மனச் சுமையை இறக்கி வைக்க ஓர் எளிய பயிற்சி: கலங்கிய குட்டை தரும் பாடம்!

Buddha advice tamil motivation
Buddha advicecredit AI Image
Published on

"மனது சங்கடமாக உள்ளது; மனதே சரியில்லை; மனதிற்கு என்ன வந்ததோ தெரியவில்லை; மனதிற்கு எதுவுமே பிடிக்கவில்லை; மனதிற்குள் ஏதோ இனம்புரியாத சுமை; மனசு தெளிவாகவே இல்லை!"

நம்மிடம் இருப்பது ஒரே ஒரு மனம்தான். ஆனால் நமது செயல்பாடுகளால் அது எத்தனை விதமான போராட்டங்களில் சிக்கித் தவிக்கிறது! எனவே, அத்தகைய சமயங்களில் நமது மனமானது ஒரு நிலைப்பாட்டிற்கு வரவேண்டும். "மனமே ரிலாக்ஸ்" என்பது போல மனதை ஒரு வழியாக அமைதிப்படுத்துங்கள். கலங்கிய நீரோடை தெளிய வேண்டும்; அது நமது கையில்தான் உள்ளது.

புத்தரின் வாழ்வில் ஒரு நிகழ்வு:

ஒருமுறை புத்தர் தனது சீடர்களுடன் வெளியூர்ப் பயணம் மேற்கொண்டார். சீடர்களும் அவரது நல்லறிவுரைகளைக் கேட்டவாறே பின்தொடர்ந்தார்கள். களைப்பு மிகுதியால் ஒரு மரத்தடியில் அவர்கள் தங்கினார்கள். அதன் அருகில் நீர் நிரம்பிய குளம் ஒன்று இருந்தது. அப்போது ஒரு சீடனை அழைத்து, "குடத்தில் தண்ணீர் கொண்டு வா" என்றார் புத்தர்.

சீடனும் குடத்துடன் குளத்திற்குப் போனான். அவன் தண்ணீரைப் பிடிக்கச் சென்றபோது, ஒருவன் தான் ஓட்டி வந்த மாட்டினை குளத்தில் இறக்கிக் குளிப்பாட்டினான். இதனால் குளத்து நீர் கலங்கிப் போயிருந்தது. அந்த அழுக்கு நீரை எடுத்து வராமல், சீடன் வெறும் குடத்துடன் திரும்பி வந்து நடந்த விஷயத்தைக் கூறினான்.

புத்தரும் அமைதியாக, "சரி, ஒரு மணி நேரம் கழித்துச் சென்று தண்ணீர் எடுத்து வரலாம்" என்றார்.

அதேபோல சீடன் மீண்டும் தண்ணீர் எடுக்கச் சென்றான். இப்போது தண்ணீர் கலங்காமல், தூய்மையாகத் தெளிந்து இருந்தது. அதை குடத்தில் நிரப்பி எடுத்து வந்தான். புத்தர் உடனே அனைவரையும் பார்த்து அறிவுரை (Buddha advice) கூறினார்:

"பார்த்தீர்களா சீடர்களே! முதலில் தண்ணீர் கலங்கி இருந்ததால் குழப்பமாக இருந்தது. அதையே ஒரு மணி நேரம் விட்டுவிட்டதால், அமைதியாகித் தெளிவாகக் கிடைத்தது. இதேபோலத்தான் மனித மனம் சஞ்சலம் அடையும்போது குழப்பம் வரும். அமைதியாக இருந்தாலே மனதானது மெல்ல மெல்லத் தெளிவாகிவிடும்."

மனம் பல வகையில் சஞ்சலம் அடையும்போது அமைதியாக இருப்பதே நல்லது. மனதில் பலவித சிந்தனைகள் வந்து குழம்பி இருக்கும் நிலையில் இறைவழிபாடு மேற்கொண்டு, கோபதாபங்களைக் குறைத்து, அநாவசியமான பேச்சுகளைத் தவிர்த்து, நேர்மறை சிந்தனையோடு மனதை அமைதிப்படுத்த வேண்டும். நல்ல எண்ணங்களைக் கடைப்பிடித்து வாழ்ந்து வந்தாலே அனைத்தும் சிறப்பாக அமையும்.

இதையும் படியுங்கள்:
வாழ்க்கையை எதிர்கொள்ள உதவும் 'பரமபதம்' தத்துவம்!
Buddha advice tamil motivation

"கண் போன போக்கில் கால் போகலாமா? மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?"

மனம் போன போக்கில் மனிதன் போகாமல் இருந்தாலே மனம் 'ரிலாக்ஸ்' ஆக இருக்கும். மனித மனம் ஒரு குரங்கு; அதைத் தாவ விடாமல் பார்த்துக் கொள்வது நமது கையில்தான் என்பதை உணர்வோமாக!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com