அது கப்பு மாதிரி வடிவம் எடுக்கும், பாட்டிலுல ஊத்தினா பாட்டில் மாதிரி மாறும். அது ஓடும், வளையும், சில சமயம் பாறையையே உடைக்கிற வேகத்துல பாயும்.
நம்ம வாழ்க்கையும் அப்படித்தான் இருக்கணும். கஷ்டம் வரும்போது உடைஞ்சு போகாம, அந்த சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி நம்மளை மாத்திக்கிட்டு, தண்ணி மாதிரி வளைஞ்சு நெளிஞ்சு ஓடிக்கிட்டே இருக்கணும். இலக்கை நோக்கிப் போறப்போ தடையே வந்தாலும், அதைத் தாண்டிப் போற வழி தண்ணிக்குத் தெரியும். அதே மாதிரி நமக்கும் தெரியணும். இதுதான் சாதிக்க நினைக்கிறவனுக்கு இருக்க வேண்டிய முதல் தகுதி.
நம்மல்ல பல பேரு புதுசா ஜிம்முக்குச் சேருவோம், இல்ல ஒரு கிளாஸ் போவோம். ஒரு வாரம் போவோம், அப்புறம் "இன்னைக்கு மழை பெய்யுது", "இன்னைக்கு டயர்டா இருக்கு"னு லீவு போட்ருவோம். ஆனா ப்ரூஸ் லீ அப்படி இல்ல. அவர் தினமும் காலையில 4 மணிக்கு எழுந்துருவாராம்! எழுந்து சும்மா காபி குடிச்சுட்டு உக்கார மாட்டார், தொடர்ந்து 3 மணி நேரம் வெறித்தனமா உடற்பயிற்சி செய்வாராம்.
நமக்கு ஒரு விஷயம் கத்துக்க ஆரம்பிச்சா, அதோட பேசிக்ஸ் தெரிஞ்ச உடனே, "எனக்கு எல்லாம் தெரியும்"னு நினைச்சுப்போம். ஆனா ப்ரூஸ் லீ, ஆரம்பத்துல என்ன கத்துக்கிட்டாரோ, அதை சாகுற வரைக்கும் விடாம பிராக்டிஸ் பண்ணுவாரு. இதுதான் வெற்றியாளர்களுக்கும் சாதாரண ஆட்களுக்கும் உள்ள வித்தியாசம்.
இது ப்ரூஸ் லீ சொன்னதுலையே எனக்கு ரொம்பப் பிடிச்ச விஷயம். "10,000 விதமான கிக்குகளை (Kicks) தெரிஞ்சு வச்சிருக்கறவனைப் பார்த்து நான் பயப்பட மாட்டேன். ஆனா, ஒரே ஒரு கிக்கை 10,000 தடவை பயிற்சி செஞ்சவனைப் பார்த்தா எனக்கு பயம்"னு சொல்வார்.
இதோட அர்த்தம் என்னன்னா, அரைகுறையா ஆயிரம் விஷயங்களைத் தெரிஞ்சு வச்சிருக்கிறத விட, ஒரே ஒரு விஷயத்தை முழுசா, ஆழமாத் தெரிஞ்சு வச்சிருக்கிறதுதான் உண்மையான பலம். நீங்க ஒரு வேலையைச் செய்யுறீங்கன்னா, அதுல உங்களை அடிச்சுக்க ஆளே இல்லாத அளவுக்கு எக்ஸ்பெர்ட் ஆகணும். அதுக்குத் தேவை தொடர் பயிற்சி. ஒரு நாள் செஞ்சுட்டு விடுறது இல்ல, தினமும் செய்யணும்.
நிறைய பேர் ப்ரூஸ் லீ உடம்பை மட்டும் ஏத்துனாருனு நினைப்பாங்க. அதுதான் இல்ல. அவர் உடம்புக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தாரோ, அதே அளவு மூளைக்கும் கொடுத்தாரு. தினமும் குறைஞ்சது ஒரு மணி நேரமாவது புத்தகங்கள் படிப்பாராம். அதுவும் கதை புக் இல்ல, தத்துவம், அறிவியல், உடல் இயங்கியல் சம்பந்தப்பட்ட புத்தகங்கள்.
தன்னோட சண்டைக் கலைக்கு வேற என்னென்ன விஷயங்கள் உதவும்னு தேடித் தேடிப் படிப்பாரு. அதாவது, தன்னோட அறிவை வளர்த்துக்கிட்டே இருந்தாரு. "நான் தான் பெரிய ஆள்"னு தலைகனம் இல்லாம, "இன்னும் கத்துக்க நிறைய இருக்கு"ங்கிற மனநிலை அவர்கிட்ட இருந்தது. இதுதான் அவரை ஒரு லெஜண்டா மாத்துச்சு.