
உங்கள் வாழ்வில் நிகழ்கின்ற சம்பவங்களுக்கு நீங்கள் அளிக்கும் செயல்விடைதான் புதிய அனுபவத்தைப் பெறுவதற்கான சிறந்த வழியாகும். காரணமும் அதன் விளைவும் என்ற இயற்கை விதிப்படி நீங்கள் அளிக்கும் புதிய செயல்விடை புதிய விளைவுகளை உருவாக்கும். உங்களுக்கு நிகழ்கின்ற எல்லாமே மிகச்சிறந்த நிகழ்வுகள் என்பதுபோல் நீங்கள் நடந்துகொள்ளும்போது, புதிய விளைவுகள் ஏற்படுகின்றன. அவை உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொண்டு வருகின்றன. மகிழ்ச்சிக்கான நேரடிப் பாதையைத் திறந்து விடுவதைப் போன்றது அது. இக்கொள்கை எப்படி வேலைசெய்கிறது என்று பார்ப்போம். நீங்கள் ஒரு நவீன காபி கடையை திறக்க விரும்புகிறீர்கள் என்றும், அதற்கு உங்களுக்கு 20 லட்ச ரூபாயாக வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். அவ்வளவு பணம் உங்கள் வங்கியில் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.
இப்போது கடைக்கான இடத்தை தேடத் தொடங்குவீர்கள். உங்களிடம் பல்வேறு நிலைகளில் வேலை செய்வதற்கு மக்களிடம் நேர்முகத் தேர்வு நடத்துவீர்கள். பிறகு கடைக்கான உபகரணங்களின் விலையை ஒப்பிடத் தொடங்குவீர்கள். கடை பெயர்ப் பலகை தயாரிப்பவர்களை தொடர்பு கொள்வீர்கள். வியாபாரத்தைத் தொடங்குவதற்கான அனைத்து விஷயங்களையும் நீங்கள் செய்வீர்கள்.
ஒருவேளை வங்கியில் அவ்வளவு பணம் இல்லை என்று வைத்துக் கொள்வோம். இப்போது தேவையான பணத்தை எப்படித் திரட்டுவது என்பதைப் பற்றி மட்டுமே யோசிப்பீர்கள். உங்களிடம் பணம் இல்லை என்ற உண்மை உங்களை முடங்கிப்போட்டு விடுகிறது. பணம் இல்லாதது உங்களை முடங்கிப் போட அனுமதிப்பதற்குப் பதிலாக, உங்களுக்குத் தேவையான பணம் கணக்கில் இருப்பது போல் நீங்கள் நினைத்தால் என்ன நிகழும் என்று நினைக்கிறீர்கள். பணம் இருந்தால் என்னவெல்லாம் செய்வீர்களோ, அவற்றையெல்லாம் நீங்கள் செய்யத் தொடங்குவீர்கள்.
இதன் மூலம் பணம் உங்களை வந்தடைவதற்கான சூழ்நிலையை உருவாக்குகிறீர்கள். உங்கள் கடையில் நீங்கள் நேர்முகத் தேர்வு செய்கின்றவர்களில் ஒருவர் உங்கள் கடையில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டக்கூடும். உங்கள் கடை அமைய விருக்கின்ற இடத்தின் சொந்தக்காரருக்கு உங்கள் வியாபார யோசனை பிடித்து அவரும் உங்கள் கடையில் முதலீடு செய்யக்கூடும்.
வாழ்க்கையின் இந்த அணுகுமுறை ஆராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இருந்துள்ளது.